படை வரிசை காட்டும்
பா.ஜ.க.வின் பரிதாப நிலை!
பாரதீய ஜனதா கட்சியின் நிலையை எண்ணினால் பரிதாபமாக இருக்கிறது. ஏதேதோ நாடகம் ஆடிப் பார்க்கிறது.
தமிழ்நாட்டில் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்வதற்காக வடநாட்டிலிருந்து பா.ஜ.க. பிரமுகர்களை இறக்குமதி செய்துள்ளது.
சாத்தூரில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்தபோது ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வந்திருக்கிறார்.
மதுரை தெற்கில் பா.ஜ.க. வேட்பாளர் ராம. சீனுவாசனுடன் வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்தபோது மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் சென்றுள்ளார்.
அதேபோல கோவை வடக்கில், வானதி சீனிவாசனுடன் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா சென்றுள்ளார்.சென்னை மயிலாப்பூரில் பிஜேபி வேட்பாளர் தமிழிசை உடன் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சென்றுள்ளார்.
எதற்காக இந்த ஏற்பாடுகள்? இதனால் என்ன பலன் ஏற்படப் போகிறது?
தமிழ்நாட்டு மக்களிடத்தில் பா.ஜ.க. என்பது தனிமைப் படுத்தப்பட்ட ஒரு நிலையில், ‘‘ஜப்பான் பாரு, ஜெர்மன் பாரு!’’ என்று சாலையோரத்தில் பயோஸ்கோப் காட்டிக் காசு வசூலிப்பதுபோல, தமிழ்நாட்டில் போனியாகாத பா.ஜ.க., ‘‘ஒன்றிய அமைச்சர்களைப் பாரீர்! முதலமைச்சர்களைப் பாரீர்!’’ என்று வேடிக்கைக் காட்சிபோல வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மற்றபடி பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்து தங்கி, புதுவை மாநிலத்திற்குச் சென்ற பொழுதுகூட, ஒரு வரவேற்போ, சாலையோர காட்சியோ (Road Show) கூட நடத்த முடியாத நிலைதான். அறையில் பிரதமருடன் உட்கார்ந்து ஆலோசனை நடத்தினார்கள் என்பது மட்டும் ஒரு செய்தி அவ்வளவுதான்.
ஏன் பிரதமரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேட்டால் சொல்லப்படும் காரணம் – அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அந்த நாள்களில் வெளியூர் சுற்றுப் பயணத்தில் இருந்ததால், சென்னையில் பிரதமருடன் கலந்துகொள்ள இயலாத நிலையாம்!
‘விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை’ என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.
அதே நேரத்தில், ஒரு பெரிய பட்டாளம் பா.ஜக..வுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வடக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறது.
பா.ஜ.க. தலைவர் நிதின்நபின், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கடந்த முறை இவர் தஞ்சாவூர் வந்தபோது – மைதானம் முழுவதும் வெறும் நாற்காலிகள் மட்டுமே காட்சி அளித்ததை ஏடுகள் படம் பிடித்துக் காட்டிக் பரிகாசம் செய்தது நினைவிருக்கிறதல்லவா?) நிதின் கட்கரி, ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், யோகி ஆதித்யநாத் (உ.பி. முதலமைச்சர்) ஹிமாந்தா பிஸ்வா சர்மா (அசாம் முதலமைச்சர்) ரேகா குப்தா (டில்லி முதலமைச்சர்) என்று பட்டியல் நீள்கிறது.
இவர்கள் படையெடுத்து வந்து என்ன பிரச்சாரம் செய்யப் போகிறார்கள்? ஹிந்தியில் பேசுவார்கள், ஏற்ெகனவே ஹிந்தி திணிப்பின்மீது ஏகப்பட்ட எரிச்சலில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பெரும்பாலும் புறக்கணிக்கவே செய்வார்கள் என்பது கொஞ்சம்கூட அவர்களின் அறிவுக்கு எட்டாமல் போனது ஏனோ?
அப்படி என்னதான் பேசுவார்கள்? தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு ஒன்றிய பிஜேபி அரசு என்னென்ன திட்டங்களை எல்லாம் அறிவித்திருக்கிறது என்று பட்டியல் போட முடியுமா?
‘‘தேசியக் கல்வியை ஏற்றுக் கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவதாக இருந்தோம்; ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மும்பொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் – பத்தாயிரம் கோடி ரூபாயைக் கொட்டினாலும் அதுதான் பதில் என்று சொன்னதால் ஒன்றிய அரசு அளிக்கத் தயாராக இருந்த நிதியைப் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டது’’ என்று சொல்லுவார்களா? அப்படிச் சொன்னால், அது பெரிய எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது ஊரறிந்த உண்மை!
ஜி.எஸ்.டி. நிதியை ஒன்றிய அரசுக்கு வழங்குவதில் இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்தாலும், வரிப் பகிர்வில் (ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில்) 10ஆவது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் நிதி வழங்குவதில்கூட சற்றும் மனச்சான்று இல்லாமல் தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சகம்!
செம்மொழி தமிழுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி எவ்வளவு? அதே நேரத்தில் ஹிந்திக்கும், செத்த மொழி சமஸ்கிருதத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது?
ஒன்றிய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் கொடுத்த தகவல் என்ன? கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2500 கோடி! அதே நேரத்தில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ வெறும் ரூ.160 கோடி!
இந்தியாவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 6.7 கோடி சமஸ்கிருதம் பேசுவோர் 24,821 பேர் மட்டுமே.
இந்த நிலையில் ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா கட்சி – ஆட்சி சமஸ்கிருதத்திற்குக் காட்டும் அக்கறை எத்தகையது? அதே நேரத்தில் தமிழ் மீதான துவேஷம் – அலட்சியம் எத்தகையது என்பது தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனும் தெரிந்தே வைத்துள்ளான்.
இவ்வாறு இருக்கும்போது, வடபுல பிஜேபி பிரமுகர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் பிஜேபிக்காகப் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்? பிஜேபி கெட்டதுடன், அதனோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.இ.அ.தி.மு.க.வும்கூட அல்லவா கெட்டொழிகிறது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பா.ஜ.க.வைக் காப்பாற்றக் கை கொடுக்கப் போன அ.இ.அ.தி.மு.க.வையும் பிஜேபி இழுத்துச் சென்று விட்டதே – அந்தோ பரிதாபம்!
யானைமீது அம்பாரி வைத்து பெரிய பதவிகளில் உள்ளவர்களை உட்கார வைத்துப் ‘பவனி’ வரச் செய்தாலும் பா.ஜ.க.வும் – அதன் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்!
‘மீண்டும் ஸ்டாலின் – வேண்டும் ஸ்டாலின்!’’ என்பதே தமிழ் மண்ணின் வெற்றி முழக்கம்!

