எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடூரம்! சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 காவல் துறையினருக்கும் தூக்குத் தண்டனை!

3 Min Read

மதுரை, ஏப்.7- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஆய்வாளர் சிறீதர் உள்ளிட்ட 9 காவல் துறையினருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான் குளத்தில் கைப்பேசி கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19ஆம் தேதி கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை திரும்ப அழைத்து வருவதாகக் கூறி மகன் பென்னிக்ஸ் பின்னர் காவல் நிலையம் சென்றார்.

தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் நிர்வாணப் படுத்தி கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்பேரில், சிபிசிஅய்டி யிடம் இருந்து இந்த வழக்கு சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. சிபிஅய் கொலை வழக்கு பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் சிறீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக் குமரன் விசாரித்து 9 பேரும் குற்றவாளிகள் என மார்ச் 23ஆம் தேதி அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி நேற்று (6.4.2026) அறிவித்தார். இதற்காக 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீதிபதி அளித்த தீர்ப்பு விவரம்

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், ‘காவல் மரணச் சம்பவங்கள் சகிக்க முடியாத குற்றம்’ என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘காவல் மரணம் கொடூர மானது. குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணை காட்டக் கூடாது’ எனக் கூறப்பட்டுள்ளது.

காவல் மரணங்களைத் தடுக்கவும், கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்காகவும் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழி முறைகளை வழங்கியுள்ளன. அவற்றை காற்றில் பறக்கவிட்டு தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும், தங்களைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டும் என்ற நோக்கிலும் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தைக் காக்க வேண்டியவர்களால் குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

உடற் பரிசோதனை அறிக்கை, காட்சிப் பதிவைப் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. காவல் மரணம் தொடர்பாக 2011இல் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியும், இதுபோன்ற காவல் மரணங்கள் நிகழ்வது வருத்தம் அளிக்கிறது.

சமீபத்தில் மடப் புரத்தில் அஜித்குமார் என்பவரை காவல் துறையினர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் நேர்மையான, திறமையான அதிகாரிகள் பலர் உள்ளனர்.

ஆனால், இந்த குற்றவாளிகளை போன்ற சில காவலர்களின் நடவடிக்கையால் ஒட்டுமொத்த காவல் துறைக்கு களங்கம் ஏற்படுகிறது. இந்த கொடிய நோய் எல்லா காவலர்களுக்கும் தொற்றிவிடக் கூடாது.

இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இதுபோல செயல்படும் காவல் துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாமல் இருக்கவேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.

இதுபோன்ற காவல் மரணங் களில் ஈடுபடும் காவலர்களுக்கு தூக்கு தண்டனைதான் பரிசாக கிடைக்கும் என நினைக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும்.

அந்த வகையில், காவல் ஆய்வாளர் சிறீதர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிறீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் உட்பட 9 பேருக்கும் மொத்தமாக ரூ.1 கோடி 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கு விசாரணை 5 ஆண்டுகள் 9 மாதங்கள் நடந்துள்ளது. முதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர் பால்துரை கரோனா தொற்றுக்கு ஆளாகி சிறையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *