பொய் பேசும் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்குக் கழகத் தலைவர் பதிலடி!
ஆலங்குளம், ஏப்.7 தமிழ்நாடு அரசு ஒருபோதும் திவால் ஆகாது! திவாலாகப் போவது மோடி அரசுதான், பா.ஜ.க. அரசுதான்! நீங்கள் பியூஸ் கோயலா? கோயபல்ஸா? பொய் பேசும் ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்குக் கழகத் தலைவர் பதிலடி கொடுத்து உரையாற்றினார்.
தென்காசி – திருநெல்வேலியில்
தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பிரச்சாரம்!
தென்காசி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, நேற்று (6.4.2026) மாலை 6 மணிக்கு, ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலிலும், திருநெல்வேலி திராவிடர் கழகத்தின் சார்பில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.சுப்ரமணியன் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, மாலை 7.30 மணிக்கு திருநெல்வேலி பேட்டை ரொட்டி கடை பேருந்து நிறுத்தம் அருகிலும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாக்கு சேகரிக்கும் படியாக பரப்புரைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி
தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன்!
ஆலங்குளம் தொகுதி பரப்புரைக் கூட்டம், திராவிடர் கழக தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் அவர்களின் தலைமையில், தென்காசி மாவட்ட செயலாளர் கை.சண்முகம் அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்டக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி, மாவட்ட துணைத் தலைவர் வே.செந்தில்வேல், தி.மு.க. நகரச் செயலாளர் நெல்சன் ஆகியோர் முன்னிலையிலும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் மாவட்டத் தலைவர் ச.இராஜேந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் வரவேற்று சிறப்பித்தார்.
93 வயதிலும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழர் தலைவர் பிரச்சாரம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகத்தின் சார்பில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது? என்ற தெளிவை, மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பரப்புரை செய்வது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழமை; நடைமுறை!
இது வழக்கமான மேடை ஒருங்கிணைப்பு கூட்டங்களாகவே அமைந்திருக்கும். இந்தச் சூழலில்தான் நடைபெறவிருக்கும், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் – 2026’’ அய் முன்னிட்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்வதற்காக ஒரு தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தின் மீதிருந்து கொண்டே மக்களைச் சந்தித்து பரப்புரை செய்வதற்காக, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துழைப்பில், 6.4.2026 முதல் 21.04.2026 வரை, இடைவிடாமல் 16 நாட்கள் பரப்புரை கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் நாள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன் அவர்களை நேற்று (6.4.2026) மாலை 6 மணிக்கு ஆலங்குளம் முத்தாரம்மன் கோயில் திடலிலும், திருநெல்வேலி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.சுப்பிரமணியன் அவர்களை, உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து, இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலி பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகிலும் வாகனத்தின் மீதிருந்தே உரையாற்றினார். 16 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் நாளின் இரண்டு கூட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்தன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வாகனத்தின் மீதிருந்து பேசியதை கேட்பது என்பது மக்களுக்கும் புதிது. 93 வயதிலும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு தனி வாகனத்தின் மீதிருந்து, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசுவதைக் கேட்டதில்லை என்பதால், மக்கள் மிகுந்த வியப்பும், உற்சாகமும் கலந்து ஆசிரியர் அவர்களின் உரையை முழுமையாக் கேட்டு, கைகளைத் தட்டி ரசித்தனர். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் அந்தந்த கட்சிகளின் கொடிகளுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி
தி.மு.க. வேட்பாளர் சு.சுப்ரமணியன்!
தி.மு.க. பொறுப்பாளர் பேச்சிமுத்து, மாவட்டக் காப்பாளர் காசி, மாவட்டத் துணைத்தலைவர் மகேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் மாரிகணேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வம், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் யுவன்ஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்க, பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் முன், திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
இரண்டு கூட்டங்களிலும் தொடக்க உரையாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார். இரண்டாவது கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் சு.சுப்பிரமணியன் அவர்கள் கழகத் தலைவருடன் கலந்து கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் பரப்புரை பயணத்தை ஒழுங்கு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆலங்குளத்தில் உரையாற்றும்போது, ‘‘திராவிட மாடல் அரசு கொண்டுவரும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் ஒரு லட்சியம் இருக்கும்’’ என்று குறிப்பிட்டு விட்டு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத காலை உணவு திட்டத்தை எடுத்துக்கொண்டு அதை விளக்கினார். அதாவது, ‘‘காலைச் சிற்றுண்டி என்பது, பசியைப் போக்குகிறது, கற்றல் கவனத்துக்கு காரணமாக இருக்கிறது என்பதும் உண்மைதான். இதன் காரணமாக மாணவர்களின் கல்வித் திறன் உயர்கிறது என்பதும் சரிதான். இதுவெல்லாம் மேலோட்டமாக தெரிகின்ற உண்மைகள். ஆனால், மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்ற அந்தப் பழக்கம் ஜாதி, மத, பேதங்களையும் போக்கிவிடுகிறது. இதுதான் முக்கியமானது’’ என்றும் கூறி, திராவிடர் இயக்கத்தின் ஆணிவேர் தத்துவமான பேத ஒழிப்பும் அதில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மக்களுக்கு இந்தக் கருத்து வியப்பை ஏற்படுத்தி கைதட்டச் செய்துவிட்டது.
பொதுமக்கள் கைதட்டி
தங்களின் மகிழ்ச்சியைக் காட்டினர்!
தொடர்ந்து பேசிய அவர், ‘‘இதுவரையிலே இந்தத் திட்டம் அய்ந்தாம் வகுப்பு வரையில் மட்டும் தான் இருந்தது. மறுபடியும் வரப்போகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியில் எட்டாம் வகுப்பு வரையிலும் இது நீட்டிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டதும், இந்தத் திட்டத்தின் இன்னொரு புதிய மற்றும் திராவிடர் இயக்கத்தின் முழு பரிமாணத்தையும் உணர்ந்த மக்கள், அதன் அருமை, பெருமையை உணர்ந்து, உணர்ச்சி பெருக்குடன் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியைக் காட்டினர்.
திராவிட மாடல்’ அரசு மறுபடியும் வர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! – தமிழர் தலைவர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் பி.எச்.பி.மனோஜ் பாண்டியன் அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாகனத்தின் உள்ளிருந்தே உரையாற்றினார். தொடக்கத்தில் வாகனம் வந்து முத்தாரம்மன் கோயில் திடலில் நின்ற போது, மக்கள் மிகுந்த ஆவலுடன் வாகனத்திற்கு அருகில் வந்து திராவிடர் கழக தலைவருக்கு கைலாகு கொடுப்பது, கழகத் தலைவர் வாகனத்தில் இருந்தாலுமே எக்கி நின்று ஆடையணிவித்து மகிழ்வது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பேசி முடித்த பிறகு, எல்லா மக்களும் பார்க்கின்ற வகையில் கழகத் தலைவர் வாகனத்தின் மேலே வந்து அனைவரின் பார்வையிலும் படும்படியாக நின்று கை கூப்பி அனைவருக்கும் வணக்கம் செய்தார். அதைக் கண்டதும் மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. பதிலுக்கு அவர்களும் அனிச்சையாக கழகத் தலைவருக்கு வணக்கம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து ஆசிரியர் அவர்கள், ‘‘நான் இப்போது வாகனத்திற்கு உள்ளிருந்து மேலே வந்தது போல், நீங்கள் அனைவரும் மேலே வர வேண்டும். வாழ்வில் உயர வேண்டும். அதற்கு ‘திராவிட மாடல்’ அரசு மறுபடியும் வர வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மிகப் பொருத்தமாக பேசி, மக்களின் உற்சாகத்தையும், ஆதரவையும் இரட்டிப்பாக்கி விட்டு, அதே உற்சாகத்துடன் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு திவால் ஆகாது;
மோடி அரசு தான் திவால் ஆகும்!
தொடர்ந்து, இது போன்ற மக்கள் நலத் திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கும் ஓரவஞ்சனையையும் தவறாமல் குறிப்பிட்டார். மேலும் அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘தமிழ்நாடு அரசு அதிக கடன் வாங்குகிறது. ஆகவே, தமிழ்நாடு விரைவில் திவால் ஆகிவிடும்’’ என்று அண்மையில் பேசியதைச் சுட்டிக்காட்டி, ‘‘தமிழ்நாடு திவால் ஆகாது. மோடி அரசு தான் திவால் ஆகும். பாஜக அரசு தான் திவால் ஆகும்’’ என்றும், நீங்கள் கோயல்ஸா? கோயபல்ஸா? என்றும் பேசி, பியூஸ்கோயல் பொய் பேசுகிறார் என்பதை ஒரு ஒப்பீடு செய்து காட்டி, ஒன்றிய அரசின் அமைச்சருக்குக் காட்டமாக பதிலடி தந்தார். அதற்கான காரணங்களையும் விளக்கினார். ஒன்றிய அரசு இதுவரை எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறது? அதற்கு வட்டியாக எவ்வளவு கட்டிக் கொண்டிருக்கிறது? என்பதையும், தமிழ்நாடு அரசு வாங்கி இருக்கும் வரம்பு மீறாத கடன் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு செய்வது சமூக மற்றும் கல்விக்கான முதலீடு என்பதையும் விளக்கி மக்களுக்குத் தெளிவை உண்டாக்கினார்.
தமிழ்நாட்டின் ஒற்றை எஞ்சின் வேகத்துக்கு இரட்டை எஞ்சினால் இதுவரையிலும் ஈடு கொடுக்க முடியவில்லை!
அதைத்தொடர்ந்து, அடுத்த கூட்டம் நடைபெறும் இடமான திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதிக்குச் சென்று உரையாற்றினார். பிரதமர் மோடியின் இரட்டை எஞ்சின் கருத்தைச் சொல்லி, ‘‘தமிழ்நாட்டின் ஒற்றை எஞ்சின் வேகத்துக்கு இரட்டை எஞ்சினால் இதுவரையிலும் ஈடு கொடுக்க முடியவில்லை’’ என்று பதிலடி கொடுத்தார். சிறுபான்மையினருக்கு ஒன்றிய அரசால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதேசமயம் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற தத்துவத்தையும் எடுத்துரைத்து, இரண்டுக்குமான நேர் – எதிர் வேறுபாடுகளை விவரித்தார். மேலும் அவர், ‘‘திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை இல்லை! பெரும்பான்மை இல்லை! இங்கே அனைத்தும் ஒரு பான்மை தான்!’’ என்று கவித்துவமாக சொல்லி, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கின்ற கருத்துக்கு மேலும் வலிமை சேர்த்தார். தொடர்ந்து, மதச்சார்பின்மை என்பது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்பதை சுட்டிக்காட்ட, ‘‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’ என்றும், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!’’ என்பதையும் நினைவூட்டி, ‘‘இந்தப் பண்பாடு இன்று நேற்று அல்ல, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது’’ என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.
உற்சாக மிகுதியில் எழுந்து நின்று பேசத் தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர்!
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சு.சுப்ரமணியன் அவர்களை ஆதரித்து, நேற்று (6.4.2026) இரவு 7.30 மணிக்கு திருநெல்வேலி பேட்டை ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். இதில் தொகுதியின் வேட்பாளர் சு.சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.
ஆசிரியர் அவர்கள் வாகனத்தின் மேலே வேட்பாளரும் உடனிருக்க, அமர்ந்தவாறு தொடக்கத்தில் பேசினார். சில மணித்துளிகளிலேயே உற்சாக மிகுதியில் எழுந்து நின்று பேசத் தொடங்கிவிட்டார். மக்கள் ஏராளமானோர் வாகனத்தை சூழ்ந்து நின்று மிகுந்த வியப்புடன் கழகத் தலைவர் பேசுவதை உற்று கவனித்துக் கொண்டிருந்தனர். இப்படியாக 35 நிமிடங்களுக்கு மேலாக நின்று கொண்டே பேசினார். அண்மைக்காலங்களில் அவர் அமர்ந்து கொண்டு தான் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் ஆதரவும், எழுச்சியும் அந்த அளவுக்கு இருந்ததால், எழுந்து நின்று பேசக்கூடிய அளவுக்கு உணர்ச்சி மேலீட்டால் பேசினார்.
அவரது உரையில் தமிழ்நாட்டின் தன்மானம், மக்களின் பெற்ற மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகள், ஒன்றிய அரசின் துரோகங்கள், தமிழ்நாட்டில் புதிதாக உருவாகி இருக்கும் சில மின்மினிப் பூச்சிகள், அண்ணாவையும், அம்மாவையும் மறந்த ஆண்ட கட்சியின் பொறுப்பாளர்கள் ஆகியோரைப் பற்றி விமர்சனம் செய்து பேசினார். தொடர்ந்து, ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ஏன் மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசு ஆட்சி அமைய வேண்டும்? என்ற கருத்தமைய உரையாற்றினார். மக்கள் மன நிறைவுடன் கலைந்து சென்றனர்.
எது அசல்? எது நகல்? என்பதை
விவரித்தார் தமிழர் தலைவர்!
மேலும் அவர், ஒன்றிய அரசு வரிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு இழைக்கும் ஓரவஞ்சனையை சுட்டிக்காட்டி உரையாற்றினார். தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் – தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் ஒன்றாக கையில் வைத்துக்கொண்டு, எது அசல்? எது நகல்? என்பதை விவரித்தார். மேலும் அவர், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் இன்றைக்கு அதானி கைகளிலும், அம்பானி கைகளிலும் இருப்பதை அம்பலப்படுத்தினார். பின்னர், ‘‘ஒன்றிய அரசின் நிறுவனங்களைப் பயன்படுத்தி, பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளை, கூட்டணிக்குள் கொண்டு வந்திருக்கிறது’’ என்பதையும் சுட்டிக்காட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் அடிமைகள் போல் இருப்பதையும், “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்று முதுகெலும்புடன் சொல்லக்கூடிய துணிச்சல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு. அவரால்தான் இழந்த உரிமைகளையும் மீட்க முடியும். ஆகவே, இந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சாதனைகள் தொடர்வதற்கு மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தான் வர வேண்டும்! வரும்!’’ என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.
திருநெல்வேலி மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிகணேசு நன்றி கூறி, நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் உரையைக் கேட்டு பயன்பெற்றனர். தொடர்ந்து, அனைவரிடமும் கழகத் தலைவர் விடைபெற்றுக் கொண்டார்.
திருநெல்வேலியில், தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை (6.4.2026)

