‘தி(இ)னமலரில்’ ஒரு விளம்பரம், மாநில நலனில் அக்கறை கொண்ட ‘கலைமாமணி’ என்கிற முகமுடி அணிந்த ஒருவரின் பெயரால் வெளிவந்துள்ளது.
ஏன் கால் பக்க அளவில் நிறுத்திக் கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு முழு பக்க அளவில் வெளி வந்திருந்தால் எங்களுக்குப் பேருபகாரமாக இருந்திருக்குமே! 1971இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டைத் தொடர்ந்து இதுபோல்தான் திருவாளர் சோ. ராமசாமி ‘துக்ளக்’ இதழில் பக்கம் பக்கமாக எழுதினார். கார்ட்டூன் போட்டு அங்கலாய்ப்பைத் தீர்த்துக் கொண்டார்! பார்ப்பனர்கள் கோயில் கதவு பெரிசாக சுவரொட்டிகளை அச்சிட்டு விளம்பரப்படுத்தினர்.
அதன் விளைவு 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க. – 1971 தேர்தலில் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று – இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே எந்தக் கட்சியும் பெறாத வெற்றியை தி.மு.க. பெற்று புது சாதனை படைத்தது!
வெருண்டுபோன ஆச்சாரியார் (ராஜாஜி) ‘‘இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உட்பட எண்ணத் தொடங்கி விட்டனர்’’ (‘கல்கி’ 4.4.1971) என்று எழுதியது உண்டே!
இந்தத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி இதுவரை கண்டிராத வெற்றியை எய்தப் போகிறது என்பதற்கு அடையாளம்தான் இவாள் இப்பொழுது வெளியிட்டுள்ள விளம்பரமும்!
இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களாக இருக்கக் கூடிய பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று இந்த 2026லும் இழிவுபடுத்தத் துடிக்கிறது ஒரு கூட்டம் என்பதற்கு அடையாளம் தானே இந்த விளம்பரத்திற்குள் பதுங்கி இருக்கும் – பிர்மா முகத்தில் பிறந்ததாகக் கொக்கரிக்கும் உயர்ஜாதி ஆதிக்கத் திமிர்?
இதற்கு நாம் பதில் சொல்வதைவிட ஆதின கர்த்தர் மகா சந்நிதானம் தவத்திரு குன்றாக்குடி அடிகளார் அவர்கள் 1971 தேர்தலின் போது – வெளியிட்ட குறள் போன்ற வாசகம்தான் பொருத்தமானதாகும்.
‘எது வேண்டும்?’
‘‘இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் ஜாதியினரின் நலம்.
இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.
உங்களுக்கு இதில் எது வேண்டும்?’’
– தவத்திரு குன்றக்குடிஅடிகளார்
(‘விடுதலை’ 18.2.1971 பக்.2)
இதன் பொருள் என்ன? யாருக்குப் பதில் சொல்லி யிருக்கிறார்? யாருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தவத்திரு அடிகளார்?
புரிந்து கொள்வீர்!
நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல – தேர்தலும் அல்ல!
ஆரியர் – திராவிடர் போராட்டமே!
சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் பார்ப்பனரல்லாத பெரு மக்களே! உங்கள் கடமை என்ன? உணர்வு என்ன?
‘இது சூத்திரர்களுக்கான அரசு’ – என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அறிவித்தாரே – அதை நினைவூட்டுகிறோம்.(28.7.1971)
வெல்லட்டும் திராவிடம்!
வீழட்டும் ஆரியம்!!
