சென்னை, ஏப். 7- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (6.4.2026) மாலையுடன் முடிவடைந்தது.
இறுதி நாளில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செல்வப்பெருந்தகை, தமிழிசை சவுந்தரராஜன், பிரேமலதா உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 7,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று (7.4.2026) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்பின்னர், 4 பொது விடுமுறை நாட்களில் மனு தாக்கல் நடைபெறவில்லை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே மனு தாக்கல் களைகட்டியது.
எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சாத்தூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சிறீபெரும்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவிநாசியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மயிலாப்பூரில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், தருமபுரியில் சவுமியா அன்புமணி ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., அதிமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோர் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
மனு தாக்கலுக்கான அவகாசம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. தமிழ்நாடு முழுவதும் கடைசி நாளான நேற்று மட்டும் 1,500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 628 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிக பட்சமாக விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 66 மனுக்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 56 மனுக்களும் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலை மையில், துணை அலுவலர்கள் உதவியுடன் மனுக்கள் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் பங்கேற்பார்கள். இப்பணிகளை பொதுப் பார்வையாளர்கள் மேற்பார்வையிடுவார்கள்
மனுக்கள் பரிசீலனையின் போது விண்ணப்பப் படிவங் களில் பெயர், வயது, தொகுதி, வருமானம் உள்ளிட்ட விவரங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதா, குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளதா, வேட்பாளர்கள், முன்மொழி பவர்களின் கையொப்பங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் மற்ற வேட்பாளர்கள் சார்பில் ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம். அதன் பிறகு வேட்பு மனுக்களை ஏற்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். ஏற்கப்படுகிற, தள்ளுபடி செய்யப்படுகிற வேட்பு மனுக்கள் விவரம் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும்.

