கண்ணை இமை போல் கலைஞரை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மீது அபாண்டமாக பழிசுமத்துவதா? எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் கண்டனம்!

2 Min Read

சென்னை, ஏப். 7– ‘‘கண் இமைபோல் கலைஞரை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பழி சுமத்துவதா?’’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:–

எடப்பாடி பழனிசாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப் பழியைச் சுமத்தி உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடித்தளத்தில் வட்டச் செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, திருமணமான அய்ந்தாவது மாதத்திலேயே மிசா கைதியாக காவல் துறை கொடுஞ் சிறையில் அடைத்தபோது, சகோதரர் மு.க.ஸ்டாலின் கடும் சித்ர வதைக்கு ஆளானார்.

தியாக பிம்பமாகவே அவர் பொதுவாழ்வில் இளைஞர் அணியில் பங்கேற்று தன் சீரிய உழைப்பால் அதன் தலைவராகி, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைப்பின் சிகரமாக உயர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமச்சராகவும், கழகத்தின் கோடானு கோடி தோழர்களின் விருப்பத் திற்கு ஏற்ப முதலமைச்சர் பொறுப்பினையும் ஏற்று அந்தப் பதவிக்கு புகழ் மகுடம் சூட்டினார்.

தன்னை ஆளாக்கிவளர்த்து வார்ப்பித்த தன் தந்தையும்,கழகத்தின் தலைவருமான கலைஞர் பிணிவயப்பட்ட காலத்தில் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார். தமிழ்நாட்டின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த கலைஞர் மறைந்தபோது, அவர் அறிஞர் அண்ணா மறைந்த வேளையில் எழுதிய நெஞ்சு உருக்கும் இரங்கல் பாவில் வேண்டிக் கொண்டபடிஅறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகிலேயே தி.மு.கழகத் தலைவரை நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் மு.க.ஸ்டாலின்.

அதற்காக தன் சுயமரியாதையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கே சென்று உள்ளம் உருகும் விதத்தில் வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிசாமி ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம், மனிதாபிமானம் சற்றும் இன்றி தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை நிராகரித்து உதாசினப்படுத்தினார்.

எந்த நிலையிலும் விடா முயற்சியைக் கைவிடாத தளபதி மு.க.ஸ்டாலின், வழக்குரைஞர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடி தமிழினத் தலைவர் கலைஞரை அண்ணா கண் உறங்கும்இடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யும் தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கிய செய்தியை செவியுற்ற மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் மல்க நெஞ்சுருகி கதறினார். உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் இதைக் கண்ணுற்று மனம் கலங்கினர்.

கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதாவின் பாதபடிகளுக்கு சேவகம் செய்த தன்மானமற்ற ஒரு நபராவார். இனிமேல் இதுபோன்ற அவதூறு கருத்துகளை அவர் கூறுவாரானால் என் தாக்குதல்களுக்கு அவர் பதைபதைத்து பின்னங்கால் பிடரியில் அடிபட அரசியல் களத்தில் ஓட நேரிடும் என எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *