தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரை சூறாவளி சுற்றுப்பயணம் – * முனைவர் க. அன்பழகன்

6 Min Read

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தல் வரும் 23 ஏப்ரல், 2026 அன்று ஒரே நாளில் தமிழ் நாடெங்கும் நடைபெற உள்ளது.

முதல் சட்டப் பேரவைத் தேர்தல்

‘சென்னை மாநிலம்’ என்று ‘தமிழ்நாடு’ இருந்தபோது முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் 1952இல் ஜனவரியில் அய்ந்து கட்டத் தேர்தலாக நடைபெற்றது.

இப்போது தமிழ்நாடு மாநிலத்தின் பதினேழாவது சட்டப் பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 அன்று ஒரே நாளில்  நடைபெற உள்ளது.

திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத இயக்கம். ஆனாலும், தேர்தலைப்பற்றி, தேர்தலில்  போட்டியிடும் அரசியல் கட்சிகளைவிட ஆயிரம் மடங்கு அக்கறை காட்டும் இயக்கம். தேர்தலில் இடம் பெறும் அரசியல் கட்சிகள் தங்கள் வெற்றி – தங்கள் கூட்டணியின் வெற்றிக்காக முனைப்பு காட்டுவர்.

திராவிடர் கழகமும் தேர்தலும்

தேர்தலில் களம் காணா இயக்கமாம். திராவிடர் கழகம் கட்சியின்வெற்றியைவிட தத்துவத்தின் வெற்றி – இனத்தின் வெற்றி – அடுத்த தலைமுறை பற்றிய கவலை என்ற நோக்கில் அய்யா பெரியார் காலந்தொட்டு தேர்தலை கூர்ந்து பார்க்கிறது. தேர்தலில் பங்காற்றுகிறது.

இரு துருவத் தேர்தல்

அந்தத் திசையில் இன்றைய தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு முன்னேற நீதிக்கட்சியின் நீட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சி, தமிழ்நாட்டில் தொடர்ந்திட, இந்திய ஒன்றியமே அவ்வழி உயர்ந்திட, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டிற்கும்  டில்லிக்கும் போட்டி, தி.மு.க. கூட்டணிக்கும் பா.ஜ.க. கூட்டணிக்கும் போட்டி என்ற இரு துருவத் தேர்தலாக நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி யின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிட  நேற்று (6.4.2026)  தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள அணியமாகி விட்டார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

இந்தத் தேர்தல் என்பது…

திராவிடத்திற்கும் – ஆரியத்திற்கும் இடையே நடைபெறுவது.

பெரியாரின் சமத்துவத்துக்கும் – பா.ஜ.க.வின் ஸநாதானத்திற்கும் இடையே நடைபெறுவது.

சமூகநீதிக்கும் – ‘ஒரு குலத்துக்கொரு நீதி’க்கும் இடையே நடைபெறுவது.

சமநீதிக்கும் – ஜாதிக்கும் இடையே நடைபெறுவது.

மாநில உரிமைக்கும் – ஒன்றிய ஆதிக்கத்திற்கும் இடையே நடைபெறுவது.

இத்தேர்தல் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் உழைப்பின் பயன் அழியாது காக்கும் பொறுப்பு மிக்க முக்கிய தேர்தலாகும்.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தை  திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் தொடங்கியுள்ளார் (6.4.2026).

தேர்தல் பரப்புரை பயணம் 21.4.2026  தஞ்சாவூரில் நிறைவடைய விருக்கிறது.

மொத்தபரப்புரை நாட்கள்: 16 நாட்கள்

தேர்தல் பரப்புரை நடைபெறவுள்ள மொத்த இடங்கள்: 36 (தற்போது வரை)

தமிழர் தலைவருடன் பரப்புரையாற்றுவோர் : 3 சொற்பொழிவாளர்கள்.

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரை செவ்வனே நடைபெற புதிய வேன் ஒன்று, நின்று கொண்டு பேசும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதோடு, தோற்கடிக்கப்பட வேண்டியவர்களை அடையாளங் காட்டுவதே வழக்கம்போல் மிக முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பிற அணிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க. கூட்டணி தோற்கடிக்கப்பட
வேண்டும் – ஏன்?

மதச் சார்பின்மையை பாதுகாத்து அரசியல் சட்டத்தை நிலைநாட்டிட

மதவெறிச் சக்திகளின் வன்முறையை ஒழித்திட

மாநில உரிமை காத்திட

பா.ஜ.க.வின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஆபத்தைப் போக்கிட

சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை நீக்கிட

இந்தித் திணிப்புக்கு நிரந்தர முடிவு கட்டிட

குலக்கல்வி எனும் ஸநாதனக் கல்விக்கு இனி இங்கு இடமில்லை என்று ஆக்கிட

‘நீட்’ முதலான முட்டுக்கட்டை போடும் தேர்வுகளை முற்றாக அகற்றிட

சமூகநீதியைக் காத்திட

திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று கொக்கரிக்கும் பா.ஜ.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தந்து தமிழ்நாட்டை எதிரிகளின் காலடியில் கிடத்தத் துடிக்கும் அதிமுக உள்ளிட்ட  அரசியல் கட்சியின் கபட நாடகத்தை துரோகச் செயல்களை தோலுரித்துக் காட்டிட – தக்க பாடம் புகட்டும் எழுச்சிப் பயணம்.

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் திறம்பட கட்டிக்காத்து, தமிழ்நாட்டை 2030இல் ‘1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அசுர வெற்றியை பெற்று ஆட்சியில் அமர இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் செய்துள்ள – செய்யவுள்ள திட்டங்கள்  வரும் தேர்தலில் ஹீரோவாக – சூப்பர் ஸ்டராக உள்ள தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் சிறப்புகளை வாக்காளப் பெரு மக்கள் மத்தியில் ஆதாரங்களுடன் விளக்கி முழக்கமிட்டு வெற்றியினை குவிக்க  தமிழர் தலைவர்  தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

திமுக அரசு செய்துள்ள – செய்திட உறுதியளித்திடும் சரித்திரம் போற்றும் திட்டங்கள்:

‘திராவிட மாடல்’ ஆட்சியின்
சாதனைத் திட்டங்கள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள்

மகளிர் உரிமைத் தொகைகள்

புதுமைப் பெண் திட்டம்

தமிழ்ப் புதல்வன் திட்டம்

விலையில்லா விடியல் பயணத் திட்டம்

நடுநிலைப்பள்ளிவரை காலை உணவுத் திட்டம்

நான் முதல்வன் திட்டம்

அயலகக் கல்வித் திட்டம்

இலவச மிதிவண்டித் திட்டம்

இலவச மடிக்கணினி திட்டம்

முதல்வர் இலவச இல்லத் திட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமைச் சட்டம்

வேளாண்மைக்கு இலவச மின்சாரத் திட்டம்

இல்லம் தேடிக் கல்வி

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்கு இடஒதுக்கீடு

மூன்றாம் பாலினத்திற்கு முன்னுரிமை

இல்லம் தேடி மருத்துவம்

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

இலவசக் கல்வி ஆய்வுப் படிப்பு வரை

தோழி விடுதி,

சமூகநீதி விடுதிகள் மற்றும் பல.

தேர்தல் பரப்புரையில் கின்னஸ் சாதனை

தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பங்களிப்பு என்பது கின்னஸ் சாதனைக்குரிய ஒன்றாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இதுவரை 18 சட்டமன்றப்  பொதுத்  தேர்தல்களில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக பங்கேற்ற பெருமைக்குரியவர் ஆவார்.

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் இதற்குமுன் நடைபெற்ற 16 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசிய பெருமைக்குரியவர் ஆவார்.

தற்போது தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெறவுள்ள 17ஆவது சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் களத்தில் பிரச்சாரக் களத்தை கலக்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

வருகிற 6.4.2026 முதல் 21.4.2026 வரை  16 நாட்களும் தொடர் பயணமாக பயணத் திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. ஒரு நாள்கூட இடைவெளி – ஓய்வு இல்லை.

தனது 93ஆம் வயதில் கொளுத்தும் கோடை வெயிலில் –மூன்று முறை மீட்டுயுரூட்டப்பட்ட இதயத்தோடு இத்தேர்தல் பணியைத் தன் தலையில் சுமந்து ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர  –சமூகநீதியின் சரித்திர நாயகர், திராவிட  மாடல் ஆட்சி நாயகர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக ஆட்சியினைத் தொடர, தேர்தல் பரப்புரையை யுத்தக் களத்தில் பெரியாரின் அறிவாயுதத்துடன்  பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் அரசியல் பணி நிலைத்திட போர்க்களம் காண உள்ளார்.

இதுதான் இறுதித் தேர்தல்

பெரியார் மண்ணைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் பா.ஜ.க.விற்கும், பெரியார் மண்ணைக் காட்டிக் கொடுக்கவும், காவு கொடுக்கவும் துடிக்கும் தமிழின கோடாரிக் காம்புகளாக ஆகி ஆட்டம் போடும் அரசியல் கட்சி களுக்கும்  இதுதான் இறுதித் தேர்தல்.

‘திராவிட மாடல்’ ஆட்சியை இந்தியாவிற்கும் – பிற நாடுகளுக்கும் கலங்கரை விளக்கமாக்கி ஆட்சி நடத்திடும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியை அடுத்த நூற்றாண்டும் அங்கீகரித்து உலகம் வியந்து நோக்கி பாராட்டப் போகும் வெற்றியை அறி விக்கும் தேர்தல்தான் நடை பெறவுள்ள தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் 2026.

இத்தகு சிறப்புமிகு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு பெற்ற வாக்காளர் பெருமக்களே! தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பீர்! திராவிடர் இனத் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆட்சியினை தொடர சூளுரைப்பீர்.

234 தொகுதியிலும் வெற்றிச் செய்தி கிடைக் கட்டும்.

‘திராவிட மாடல்’ ஆட்சிக் கொடி கோட்டை யில் பறக்கட்டும்.

திராவிடம் வெல்லும் – வரலாறு இனி அதையே சொல்லும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *