பொதுமக்களின் வரிப்பணம் 72.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு பாலம், திறக்கப்பட்ட இரண்டே மாதங்களுக்குள் (பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 2 வரை) சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்னாகர் மிஸ்ரா இதற்கு அளித்துள்ள விளக்கம் தான்.
ஒரு பாலம் கட்டப்படும்போது அதன் உறுதித்தன்மை, பயன்படுத்தப்படும் சிமெண்ட், மணல், இரும்புக்கம்பிகளின் தரம் மற்றும் மண்ணின் சுமை தாங்கும் திறன் ஆகியவற்றைப் பார்ப்பதுதான் நவீன பொறியியல். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் ரத்னாகர் மிஸ்ராவோ, “வேலையைத் துவங்கிய நேரம் சரியில்லை, கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கவில்லை” என்று கூறி ஒட்டுமொத்தப் பழியையும் விதியின் மீதும், ‘கடவுள்’மீதும் சுமத்தியுள்ளார். மிஸ்ராக்கள் அல்லவா! எதிலும் கடவுள், நல்ல நேரம், விதிப் பலன் என்கிற மூடத்தனங்களைத் திணித்து தங்களுடைய பார்ப்பனீயப் பாசிசத்தைப் பாதுகாப்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
பாலம் இடிந்ததற்குத் தரமற்ற கட்டுமானப் பொருட்கள் காரணமா அல்லது முறைகேடுகள் காரணமா என்று ஆராய்வதை விடுத்து, ‘நல்ல நேரம்’ பார்க்கவில்லை என்று கூறுவது 21-ஆம் நூற்றாண்டில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
பாலம் இடிந்ததற்கு அந்தத் தனியார் நிறுவனத்தைக் கடுமையாகக் கண்டித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, “உங்களால் எனது பெயர் கெட்டுப்போகிறது, விரைவில் சரியான நல்ல நேரத்தில் பணியைத் துவங்கி புதிய பாலத்தைக் கட்டி முடித்து எனக்கு நற்பெயரைப் பெற்றுத்தாருங்கள்” என்று அவர் பேசியிருப்பது நகைச்சுவையல்ல – நழுவல் யுக்தி!
72.5 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணானதற்கு யார் பதில் சொல்வது?
நல்ல நேரம், ‘கடவுள்’ பக்தி இருந்தால் மட்டுமே பாலம் நிலைக்கும் என்றால், உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளும், அதிநவீன தொழில்நுட்பங்களும் எதற்கு? அய்ரோப்பாவிலும், சீனாவிலும் கட்டப்படும் மிகப் பெரிய பாலங்கள் ஜாதகம் பார்த்தா கட்டப்படுகின்றன? அங்கு அறிவியல் துணை நிற்கிறது, இங்கே ஊழலை மறைக்க ஆன்மீகம் துணைக்கு அழைக்கப்படுகிறது.
தங்கள் தோல்விகளையும், ஊழல்களையும் மறைக்க ‘கடவுள்’ மற்றும் ‘நேரம்’ போன்ற வார்த்தைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவது தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது ஜனநாயக ஆட்சிக்கு அழகல்ல! சிமெண்டிலும், மணலிலும் காட்ட வேண்டிய கவனத்தை, ஜாதகத்திலும் நல்ல நேரத்திலும் காட்டுவதால் விளையும் கேடுதான் இவை. இந்த மிர்சாப்பூர் பாலம் விபத்துக்குப் பிறகு இனியாவது அறிவியலுக்கு மதிப்பளித்து, தரமான உட்கட்டமைப்புகளை உறுதி செய்ய வேண்டும்; இல்லையெனில், இடிந்து விழுவது பாலங்கள் மட்டுமல்ல, அரசின் மீதான நம்பிக்கையும்தான்!
பார்ப்பனீயத்தின் சாமர்த்தியம் என்ன தெரியுமா? ஒரு கோயில் கோபுரம் தலைக்குப்புற வீழ்ந்தால், தேரின் அச்சாணி முறிந்து, தேர் கவிழ்ந்து விழுந்தால், புனித நீராடல் சென்றவர்கள் நீரில் மூழ்கிப் பக்தர்கள் மரணித்தால், கோயில் குடமுழுக்குக்குமுன் யாகம் வளர்த்து, அந்த யாகத் தீயால் பந்தல் எரிந்து பக்தர்கள் பலியாகிறார்கள்! (எடுத்துக்காட்டாக தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் குட முழுக்குக்கு முதல் நாள் 7.6.1997 அன்று யாக சாலை பூஜையின்போது பந்தல் தீப்பற்றி 48 பக்தர்கள் மரணம், 200 பேர் தீக்காயம்) ‘‘கடவுள் சக்தி இதுதானா? பக்தர்களைக் காப்பாற்ற முடியாதவன் கடவுளா? தீராத வினை தீர்ப்பவன் என்று தேடிச் சென்றீர்களே, குறைந்தபட்சம் உங்கள் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா?’’ என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்புவது ஒருபுறம்; பக்தர்களே சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டு விட்டால், வியர்வை ஒருசொட்டு சிந்தாமல் சுரண்டிப் பிழைக்கும் தொழிலுக்கு மோசம் வந்து விடுமோ, தங்களின் பிறவி உயர்வு ஜாதித்திமிருக்குப் பங்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த நிகழ்வுகளுக்கும் ஆன்மிகம் மற்றும் சாத்திரங்களைக் கூறி முட்டுக் கொடுத்து விடுவார்கள். அதற்காக பிராயச் சித்தங்கள் செய்யப்பட வேண்டும், யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி, அதிலும் தங்கள் கல்லாப் பெட்டியை நிரப்புவார்கள். நல்லது நடந்தாலும், அல்லது நடந்தாலும் அவாளைப் பொறுத்த வரை இலாபக் கணக்குதான்.
பாலம் கட்டப்பட்ட சில நாட்களிலேயே இடிந்து விழுந்ததற்கான விசாரணையை நடத்தாமல், ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்க வழி செய்யாமல், பாலம் காட்டிய நேரம் சரியில்லை என்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே (பெயருக்குப் பின்னால் மிஸ்ரா) சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். நட்டக் கணக்கு என்பது பார்ப்பனப் பேரேட்டில் எப்பொழுதுமே இல்லை – இந்த சூட்சமத்தைப் புரிந்து கொள்வீர்!

