சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

8 Min Read

ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் ஒரு சதவிகிதம்தான் வழக்கு வென்றிருக்கிறது; மீதம் 99 சதவிகித வழக்குகளில் தோற்றுப் போயிருக்கின்றன; அவையெல்லாம் அழி வழக்குகள் என்பதற்கு அதுவே அடையாளம்!
தி.மு.க. தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!!
இம்முழக்கத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உரக்கச் சொல்லி உறுதிப்படுத்துங்கள்!

சென்னை, ஏப்.7   ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் ஒரு சதவிகிதம்தான்  வழக்கு வென்றிருக்கிறது; மீதம் 99 சதவிகித வழக்குகளில் தோற்றுப் போயிருக்கின்றன. அவையெல்லாம் அழி வழக்குகள் என்பதற்கு அதுவே அடையாளம். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!! என்ற முழக்கத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உரக்கச் சொல்லி உறுதிப்படுத்துங்கள்! அது அந்தக் கூட்டணியின் வெற்றிக்காக அல்ல! நம்முடைய எதிர்கால சந்ததியினுடைய நல வாழ்வுக்காக என்பதை உறுதிப்படுத்துங்கள்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்.

‘தி.மு.க. திராவிட மாடல் 2.0’
தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்!

3.4.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தி.மு.க. திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒன்றிய பா.ஜ.க. மோடி ஆட்சியில் மகளிரின் இன்றைய நிலை என்ன? அமெரிக்கா , இஸ்ரேல் – ஈரான் போரைக் காட்டி, மறுபடியும் விறகு அடுப்பு. எங்கே இருக்கிறது என்று தெரியாத ஊதாங்குழலைத் தேடிப் பிடிக்கவேண்டிய நிலை.

எரிவாயு அடுப்பு என்பதை முதன்முதலில் இலவச மாகக் கொடுத்த பெருமை கலைஞர் அவர்களையே சாரும். விறகு அடுப்பை அவர் தூக்கி எறிய வைத்து, பட்டனைத் திருகியவுடன் எரிகிற காஸ் அடுப்பை நம்முடைய மகளிர் இதுவரை பயன்படுத்தி
வந்தனர்.

இன்றைக்கு ஊதாங்குழலை வைத்துப் பெண்கள் ஊதிக் கொண்டிருக்கிறார்கள்!

இன்றைக்கு மறுபடியும் மோடி ஆட்சி மகளிருக்கு எதைக் கொடுத்திருக்கிறது என்றால், பெண்களுக்கு புகைச்சலைக் கொடுத்திருக்கிறது. ஊதாங்குழலை வைத்துப் பெண்கள் ஊதிக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டல்களில் பார்த்தீர்களேயானால், விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள். புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். அதைப்பற்றி அவர்க ளுக்குக் கவலையில்லை.

ஆகவே, இப்படி ஒவ்வொன்றிலும் ஒன்றிய அரசின் அலட்சியம்தான் இன்றைக்கு இருக்கிறது.

இல்லத்தரசிகளுக்கு
8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டம்!

இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கிறோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. வீட்டில் உள்ள மிக்சி, கிரைண்டர், மைக்ரோ வேவ் ஓவன், பிரிட்ஜ், வாசிங் மிஷின் என்று ஏதாவது ஒன்றை வாங்குவதற்கு அந்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்? இந்தத் தேர்தல் முடிந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவராகக்கூட அவர் இருப்பாரா என்பது கேள்விக்குறிதான். நிச்சயமாக இருக்கமாட்டார். அந்தத் தகுதியைக்கூட வழங்குவதற்கு மக்கள் தயாராக இல்லை.

‘ஊழல், ஊழல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார். இல்லத்தரசிகளுக்கு 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கும் திட்டத்தில், கடைகளில் தி.மு.க. கமிஷன் வாங்கும் என்று!

‘‘குறிப்பிட்ட கடைக்குச் சென்று, அங்கே அந்தப் பொருள்களை வாங்குங்கள்’’ என்று சொன்னால், ‘‘அந்தக் கடைக்கும், தி.மு.க.விற்கும் சம்பந்தம் இருக்கிறது; கமிஷன் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காகத்தான், அவரவர் இல்லங்களுக்கு அருகே உள்ள கடைகளில், எதை நீங்கள் விருப்பப்படுகிறீர்களோ அதை வாங்கலாம்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.

வியாபாரிகள் சங்கத் தலைவர்  விக்கிரமராஜா அறிக்கை

இதைக் கண்டு, வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அறிக்கை விட்டிருக்கிறார். ‘‘எங்கள் வியாபாரிகள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள், போராட்டம் நடத்தலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று.

இதைப் புரிந்துகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர், ‘கமிஷன் வாங்குவதற்காக’ என்று சொல்கிறார். அவர்களால் செய்ய முடியாததால்தான், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்.

மின்மினிப் பூச்சிப் போல புதிதாக வந்த ஒருவர், ‘‘ஸ்டாலின் சார்,  முதலமைச்சர் சார், இதைச் செய்தீர்களா? அதைச் செய்தீர்களா?’’ என்று சொல்கிறாரே, ‘‘மோடி சார்,  மோடி ஜி’’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசை நோக்கி எந்தக் கேள்வியையும் கேட்கமாட்டார்.

‘‘ஊழல் செய்கிறது தி.மு.க. அரசு’’ என்று சொல்கிறாரே, நாள்தோறும் வெளிவரும் பத்திரிகைகளைப் படிக்கி றாரா, இல்லையா என்று தெரியவில்லை. அல்லது அவருக்கு எழுதிக் கொடுக்கின்றவர்கள் சொல்கிறார்களா, இல்லையா என்றும் தெரியவில்லை.

நேற்றும், இன்றும் வெளிவந்திருக்கின்ற செய்தியை வைத்துச் சொல்கிறேன். ‘ஊழல், ஊழல்’ என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்.

திரிசூலத்தைக் காட்டித்தானே ‘உங்கள் கூட்டணி’யை அமைத்திருக்கிறீர்கள்!

திரிசூலம் – ஒன்று வருமான வரித் துறை; இரண்டாவது சி.பி.அய். மூன்றாவது அம லாக்கத் துறை. இவற்றைக் காட்டித்தானே, பய முறுத்தித்தானே உங்கள் கூட்டணியை அமைத்தி ருக்கிறீர்கள்.

இன்று வெளிவந்திருக்கின்ற செய்தியைப் பாருங்கள்! அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகன், அவரது மகன் மற்றும் மகள் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனைகள் நடத்தப்பட்டு, சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கைப்பற்றப்பட்டு, அவர்கள்மீது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை மற்றும் சொத்து பறிமுதல் தொடர்பான நீதிமன்ற உத்தரவை இரத்து செய்து, சொத்துகளை அவர்களிடம் திருப்பிக் கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆகவே, ‘ஊழல் என்கிற’ முத்திரை எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

அடுத்து, மேனாள் அமைச்சர் க.பொன்முடி அவர்கள், பகுத்தறிவுவாதி. அவர்மீது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அப்போது கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, அவரது மகனும், நாடாளுமன்ற தி.மு.க. முன்னாள்  உறுப்பினருமான கவுதம சிகாமணி, தி.மு.க. நிர்வாகிகள் சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், லோகநாதன் மற்றும் கோபிநாத் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புக் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.  2.4.2026 அன்று கொடுக்கப்பட்ட அவ்வழக்கின் தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

அதற்கடுத்து, துரைமுருகன் அவர்கள், இந்த வயதி லும் தொகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு உத்த ரவு வந்திருக்கிறது.

இம்மூன்றும் இரண்டு நாள்களில் வந்திருக்கிறது.

ஊழல் வழக்கில் துளிகூட ஆதாரம் கிடையாது என்று சொல்லி விடுதலை செய்யப்பட்டார் கெஜ்ரிவால்!

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சராக இருந்த  கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி, சிறையில் அடைத்தனர். அந்த வழக்கு விசார ணையின் முடிவில், அவர்மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் துளிகூட ஆதாரம் கிடையாது என்று சொல்லி, விடுதலை செய்யப்பட்டார்.

ஆகவே, ஒன்றிய அரசின் திரிசூலங்கள்மூலம் தொடுக்கப்படும் வழக்குகள் எல்லாம் அழிவழக்குகள்தான் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

அதைவிட, திண்டுக்கல்லில் 84 லட்சம் ரூபாய் கொடுத்தால், உங்களை விட்டுவிடுகிறேன் என்று பேரம் பேசிய அமலாக்கத் துறை அதிகாரி யார்? அந்த வழக்கு என்னாயிற்று? என்ற கேள்வியைக் கேட்கவேண்டாமா?

அழி வழக்குகள் என்பதற்கு
அதுவே அடையாளம்!

ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் ஒரு சதவிகிதம்தான்  வழக்கு வென்றி ருக்கிறது; மீதம் 99 சதவிகித வழக்குகளில் தோற்றுப் போயிருக்கின்றன. அவையெல்லாம் அழி வழக்குகள் என்பதற்கு அதுவே அடையாளம்.

அதேபோல, சென்னையிலிருந்து திருச்சிக்குப் போன ஒரு நடிகர், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படிக்கிறார். அங்கே உள்ள அமைச்சர்மீது ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று பேசுகிறார்.

ஊழல் செய்ததற்கு ஆதாரம் வேண்டாமா? எதுவுமே இல்லாமல் பொத்தாம் பொதுவில் பேசிவிட்டுப் போகலாமா?

அதேபோன்று, இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருப்பவர்கள், ஆளுங்கட்சியாக வரப் போகிறோம் என்று சொல்கிறார்களே, அவர்கள்மீதெல்லாம் ஊழல் வழக்குகள் இல்லையா?

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடிக்குப் பக்கத்தில் அமர்ந்தி ருந்த சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த ஒருவர் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் செய்த மோசடி காரணமாக சிறைச்சாலையில் இருக்கிறாரே!

நண்பர்களே! அந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40–க்கு 40 என்று முழு வெற்றியைக் கொண்டு வந்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஏற்கெனவே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்!

ஆகவே, நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நிச்சயமாக வரப் போகிறார் என்பதை ஏற்கெனவே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

காரணம், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றிய ஆட்சி! ஸ்டாலினுக்காக அல்ல; அது – நமக்காக, நம்முடைய மக்களுக்காக, எதிர்காலச் சந்ததிகளுக்காக, நம்முடைய பிள்ளைகளின் கல்விக்காக, நம்முடைய உரிமைக்காக, நம்முடைய மான வாழ்வுக்காக!

எனவே, தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுங்கள், வெற்றி பெறுவோம்!

‘‘திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும், ஏன்?’’ என்ற புத்தகத்தை வீடு வீடாகச் சென்று கொடுங்கள். தெருத் தெருவாகச் சென்று கொடுங்கள்!

ஊழல் பூச்சாண்டிகளைப்பற்றி கவலைப்படாமல், மக்களிடையே சென்று தெளிவுபடுத்துங்கள்! நம்மு டைய வாழ்வு முக்கியம், அடுத்த சந்ததி மிக முக்கியம்.

நடைபெறவிருக்கின்ற தேர்தல் என்பது,  5 ஆண்டுகளுக்கான தேர்தல் அல்ல; வருகின்ற தலைமுறை, வருகின்ற சந்ததியினர் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய தலைவர்கள் அரும்பாடுபட்டு போராடிப் பெற்றுத் தந்த சமூகநீதி, சுயமரியாதை, பெண் உரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை அனைத்தையும் ஸநாதனம் என்ற பெயரால், ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரால் பறிப்பற்காக இங்கே வந்து என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.

எவ்வளவு அவதூறுகளை வேண்டுமானாலும் பரப்புவார்கள்!

தேர்தல் நாள் நெருங்க, நெருங்க, அவர்களுக்கு வேறு சரக்குக் கிடையாது என்பதால், வெறி பிடித்து அலையக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். அதற்காக எவ்வளவு அவதூறுகளை வேண்டுமானாலும் பரப்பு வார்கள்.

எதையும் நாங்கள் பொருட்படுத்தமாட்டோம். மீண்டும் தி.மு.க. தலைவர் தலைமையில்தான், உதயசூரியன் ஆட்சி ஒளிரும்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பலத்தோடு கைகோத்து நாங்கள் நிற்கிறோம்.

தி.மு.க. வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கை சின்னத்திலும், கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், கதிர் அரிவாள் சின்னத்திலும், வி.சி.க. வேட்பாளர்களுக்கு பானை சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புக்கு ஏணிச் சின்னத்திலும் வாக்களித்து, அவர்களை மீண்டும் கோட்டைக்கு அனுப்புவது உங்களுடைய கடமையாகும்.

நம்முடைய எதிர்கால சந்ததியினுடைய நல வாழ்வுக்காக…

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!! என்ற முழக்கத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உரக்கச் சொல்லி உறுதிப்படுத்துங்கள்!

அது அந்தக் கூட்டணியின் வெற்றிக்காக அல்ல! நம்முடைய எதிர்கால சந்ததியினுடைய நல வாழ்வுக்காக என்பதை உறுதிப்படுத்துங்கள்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *