சென்னை, ஏப்.6 5 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் உள் மாவட் டங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஈரோடு திருச்சி கரூர் மதுரை வேலூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது: சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெப்பநிலை 100 டிகிரி ஒட்டியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை (Trough) காரணமாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்: தேனி, திண்டுக்கல், விருதுநகர் நீலகிரி குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஏற்ெகனவே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் அதிகபட்சமாக 90 மி.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏப்ரல் 7: தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 11 வரை: இதே போன்ற வானிலை சூழல் தமிழ்நாட்டில் நீடிக்க வாய்ப்புள்ளது. வெப்பநிலை மாற்றம்: வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும், தென் தமிழ்நாட்டில் பெரிய மாற்றமின்றி இயல்பு நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயில் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழையினால் ஒருசில பகுதிகளில் வெப்பம் தணிய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
