‘திராவிட மாடல் ஆட்சி’ மகளிருக்காக செய்திருப்பவை சாதாரணமானவையல்ல!
நிதி நெருக்கடியில்கூட ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார்
அதனைத் தேர்தல் நேரத்தில் முடக்கவேண்டும் என்று எதிரிகள் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார்கள்!
அந்த வியூகத்தைத் தன்னுடைய மதியூகத்தினால் உடைத்து நொறுக்கியவர் நம்முடைய முதலமைச்சர்!
சென்னை, ஏப்.6 ‘திராவிட மாடல் ஆட்சி’ மகளிருக்காக செய்திருப்பவை சாதாரணமானவையல்ல. நிதி நெருக்கடியில்கூட ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார். ஒன்றிய அரசினுடைய சூழ்ச்சிப் பொறிகள், தந்திரங்களையெல்லாம் முன்கூட்டியே உணரக்கூடிய ஆற்றல், அனுபவம் நம்முடைய முதலமைச்சருக்கு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி தந்தார். ஒரு நாள் காலையில், நம்முடைய தாய்மார்களுடைய வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது. காரணம், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ – அந்த உரிமைத் தொகையை எப்படியாவது தடுத்துவிடவேண்டும், தேர்தல் நேரத்தில் முடக்கவேண்டும் என்று அவர்கள் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார்கள். அந்த வியூகத்தைத் தன்னுடைய மதியூகத்தினால் உடைத்து நொறுக்கியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்
என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘தி.மு.க. திராவிட மாடல் 2.0’
தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்!
3.4.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தி.மு.க. திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அவர்களுடைய கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்களே, ‘‘மோடியா, லேடியா?’’ என்று கேட்டார்.
ஆனால், இப்போது என்னாயிற்று? லேடி இல்லை – மோடிதான் எங்களுக்கு டாடி என்று வெளிப்படையாகச் சொல்வதற்கு அவர்கள் கூச்சப்படவேயில்லை.
ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் கூச்சம் இருக்கும். அதற்குமேல் போனால், கூச்சமே இருக்காது. இவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் வரலாமா?
கட்டிய பணத்தைக்கூட அவர்கள்
திரும்பப் பெறக்கூடாது!
‘‘நமக்குச் சுரணை இருந்தால், நமக்குத் தெளிவான ஒரு நிலை இருந்தால், அவர்கள் கட்டிய பணத்தைக்கூட திரும்பப் பெறக்கூடாது (டெபாசிட் வாங்கக்கூடாது)’’ என்று நாம் உறுதியோடு மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லவேண்டும்.
31 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்தோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த உங்களுக்கு, யார் இப்போது வழிகாட்டுவது? எது உங்களுக்குத் தலைமை நிலையம்? இந்தக் கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.
சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும்,
இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லியி ருக்கிறார்கள் என்றால், ‘‘இந்த இயக்கத்திற்கு என்று தனிக் கொள்கை உண்டு. மதச்சார்பின்மை, மனிதநேயம் – ஏழை, எளியோருக்கு மேம்பாடு, சமூகநீதி, சமத்து வம், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு போன்றவை யெல்லாம்.’’
சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் நாடாளுமன்றத்தில் யாருக்கு வாக்களித்தார்கள்?
இன்றைக்குச் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு யார் என்று சொன்னால், அது திராவிட மாடல் ஆட்சிதானே. இன்னுங்கேட்டால், காங்கிரஸ் உள்பட ஏற்படுத்தியிருக்கின்ற இந்தியா கூட்டணிக்குத்தான் இருக்க முடியுமே தவிர, சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வினர் இருக்கி றார்கள். அவர்களுடன் இருப்பவர்களா சிறுபான்மைக் காவலர்கள்?
நம்முடைய முதலமைச்சர் அவர்களும் கண்டித்திருக்கிறார்!
கிறித்துவ மக்களுடைய கல்வி, மருத்துவம் இல்லா விட்டால், தமிழ்நாட்டில் இவ்வளவு பேர் படித்திருக்க முடியாது. இந்தச் சூழ்நிலையில் கை வைக்கக்கூடிய அளவிற்கு, ‘அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது, வெளிநாட்டிலிருந்து வந்த பணத்தை வாங்கி இங்கே பயன்படுத்துகிறார்கள்’ என்று சொல்லி, அதனை ஒழுங்குபடுத்தக் கூடிய சட்டத்தில் புதிய திருத்தம் என்று சொல்லி, எவ்வளவு வேகமாக, அவர்களை செயல்படாமல் ஆக்க முடியுமோ அப்படி செய்ய முயற்சிக்கிறார்கள்., இன்றைக்குக் கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களாக இருந்தாலும், இதில் கை வைக்கக்கூடிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததை, கேரள மாநிலமும் கண்டித்திருக்கிறது; தமிழ்நாட்டில் உள்ளவர்களும் கண்டித்திருக்கிறார்கள்; நம்முடைய முதலமைச்சர் அவர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
அதேபோல, இன்றைக்கு இஸ்லாமிய சகோதரர்க ளுடைய உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கி்ன்றன.
மதச்சார்பின்மையை ஆர்.எஸ்.எஸ். ஒப்புக்கொள் கிறதா?
அவர்களுடைய கொள்கை என்ன? அதுதான் ஹிந்து மதம். அந்த மதத்தின் பெயரால் ஹிந்துராஷ்டிம், . அதுதானே ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை. அதில்தானே நீங்கள் போய் கலந்திருக்கிறீர்கள்.
எம்.ஜி.ஆரின் கைகளை,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முறுக்கினார்கள்!
இன்னுங்கேட்டால், மண்டைக்காட்டு நிகழ்வில் அறிக்கை கொடுத்தார் என்பதற்காக – டில்லிக்குச் சென்ற எம்.ஜி.ஆர். அவர்களை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், சூழ்ந்துகொண்டு, கைகளை முறுக்கினார்கள். பண்ருட்டி இராமச்சந்திரனும் உடனிருந்தார். இன்றும் அவர் சாட்சியாக இருக்கிறார்.
‘‘உன்னை விற்றுக் கொள்ளாதே!’’
அப்படிப்பட்ட ஓர் அமைப்பிடம், உங்களை முழுக்க முழுக்க அடகு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; விற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ‘‘உன்னை விற்றுக் கொள்ளாதே!’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் ஒரு கவிதையே எழுதினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘‘மதச்சார்பின்மை’’ என்று உங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியி ருக்கிறீர்களே, இதைவிட வெட்கக்கேடு வேறு இருக்க முடியுமா?
இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நகைச்சுவைக்கு இடம் நிறைய இருக்கிறது.
‘‘பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளோம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
தயவு செய்து அதைப் படிப்பவர்கள் கொஞ்சம் நன்றாக கவனிக்கவேண்டும்.
மகளிர் உரிமைத் தொகையாக
ஆயிரம் ரூபாய் கொடுத்தது யார்?
ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக என்று சொல்லியிருக்கிறீர்களே, அந்த ஆயிரம் ரூபாய் கொடுத்தது யார்?
இந்தக் கேள்வியை கேட்கவேண்டாமா?
தி.மு.க. ஆட்சி எதுவுமே செய்யவில்லை என்று ஒரு பக்கத்தில் சொல்கிறார்கள், ஆனால், ஆயிரம் ரூபாயி லிருந்து இரண்டாயிரம் ரூபாயாகக் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?
எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
‘‘மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லாத பேருந்து பயணத் திட்டம்!’’
யாரைப் போல, ‘‘மகளிரைப் போல’’ ஆண்களுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆக, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் யார் கொடுத்தது? இது யாருடைய திட்டம்?
யார், யாரைப் பார்த்துக் காப்பியடித்தது?
அடுத்த வாக்கியத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ‘‘தி.மு.க.வினுடைய தேர்தல் அறிக்கை, எங்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி யடிக்கப்பட்ட திட்டம்’’ என்று.
யார், யாரைப் பார்த்துக் காப்பியடித்தது? இதைவிட ‘டாக்குமெண்டரி புரூப்’ – ஆவண சாட்சியம் வேறு இருக்க முடியுமா?
சொன்னதையும் செய்வோம், சொல்லாதையும் செய்வோம் என்று சொல்வதற்கு அடையாளம்தான் காலை உணவுத் திட்டம்.
காலைச் சிற்றுண்டித் திட்டம்!
பள்ளிக்கூடப் பிள்ளைகள் எவ்வளவு முகமலர்ச்சி யோடு பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்கள். அந்தக் காலைச் சிற்றுண்டித் திட்டம் ஆரம்பப் பள்ளி வரையில்தான் என்று தொடக்கத்தில் சொன்னார்.
அதற்கு முன்பு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் அந்த அளவிற்கு பிள்ளைகள் சேரக்கூடிய வாய்ப்பில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிள்ளைகளும் வீட்டில் சாப்பிடாமல் வருவதால், பள்ளிக்கூடத்தில் மயக்கம் போட்டு விழுவார்கள்; பள்ளிக்கூடத்திலும் சோர்வாக இருப்பார்கள்.
ஆனால், காலைச் சிற்றுண்டித் திட்டம் கொண்டு வந்ததற்குப் பிறகு, அதிகமான பிள்ளைகள் ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் சேருகிறார்கள்.
‘‘தலை வாரிப் பூச்சூடி உன்னைப் – ‘பாட
சாலைக்குப் போ’ என்று சொன்னாள் உன் அன்னை.
சிலை போல ஏன் அங்கு நின்றாய்? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை போட்டு வாங்கவா முடியும்? கல்வி
வேளை தோறும் கற்பதால் படியும்!
மலை வாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வீ!
கடிதாய் இருக்கும் இப்போது – கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
இப்போது யாரும் கண்ணீரைச் சிந்தவில்லை. மகிழ்ச்சியாகப் பள்ளிக்கூடத்திற்குப் போகக்கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
மீண்டும் கோட்டைக்குப் போவது
நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
மே 5 ஆம் தேதிக்குப் பிறகு, மீண்டும் கோட்டைக்குப் போவது நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
காலைச் சிற்றுண்டித் திட்டம் 8 ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.
மாநில அரசுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்ப தற்காக ஒன்றிய அரசு நிதி நெருக்கடியைக் கொடுக்கிறது.
ஒன்றிய அரசிற்கு எத்தனைக் கோடி கடன் இருக்கிறது என்பதை எண்ணிப்பார்த்தீர்களா? கடன் வாங்குவதற்கும், கடன் கொடுப்பதற்கும் ஓர் அரசாங்கத்திற்குக் குறிப்பிட்ட வரையறை இருக்கிறது.
அந்த வரையறைகூட எப்படி என்று சொன்னால், பெருகக் கூடியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இரட்டை என்ஜின் உள்ள மாநிலங்கள்கூட அடையாத வளர்ச்சியை, 11.19 சதவிகித வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. ஒன்றிய அரசு தரும் நிதி நெருக்கடிக்கு இடையில் இந்த வளர்ச்சி.
மும்மொழித் திட்டத்தை ஏற்றால்தான், நாங்கள் நிதி கொடுப்போம் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. அதை எதிர்த்து நம்முடைய அரசு போராடிக் கொண்டிருக்கிறது நீதிமன்றம் வரையில்.
இதையெல்லாம் தாண்டி, தன்னுடைய ஆளுமைத் திறத்தால், நிதி மேலாண்மையில் எப்படி இவ்வளவு சிறப்பாக செய்கிறார் என்பதை நினைத்து எல்லோருக்கும் ஆச்சரியம்.
உங்களுக்குத் தார்மீக உரிமை உண்டா?
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியினர் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்கிறார்களே, அப்படிக் கேட்பதற்கு உங்களுக்குத் தார்மீக உரிமை உண்டா?
மேலும் அ.தி.முக.. தேர்தல் அறிக்கையில் இருக்கும் இன்னொரு வேடிக்கையைச் சொல்கிறேன், ‘‘மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்பிற்கு உட்பட்டு, மாநிலங்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதந்திரமாகச் செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும், பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது உண்மையானால், இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறதே, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறாரா?
எதிர்க்கட்சித் தலைவர் ஏன் அறிக்கை விடவேண்டும் என்று சிலர் புரியாமல் கேட்கிறவர்களுக்குச் சொல்கிறோம், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, ஆளுங்கட்சி உரிமைகளை ஆளுநர் பறித்த நேரத்தில், அதற்காகப் போராடியவர் அவர். அதற்கு ஆதாரங்கள் உண்டு.
அதுபோல, இன்றைய எதிர்க்கட்சித் தலைவரிட மிருந்து ஒரு குறைந்தபட்ச அறிக்கையாவது உண்டா? கண்டிப்பதற்குத் தெம்பு உண்டா? திராணி உண்டா?
மேலும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது,
‘‘12 ஆவது நிதி ஆணையம் முதல் ஒன்றிய நிதி ஆணையங்கள், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை படிப்படியாகக் குறைத்து வருவதைச் சுட்டிக்காட்டி, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிதிப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறையாமல் பெறுவதை வலியுறுத்துவோம்.’’
எங்கே வலியுறுத்தி இருக்கிறார்? இதுவரையில் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்?
யார் நிதியைக் குறைத்தார்களோ, அவர்களிடம் உங்கள் கட்சியை நீங்கள் அடகு வைத்திருக்கிறீர்கள், இது நியாயம்தானா? அவர்களுக்கு சிவப்புக் கம்பளத்தை நீங்கள் விரிக்கிறீர்களே, அது நியாயம்தானா?
அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே, அவர்கள் தமிழ்நாட்டில் ‘‘தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி’’ என்று சொல்கிறார்களே, அதற்கும் தலையாட்டி பொம்மைகளாக, நீங்கள் தலையாட்டுகிறீர்களே, அது நியாயம்தானா?
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலிருந்துதான் இந்தக் கேள்விகளை நான் கேட்கிறேன்.
முன்கூட்டியே உணரக்கூடிய ஆற்றல், அனுபவம் உடையவர் நம்முடைய முதலமைச்சர்!
ஆனால், ‘திராவிட மாடல் ஆட்சி’ மகளிருக்காக செய்திருப்பவை சாதாரணமானவையல்ல. இவ்வ ளவு நிதி நெருக்கடியில்கூட அதனைச் செயல்படுத்தி யிருக்கிறார். ஒன்றிய அரசினுடைய சூழ்ச்சிப் பொறிகள், தந்திரங்களையெல்லாம் முன்கூட்டியே உணரக்கூடிய ஆற்றல், அனுபவம் நம்முடைய முதலமைச்சருக்கு இருக்கிறது.
வியூகத்தைத் தன்னுடைய மதியூகத்தினால் உடைத்து நொறுக்கினார்
அதன் காரணமாகத்தான் அவர் என்ன செய்தார் என்றால், தமிழ்நாட்டில் உள்ள மகளிருக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி தந்தார். ஒரு நாள் காலையில், நம்முடைய தாய்மார்களுடைய வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது. காரணம், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’’ – அது வெறும் சலுகையல்ல, உரிமை, கவுரவம், சுயமரியாதை! அந்த உரிமைத் தொகையை எப்படியாவது தடுத்துவிடவேண்டும், தேர்தல் நேரத்தில் முடக்கவேண்டும் என்று அவர்கள் ஒரு வியூகத்தை வகுத்திருந்தார்கள். அந்த வியூகத்தைத் தன்னுடைய மதியூகத்தினால் உடைத்து நொறுக்கினார்.
உடனடியாக மூன்று மாதத்திற்கும் சேர்த்து ரூ.3 ஆயிரத்தையும், கோடையின் கடுமையைச் சமாளிக்க ரூ.2 ஆயிரத்தையும் சேர்த்து, ரூ.5 ஆயிரத்தைக் கொடுத்திருக்கிறார் என்றால், வருமுன்னர் காப்பது அரசனுடைய கடமை. மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார் நமது முதலமைச்சர் அவர்கள்.
(தொடரும்)
