சென்னை, ஏப்.5- மின்னஞ்சல் முகவரி கொடுக்காவிட்டால் வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிப்பு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உறுதிமொழி பத்திரம்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழிப் பத்திரத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும் என்றும், எந்தவொரு தகவல்களும் விடுபடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஒரு வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரத்தில் சொத்து – கடன் விவரங்கள். குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள், தண்டனை விவரங்கள், கல்வித் தகுதி, பான் கார்டு, வருமான வரி விவரம் தொடர்பு விவரங்கள், சமூக ஊடகக் கணக்குகள் என அனைத்தையும் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதற்கிடையில் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆணைய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை முழுமையாக சமர்ப்பிப்பது சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்படும் உறுதிமொழிப் பத்திரத்தில், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வேட்பாளர்கள் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
நிராகரிப்பு
உறுதிமொழிப் பத்திரத்தில் ஏதேனும் ஒருபகுதி நிரப்பப்படாமல் காலியாக இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் வழங்க வேண்டும். அந்த நோட்டீசைப் பெற்றவுடன், அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய உறுதிமொழிப் பத்திரத்தை வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரும், முழுமையான விவரங்களுடன் கூடிய உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், வேட்புமனு பரிசீலனையின் போது அந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்காவிட்டால் மனு நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Leave a Comment

