‘மீண்டும் வருவது தி.மு.க. ஆட்சியே!’ என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்! ஆரியர் – திராவிடர் போராட்டத்தில் வெற்றி நமக்கே!

ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தயாரிக்கப்பட்டிருப்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை
பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’வும், ‘காட் ஷோ’வும் இங்கே பலிக்காது!
சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!

ஆசிரியர் உரை

Contents

சென்னை, ஏப்.4  தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் ஆரியர் – திராவிடர் போராட்டமே! பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’வும், ‘காட் ஷோ’வும் இங்கே பலிக்காது. மீண்டும் தி.மு.க. ஆட்சியே என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘தி.மு.க. திராவிட மாடல் 2.0’ தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்!

நேற்று (3.4.2026) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘தி.மு.க. திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்குரிய கழகத்தின் துணைத் தலைவர் அவர்களே, வரவேற்புரையாற்றியாற்றி, சிறப்பாகக் கருத்துகளை எடுத்து வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,

இச்சிறப்புக் கூட்ட அறிவிப்பை குறுகிய காலத்தில் அறிவித்தாலும், ஏராளமாக வந்திருக்கக் கூடிய திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, திராவிட இயக்க மற்றும் பொதுவான கருத்துள்ள அருமைத் தோழர்களே, சான்றோர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனை வருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்லின்போது, தேர்தல் அறிக்கை வருவது நடைமுறையே!

தேர்தலுக்கு முன்னால், தேர்தல் அறிக்கைகள் வருவது என்பது நீண்ட காலமாக பல அரசியல் கட்சிகளின் நடைமுறையாகும்.

ஆனால், வாக்காளர்கள், மக்களைப் பொறுத்த வரையில், தேர்தல் அறிக்கைகள் என்பதை அதிகமான அளவிற்கு, குறிப்பாகப் படிப்பது, தெரிந்துகொள்வது, ஆய்வு செய்வது, எதிர்க்கட்சிகள் உள்பட கேள்வி கேட்பது இவையெல்லாம், இதற்குமுன்னால், திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலுக்கு வந்து ஆட்சியில் அமர்ந்து, இந்தக் கொள்கைகளை, மக்கள் மத்தியில் கொள்கைப்பூர்வமாக எடுத்துச் சொன்ன காலத்திற்கு முன்னால், இது ஒரு சம்பிரதாயமாகத்தான் இருந்தது; ஒரு சடங்கு போன்றுதான் இருந்தது.

பல பேர், தேர்தல் அறிக்கையைக் கொடுத்தால், அதை யாரும் புரட்டிப் பார்ப்பதுகூட கிடையாது. தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது.

தங்களுடைய கொள்கைகள் என்ன? என்பதை விளக்கிச் சொல்வதற்குப் பெயர்தான் மேனிஃபேஸ்டோ

உங்களுக்கெல்லாம் தெரியும், ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய மேனிஃபேஸ்டோ என்பதற்கு என்ன பொருள் என்றால், தங்களுடைய கொள்கைகள் என்ன? நிறைவேற்றப் போகின்ற திட்டங்கள் என்ன? என்பதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்வதற்குப் பெயர்தான் மேனிஃபேஸ்டோ.

பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் அல்லது நிறுவுவதற்குக் காரணமான காரல்மார்க்சும், ஏங்கல்சும், கம்யூனிஸ்ட்  மேனிஃபேஸ்டோ என்று பொதுவுடைமைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியபோது, அந்தச் சொல், அதிகமாகப் பரவுவதற்கு வாய்ப்பாக இருந்தது.

அந்த நேரத்தில்கூட, முதன்முறையாக, தன்னுடைய ‘குடிஅரசு’ இதழில், அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மேனிஃபேஸ்டோவை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பெருமை தந்தை பெரியாரையும், அவருடைய சுயமரி யாதை இயக்கத்தையே சாரும்.

அப்படிப்பட்ட மேனிஃபேஸ்டோ  என்பதைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது, ‘கொள்கை அறிக்கை’ யாகும்!

ஆகவேதான், இந்த மேனிபேஸ்டோ என்பது செயல் திட்டம் என்ற அளவில் அது வளர்ந்து, மக்கள் மத்தியில், ‘‘அய்ந்தாண்டுகள் நாங்கள் உங்களுக்காகப் பணியாற்ற வருகிறோம். அப்படிப் பணியாற்ற வருகின்றபோது, என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துவதாக இருக்கிறோம்’’ என்று சொல்வதுதான் ‘கொள்கை அறிக்கை’யாகும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘கொள்கை அறிக்கை’ என்பது மிகச் சிறப்பானதாகும்!

அதை மற்ற இயக்கங்கள் பயன்படுத்துவதைவிட, அண்மைக்காலமாக குறிப்பாக 10 ஆண்டுகளாக எடுத்துக்கொண்டால்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘கொள்கை அறிக்கை’ என்பது மிகச் சிறப்பானதாகும்.

நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதில், மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தினார்கள். கடந்த 2, 3 தேர்தல்களின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறப்பான பெருமை என்னவென்று சொன்னால்,  இந்தியாவில், தேர்தல் நேரத்தில், மிகப்பெரிய ஹீரோ யார் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கைதான் என்று முதலில் அப்போது சொன்னார்கள்.

50 தலைப்புகளில் மிக அற்புதமாகக் கொடுத்திருக்கிறார்கள்!

ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சி என்றாக்கி, இரண்டாவது முறையாகவும் அந்த ஆட்சியமைந்து இன்னும் சிறப்பாக அது தொடரவேண்டும். ஏற்கெனவே வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டை, இன்னொரு கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்பதற்கானத் திட்டங்களைக் கொடுத்ததுதான் ‘சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை 2026’ என்று பேசப்பட்டு, அந்த அறிக்கையில் 50 தலைப்புகளில் மிக அற்புதமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘எங்களுடைய கொள்கை தெளிவான கொள்கை யாகும். எங்களுடைய அடித்தளம், வேர் எங்கே இருந்து வந்திருக்கின்றது’’ என்பதிலிருந்து மிக அழகாக அத்தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதான் இப்போது ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொல்லக்கூடிய அளவில், மிக முக்கியமான அளவிற்கு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.

இந்தக் கொள்கைகள் ஒரு தொடர்ச்சி. இது புதிதாகச் சொல்லக்கூடியதல்ல. ஏனென்றால், அடிப்படைக் கொள்கைகள் என்பது ஒரு நாள், இரு நாள் அல்ல. பல நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்டு, கால் நூற்றாண்டில், அரை நூற்றாண்டிலே அவையெல்லாவற்றையும் சாதித்துக் காட்டக்கூடிய மிகப்பெரிய தேர்தல் அறிக்கை – கொள்கைத் திட்டம்!

அருமைத் தோழர்களே, நீண்ட நேரம் மக்கள் மத்தியில் அவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்காது என்பதற்காகத்தான், ‘திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும் ஏன்?’ என்று தெளிவாக, எல்லோருக்கும் புரிகின்ற வகையில், தங்களுக்கு நேரமில்லை என்று நினைக்கின்றவர்கள்கூட, ஒரு பேருந்தில் பயணம் செய்கின்ற நேரத்திலும் சரி, அல்லது முடி திருத்துகின்ற கடையில் அமர்ந்திருக்கின்ற நேரத்திலும் சரி, வேக வேகமாக இதைப் புரட்டிப் பார்க்கலாம்.

‘திராவிட மாடல் ஆட்சி
தொடரவேண்டும், ஏன்?’

இன்றைக்கு வெளியிடப்பட்டு இருக்கின்ற ‘திராவிட மாடல் ஆட்சி தொடரவேண்டும், ஏன்?’ என்பதைப் புள்ளி விவரங்களோடு, சாதனைகளோடு அதில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

11 தேர்தலையும் பார்த்து,
பங்களித்த ஒருவன் நான்!

இன்னும் சில நாள்களில் இன்னொரு புத்தகம் வெளிவரவிருக்கிறது; அதனுடைய தலைப்பு என்ன வென்றால், ‘பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்தத் தேர்தலிலே தோற்கடிக்கப்படவேண்டும், ஏன்?’ என்பதையும் காரண காரியங்களோடு விளக்கிச் சொல்லக்கூடிய நூலாகும்.

இவையெல்லாம் எதற்காக? திராவிடர் கழகத்தைப்பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். நேரி டையாகத் தேர்தலில் நிற்காத ஓர்  இயக்கம். ஆனால், ஏன் இவ்வளவு அக்கறை என்று சொன்னால், நண்பர்களே, நடைபெறவிருக்கின்ற தேர்தல் – 11 ஆவது தேர்தல் என்ற மிகப்பெரிய பெருமையைப் பெற்றாலும்கூட, என்னைப் பொறுத்தவரையில், எனக்கு ஒரு நல் வாய்ப்பு என்னவென்றால், இந்த 11 தேர்தலையும் பார்த்து, பங்களித்த ஒருவன் என்ற முறையில் பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

அதுமட்டுமல்ல, 11 தேர்தலுக்கு முன்பு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதில்கூட, மாணவப் பரு வத்தில், பணியாற்றக்கூடிய வாய்ப்பை கடலூரில் இருக்கும்போது பெற்றேன்.

ஆகவே, எப்படியெல்லாம் அரசியல் இருக்கிறது; மிகப்பெரிய அளவிற்கு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்புள்ள ஒரு நிலையி்ல், இன்றைக்கு, இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையை வைத்துப் பார்த்தால், இது வெறும் தேர்தல் அல்ல.

ஒரு நாள் போனோம், ஓட்டுப்போட்டோம்; அவ ருக்குப் போட்டால் என்ன? இவருக்குப் போட்டால் என்ன? என்றெல்லாம் விளையாட்டுத்தனமாக ஏதோ, சீட்டுக்கட்டில், சீட்டை எடுப்பது போன்ற தேர்தல் அல்ல.

உங்கள் சந்ததியினரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல்!

நம்முடைய எதிர்காலத்தை, உங்கள் சந்ததியி னரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறவி ருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலாகும்.

அவர்களுடைய தந்திரங்கள் தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. காரணம், இது பெரியார் பிறந்த மண்!

அதை நான் மிகுந்த அக்கறையோடும், மிகுந்த கவலையோடும் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், அடுத்த தலைமுறை எப்படி உருவாகவேண்டும்? இதுவரையில், நம்முடைய தலைவர்கள் எல்லாம் 110 ஆண்டுகால நீதிக்கட்சி. அதற்கடுத்து, திரா விட இயக்கத்தினுடைய சுயமரியாதை இயக்கம் நூறாண்டைத் தாண்டியது. திராவிடர் கழகமாக மலர்ந்து, பிறகு அதில் அரசியல் பிரிவாக, இன்றைக்கு இருக்கக்கூடிய திராவிடமுன்னேற்றக் கழகமாக ஆகி, அதன் ஆட்சி வந்தது என்பது கொள்கைக்கானதாகும். ஆனால், மிகப்பெரிய தந்திரங்களை, சூழ்ச்சிகளை செய்து, மக்களை ஏமாற்றி, எப்படியோ ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். – வடமாநிலங்களில் மொழி வெறியைத் தூண்டி, மதவெறியைத் தூண்டி, ஜாதி வெறியைத் தூண்டி ஆட்சியைப் பிடிக்கிறது. ஆனால், அவர்களுடைய தந்திரங்கள் தமிழ்நாட்டில் பலிக்கவில்லை. காரணம், இது பெரியார் பிறந்த மண்ணாக இருக்கின்ற காரணத்தினால்தான்.

ஆகவே, இங்கே இருக்கின்ற விழிப்புணர்வை, வட மாநிலங்களில் ஏற்படுத்தாத காரணத்தினால்தான், இவர்களுடைய சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் அங்கே உள்ள மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை.

மண்டல் அறிக்கை – வகுப்புரிமை வந்த பிற்பாடுதான், ஓரளவிற்கு, சமூகநீதியைப் புரிந்துகொண்டார்கள். சமூகநீதியை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களே தவிர, மிக முக்கியமாக அதில் இருக்கக்கூடிய மற்ற பிரிவுகள் எல்லாம் அவர்களை எட்டவில்லை.

மனுதர்மத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; மனுநீதியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அத னால்தான்,  குறுக்கு வழியில் அங்கே ஆட்சியைப் பிடிப்பது, தந்திரங்களைக் கையாள்வது, ஏமாற்று வேலைகளையெல்லாம் அங்கே செய்கிறார்கள். ஆனால், இங்கே நடக்கவில்லை.

பிரதமரின் ரோட் ஷோவும், காட் ஷோவும் தமிழ்நாட்டில் நிச்சயமாகப் பயன்படாது!

வேண்டுமானால், மற்ற இடங்களில் ரோட் ஷோ வைக்கலாம்; காட் ஷோ வைக்கலாம் – ரோட் ஷோவும், காட் ஷோவும் தமிழ்நாட்டில் நிச்சயமாகப் பயன்படாது என்பதைப் பிரதமர் மோடியே உணர்ந்துகொண்டார்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கூட்டங்களில் உரையாற்றும்போது, ‘‘அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவேண்டும்; அடிக்கடி அமித்ஷா வரவேண்டும்,  அவர்கள் இங்கே வந்து பேசினாலே போதும் –  நம்முடைய வெற்றி இன்னும் உறுதியாகும். அவர்கள் பேசினாலே போதும், தமிழ்நாட்டு மக்களி டையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார்.

சற்று முன்னர் வந்திருக்கின்ற செய்தியைச் சொன்னார்கள். புதுவையில் ஒரு மணிநேரம் ரோட் ஷோ நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். ரோட் ஷோ முடிந்தவுடன், அவர் உரையாற்றுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்களாம். கையைக் காட்டி விட்டுச் சென்றுவிட்டாராம்.

பாண்டிச்சேரியில், ‘கை’யைக் காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில், உதயசூரியனைக் காட்டுவார்கள்.

‘‘தாம் பேசித் தோற்பதைவிட, பேசாமல் தோற்பது சிறப்பாக இருக்கும்’’ என்பதை உணர்ந்துகொண்டார்!

பாண்டிச்சேரியில், பேசாமலேயே சென்றிருக்கிறார் பிரதமர் மோடி; பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்றால், ‘‘தாம் பேசித் தோற்பதைவிட, பேசாமல் தோற்பது சிறப்பாக இருக்கும்’’ என்பதை உணர்ந்துகொண்டார்.

எனவே, இந்தத் தேர்தல் அறிக்கை என்பது செயல்படக் கூடிய தேர்தல் அறிக்கை என்பதால்தான், இப்போது இரட்டிப்பு மடங்கு முக்கியத்துவம் வந்து விட்டது.

ஒரே ஒரு செய்தி, மே 4 ஆம் தேதிவரையில் நாம் காத்திருக்கவேண்டும். மக்கள் தயாராகிவிட்டார்கள். கட்சிக்காரர்கள், வேட்பாளர்கள்கூட இன்னும் தயாராக வில்லை. ஏனென்றால், இப்போதுதான் சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. அதிலும், அது அகில இந்திய கட்சிகளுடைய தனிச் சிறப்பு.

ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லாத அளவிற்கு, பிரதமர் மோடி, தமிழ்நாட்டுச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். ஒருவேளை அவர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், வரலாம்.

இரண்டு விஷயங்கள் தமிழ்நாட்டில் தெளிவாகி யிருக்கின்றன. ஏற்கெனவே நாம் அச்சார வெற்றிகளைப் பெற்றிருக்கின்றோம்.

திராவிடப் பயிர் வளர்வதற்கு
உரத்தைப் போடுவது போன்று இருந்தது!

அடிக்கடி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு, தொல்லைகளைக் கொடுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அதற்கு வலிமையைக் கொடுத்து, உரம் போட்டுக் கொண்டிருந்த ஒருவர் ராஜ்பவனில் இருந்தார். அவர் எதை வேண்டுமானாலும் பேசுவார்; அவர் பேசப் பேச, திராவிடம் வளர்கிறது. திராவிடப் பயிர் வளர்வதற்கு அவருடைய உரைகள், உரத்தைப் போடுவது போன்று இருந்தது.

அவர், தமிழ்நாட்டில் இருந்தால், நமக்கு வாய்ப்பு இருக்காது என்று நினைத்து, அவரை கொல்கத்தாவிற்குத் தூக்கிவிட்டார்கள். அவர் கொல்கத்தாவிற்குப் போய்விட்டார், டில்லியில் இருப்பவர், டில்லிக்குத் திரும்பிப் போய்விட்டார். அமித்ஷாவிற்கு, தமிழ்நாட்டில் வீடு பார்க்கிறார்கள் என்று சொன்னார்கள், வீடு கிடைக்க வில்லையோ என்னவோ, ஒருவேளை இனிமேல் கிடைக்கப் போகிறதோ என்னமோ?

எனவே, ஒன்று உறுதியாகவிட்டது. என்ன உறுதியாகவிட்டது என்றால், வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, மே 4 ஆம் தேதி, நமக்குத்தான் வெற்றி என்பது உறுதியாகும். எத்தனை எஸ்.அய்.ஆருக்குப் பிறகு, இத்தனைக் கூத்துகளுக்குப் பிறகு, சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு, இப்போது நடக்கின்ற கூத்துகள் இருக்கிறதே, அதிகாரிகள் எல்லாம் திடீர் திடீர் என்று மாற்றப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் எல்லாம் மாற்றப்படுகிறார்கள். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்படுகிறார்கள். இவையெல்லாம் இயல்பாக நடப்பது அல்ல.

இதை யார் சொல்வார்கள் என்றால், மேலிடத்தில் இருந்து சொல்வதைவிட, இங்கே இருக்கின்ற காவிகள் சொல்வார்கள், ‘‘இவர் இருந்தால், நமக்குச் சாதகமாக இருக்காது. அவர் இருந்தால், சாதகமாக இருக்காது’’ என்று.

23 ஆம் தேதியன்று வாக்களிப்பது மக்கள்தான் – அவர்கள் ஏற்கெனவே  முடிவு செய்துவிட்டார்கள்; அந்த முடிவை யாராலும் மாற்ற முடியாது!

எவர் இருந்தால் என்ன? ஆனால், யார் அதிகாரிகளாக வந்தாலும், ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வாக்களிப்பது மக்கள்தான். அவர்கள் ஏற்கெனவே  முடிவு செய்து விட்டார்கள். அந்த முடிவை யாராலும் மாற்ற முடியாது.

ஆகவேதான், திராவிட இயக்கம், திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வருவதற்கு மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு நாளும் பேசும்போது, இப்போதே திராவிட மாடல் ஆட்சி யினுடைய வெற்றிக்கு, ஒவ்வொரு நாளும் அவர்கள் உளறிக்கொண்டே, உதவிக்கொண்டே இருக்கிறார்கள்.

காரணம் என்னவென்றால், எதிர்க்கட்சியினர்  யாரும் மிகப்பெரிய அளவிற்குப் போட்டியை உண்டாக்கு கிறோம் என்று சொல்வதற்கில்லை. அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன, செய்திகள் இருக்கின்றன.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய
ஒப்பற்ற முதலமைச்சர்!

ஒரு கொள்கையைச் சொல்லி, கடந்த அய்ந்தாண்டு காலம், இந்தக் காலத்திற்குள்ளே நடந்த தேர்தல்களில் எல்லாம், வெற்றிகளாகவே அமைத்த பெருமை ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’’ என்று பதவியேற்றார் அல்லவா அது அவருக்கே உரிய ஒன்று. அய்ந்தாண்டுகளுக்கு முன், அந்த மாமனிதரின் உழைப்பில், இன்றைக்கும் தெளிவாக தங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்.

தன்னுடைய பாரம்பரியம் எப்படிப்பட்டது? திராவிடப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வாக்குக் கேட்கிறார்.

ஏனென்றால், நமக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றை மிகப் பெரிய அளவில், சிறப்பாக கொள்கையோடு எடுத்துச் சொல்லுங்கள்.

‘‘நூற்றாண்டைக் கடந்தது திராவிடப் பேரியக்கம்’’ என்றுதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடங்குகிறது.

தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னார், ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அடிவேரையே பிடுங்கப் போகிறேன்’’ என்று சொன்னார்.

‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’’

தமிழ்நாட்டை, வட மாநிலங்கள் போன்று நினைத்துக் கொண்டு பேசிவிட்டார். நம்முடைய நாட்டில் சாதாரணமாக ஒரு கதை உண்டு  – ‘‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’’ என்பதுதான் அது.

தமிழ்நாட்டில் உள்ள சில விபீடணர்களைப் பிடித்து, பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தங்கள் அதி காரத்தை நிலைநாட்டலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணா பெயரை வைத்துத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)யை அடமானம் வைத்துவிட்டார்கள். நெருக்கடி காலத்திற்கு அஞ்சி, அது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஆயிற்று.

‘அகில இந்தியா’ என்ற ஒட்டுப் பெயர்!

நாகலாந்தில் ஒரு பிராஞ்ச்; பஞ்சாபில் ஒரு பிராஞ்ச்; அசாமில் இன்னொரு கிளை; மேற்குவங்காளத்தில் ஒரு கிளை என்று ஏற்பட்டதால், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வரவில்லை. அகில இந்தியா என்ற ஒட்டுப் பெயர் எப்படி வந்தது என்றால், நாங்கள் எல்லாம் ‘மிசா’ சட்டத்தில் சிறைச்சாலைக்குப் போனோம். அதனால், அது அகில இந்திய அண்ணா தி.மு.க. ஆயிற்று.

பெரும்பாலும், அகில இந்திய அண்ணா தி.மு.க. என்று யாரும் சொல்வதில்லை. அண்ணா தி.மு.க. என்றுதான் சொல்கிறார்கள். அந்தக் கட்சியில், இப்போது அண்ணாவும் இல்லை; தி.மு.க.வும் இல்லை; அந்தக் கட்சியும்  இல்லை.

ஒரு வரலாற்றுப் பின்னணியோடு
தி.மு.க. தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு ஒரு கொள்கையோடு இருக்கிறோம் என்று சொல்வதற்கு, ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தி.மு.க. தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இந்தப் பெருமை வேறு எந்த இயக்கத்திற்கும் கிடையாது.

முதல் சொற்றொடரே, முதல் வாக்கியமே, ‘‘நூற்றாண்டைக் கடந்தது திராவிடப் பேரியக்கம்’’ – இதற்குள் என்ன இருக்கிறது?

1916 இருக்கிறது. 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில், ஆட்சியைக் கைப்பற்றி யது. சமூகநீதி, சமுதாய சீர்திருத்தம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு, மகளிர் உரிமைகள், உட்கட்ட மைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்கிய நீதிக்கட்சியின் ஆட்சி, சென்னை மாகாண மக்களின் வாழ்க்கையையும் – மாகாணத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளி விளக்காக அமைந்தது.

நீதிக்கட்சி ஆட்சி என்ற சிறப்பான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு முன்னோடி!

இத்தனைக்கும் அன்றைக்கு அதிகாரமே இல்லாத ஒரு சூழ்நிலை. ஏனென்றால், மாண்டேகு-செம்ஸ்போர்டு என்று இரட்டை ஆட்சி – (Dyarchy)  என்று சொன்ன நேரத்தில், அதிகாரம் எல்லாம் லண்டனில்தான். கேட்டுக் கேட்டுத்தான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலையிலும்கூட, அவ்வளவு குறுகிய இடத்தில்கூட, அற்புதமாக சாதனை செய்த ஆட்சிதான், நீதிக்கட்சி ஆட்சி என்ற சிறப்பான திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் ஆட்சி.

திராவிட மாடல் ஆட்சியில் கொள்கைகள் எவை என்று சொன்னால்,

சமூகநீதி, சமுதாய சீர்திருத்தம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு, மகளிர் உரிமைகள், உட்கட்ட மைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்கிய நீதிக்கட்சியின் ஆட்சி, சென்னை மாகாண மக்களின் வாழ்க்கையையும் – மாகாணத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளி விளக்காக அமைந்தது.

பெண்களுக்கு வாக்குரிமையை முதன்முதலில் கொடுத்த இயக்கம்!

நண்பர்களே, நினைத்துப் பாருங்கள், பனகல் அரசருடைய ஆட்சி ஒப்பற்ற ஆட்சியாகும். கல்விக் கண்ணைக் கொடுத்தது மட்டுமல்ல, பெண்களுக்கு வாக்குரிமை என்பது இந்தியாவில், வேறு எங்கும் கிடையாது; ஏன், உலகத்தில் பல முன்னேறிய நாடு களில் கிடையாது. முதன் முறையாக அதைச் செய்த பெருமை திராவிட ஆட்சி ஒன்றே என்று சொல்லக்கூடிய அந்த முன்னோடியான நீதிக்கட்சி ஆட்சியில்தான்.

அப்படிப்பட்ட மிகப்பெரிய ஒரு வளர்ச்சியைப் படைத்த அடித்தளம் எங்கே இருந்தது?

‘‘1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கி, சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதி – தமிழர் உரிமைகள் – தமிழ்ப் பாதுகாப்பு – பெண் விடுதலை – ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் – பொதுவுடைமை’’

‘‘பொதுவுடைமை’’ அதற்கடுத்து ‘‘பொது உரிமை’’ என்பதுதான் மிக முக்கியம்!

‘‘பொதுவுடைமை’’ மட்டுமல்ல நண்பர்களே, அற்புத மான ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குறிப்பாக கனிமொழி போன்றவர்கள், உறுப்பினர்கள் அத்துணை பேரும் நம்முடைய பாராட்டுதலுக்கும், வாழ்த்து தலுக்கும் உரியவராவார்கள்.

‘‘பொதுவுடைமை’’ அதற்கடுத்து ‘‘பொது உரிமை’’ என்பதுதான் மிக முக்கியம். பொதுவுடைமையைப் பேசினால் மட்டும் போதாது. நம்முடைய நாட்டில் முதலில் பேசவேண்டியது பொது உரிமை என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.

பெரியாரை முதலில் சொல்லித்தான்
தேர்தல் அறிக்கை தொடங்குகிறது!

‘‘1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கி, சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதி – தமிழர் உரிமைகள் – தமிழ்ப் பாதுகாப்பு – பெண் விடுதலை – ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் – பொதுவுடைமை’’ – பொது உரிமை ஆகிய விழுமியங்களைத் தமிழ்ச்சமூகத்தின் வேர்கள் வரை தனது பரப்புரை மூலமாகக் கொண்டு சேர்த்தார் தந்தை பெரியார்.’’

பெரியாரை முதலில் சொல்லித்தான் தேர்தல் அறிக்கை தொடங்குகிறது. இதனால்தான் எதிரிகளுக்கு ஆத்திரம். அதனுடைய விளைவு என்ன? இலை மறை காய்மறையாக முன்பு இருந்தது. இப்போது இரண்டு அணியாக இருக்கிறது.

இப்போது நடைபெறுவது
ஆரிய – திராவிடப் போராட்டமே!

அதனால்தான், ‘‘தமிழ்நாடு பிராமணர் சங்கம்’’ செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது – ‘‘23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவாகத் தெரிந்துவிட்டது அல்லவா! இப்போது நடைபெறுவது ஆரிய – திராவிடப் போராட்டம் என்று. இதுவரையில், அப்படி இப்படி இருந்தவர்கள், இன்றைக்கு வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

வருகின்ற தேர்தலில் ‘‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சி களின் வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்று தீர்மா னிக்கப்பட்டுள்ளது’’ என்று சொல்லிவிட்டு, கடைசியாக,

‘‘பல ஆண்டுகளாக எங்களது வாக்கு வங்கியினை உருவாக்குவதில் முனைந்து செயலாற்றி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். பல தொகுதிகளில் எங்களது வாக்குகள் தேர்தல் முடிவினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு ஆற்றிடும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, இப்போது போராட்டம் மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் என்பது வெட்ட வெளிச்சமாக, யாருக்கும் குழப்பமில்லாமல் பளிச்சென்று தெரிகிறது.

இன்றைக்குக் களம் தெளிவாக ஆகியிருக்கிறது. அதைக் கொள்கை ரீதியாக எடுத்துச் சொல்லவேண்டும்.

மனுதர்மப்படி, எல்லோரும் படிக்கக் கூடாது. இன்னார்க்கு இதுதான். சமதர்மம் என்றால் என்ன?  அடிப்படை சமதர்மக் கொள்கை, சமூகநீதியைப்பற்றியெல்லாம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

சமத்துவத்தை உருவாக்குவதற்கு உழைத்த இயக்கங்கள்தான், நம்முடைய முன்னோடி இயக்கங்கள்!

சமூகநீதி என்று சொல்லக்கூடிய வாய்ப்புகள் ஏன் தேவைப்பட்டது? ஏற்கெனவே மனுதர்மத்தால், சமூக அநீதி ஏற்பட்டது. அதனால் நாம் வஞ்சிக்கப்பட்டோம். கோடான கோடி மக்கள், பெரும்பான்மையான மக்கள், உழைக்கின்ற மக்கள், மண்ணுக்குரிய மக்களாகிய நாம் பாதிக்கப்பட்டோம். அதை நமக்குச் சுட்டிக்காட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி, நம்மையும் மனிதர்கள்தான் என்ற சமத்துவத்தை உருவாக்குவதற்கு உழைத்த இயக்கங்கள்தான், நம்முடைய முன்னோடி இயக்கங்கள். அதனுடைய திரட்சிதான், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி.

அந்த ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன? என்பதைப்பற்றியும் தெளிவாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

இவர்கள் சாதனை, சரித்திர சாதனை!

இவர்களுடைய சாதனை கற்பனையல்ல, கனவல்ல!

திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள், சினிமாவில் தோன்றுவதுபோலவோ, ‘அவதாரம்’ போலவோ ‘திடீரென்று’ முதலமைச்சர் என்று ‘திடீரென்று’  வரவில்லை. அவருடைய பொதுவாழ்க்கை இளைஞரணியில் தொடங்கியது.

கொள்கை வாரிசுகள்தான் தேவை!

‘‘கலைஞருடைய மகன் என்று சொன்னால்,  வாரிசு, வாரிசு என்று சொல்கிறார்கள். கொள்கை வாரிசுகள்தான் தேவை. அப்பா ஓர் இயக்கம்; மகன் வேறொரு இயக்கம் என்றால், அது சரியாக இருக்காது.

சில குடும்பங்களில் இருப்பார்கள், அதில் புதுச்சேரியில் ஒரு கட்சியில் இருப்பார்கள். தமிழ்நாட்டில் வேறொரு கட்சியில் இருப்பார்கள். அம்மா வேறொரு கட்சியில் இருப்பார்; அவருடைய மகள், இன்னொரு கட்சியில் இருப்பார். மருமகன், ஒரு புதிய கட்சியை உருவாக்குவார். இதுபோன்றெல்லாம் இருப்பது மற்றவர்களுக்குப் பெருமையாக இருக்கலாம்; அல்லது பணம் அதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

ஆனால், இந்த இயக்கத்தைப் பொருத்தவரையில், சுயமரியாதைக்காரன் பிள்ளை, சுயமரியாதைக்காரனாகவும், திராவிட இயக்கக் கொள்கைக்காரர்கள், திராவிட இயக்கக் கொள்கைக்காராகவும், கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்றவர்களின் பிள்ளைகள், கம்யூனிஸ்ட்டாக இருப்பதும் கொள்கைகளின் அடிப்படையில்தான்.

அரசியலில் என்ன இலாபம், நட்டம் என்று கணக்குப் போட்டு வருவதல்ல.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் எழுதியிருக்கிறார்,

‘‘நாங்கள் எல்லோரும் வீட்டில் சாப்பிடுவதற்காக அமர்ந்திருக்கும்போதுகூட, ‘பெரியார், அண்ணா  கொள்கைகளைத்தான் கலைஞர் சொல்லிக் கொடுப்பார்’’ என்று.

பழுத்த அனுபவமும், சிந்தனை வளமும், மக்கள் மத்தியில் எது தேவை என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்!

இளைஞரணியிலிருந்து உருவாகி, பிறகு ஒவ்வொரு அனுபவத்தையும் பெற்று, சிறைச்சாலையில் அடிபட்டு, கிளர்ச்சிகளை நடத்தி, பிறகு பொதுவாழ்க்கைக்கு வந்து, அதில் வெற்றி – தோல்விகளையெல்லாம் கண்டு, அதையும் தாண்டி மிகப்பெரிய அளவிற்கு சென்னை நகரத்திற்கு மேயராகி, பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராகி, அதற்கடுத்து துணை முதலமைச்சராகி, கட்சியைப் பொறுத்தவரையில், கலைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காலத்தில், ‘தி.மு.க.வின் செயல் தலைவராகி’ இயக்கத்தைத் தொடர்ந்து வழிநடத்தக் கூடிய அனுபவத்தைப் பெற்றவராகி, பழுத்த அனுபவமும், சிந்தனை வளமும், மக்கள் மத்தியில் எது தேவை என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள ஒருவர்தான், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர், திராவிட மாட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார்கள்.

எனவே, ஸ்டாலின் ஆட்சி என்று சொன்னால், அனுபவத்தில் கனிந்த ஓர் ஆட்சி. பண்பு நிறைந்த அவருடைய அணுகுமுறை என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது.

எல்லோரும் என்ன நினைத்தார்கள்? தி.மு.க. கூட்டணி நிலைக்காது; உடைந்து போகும்; அவர் போய்விடுவார், இவர் போய்விடுவார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், வரவேண்டியவர்களே வந்துள்ளார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் பேசாமல் போகக்கூடிய அளவிற்குத்தான் நிலைமை உள்ளது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *