இப்படியும் கண்ணுக்குத் தெரியாத பெரியார் பெருந் தொண்டர்கள்!
மதிப்பிற்குரிய அய்யா அவர்கட்கு வணக்கம் பல.
என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
பெயர்: வீ. நடராசன், வயது 91 (6.4.1934).
பிறந்து வளர்ந்த ஊர்: திருமலை ராயன்பட்டினம், காரைக்கால் (புதுச்சேரி மாநிலம்)
படிப்பு: பி.ஏ. (தமிழ்)
கல்லூரி: குடந்தை அரசினர் கலைக் கல்லூரி (1953–1957).
ஜாதி: நான் பிறந்த ஜாதி – சைவ வேளாளர்.
குறிப்பு: இங்கு நான் ஜாதியைக் குறிப்பிடுவதன் காரணம் பொதுவாக உயர் ஜாதி என்று கருதப்படு பவர்கள் தந்தை பெரியாரைப் புரிந்து கொள்வதில்லை; பாராட்டுவதில்லை என்ற கருத்து பரவி உள்ளது.
உண்மை என்னவென்றால், பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், பிற மொழி பேசும் பார்ப்பனர் அல்லாத மக்கள், இவர்களின் இதயத்தில் பெரியார் நிரந்தரமாக வாழ்கிறார் என்பதுதான் உண்மை.
தந்தை பெரியாரைப் பற்றி நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது – 1947இல் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்புத் தோழர் ஒருவர் மூலம்!
அய்யாவை நேரில்பார்த்தது (1953–1954) – குடந்தை Victoria Jublee Park. தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டது – குடந்தை, தஞ்சை (ஜாதி ஒழிப்பு மகா நாடு) பல முறை நெய்வேலியில், மன்னை, திருமலை ராயன் பட்டினம் (சொந்த ஊர்), நாகை – முதலிய இடங்களில்.
நான் வேலை பார்த்தது – Neyveli Lignite Corporation (1960–1992) – எனக்கு நெய் வேலியில் வேலை கிடைத்ததற்கு காரணம்: நெய்வேலி 2–இல் அய்யா பேசிய பொதுக் கூட்டம்; ‘விடுதலை’யில் ‘இது நெய்வேலியா? பூணூல் வேலியா?’ என்று எழுதிய தலையங்கமும், கட்டுரையும்தான்.
அய்யாவின் முகத்தை கடைசியாக பார்த்தது 1973 டிசம்பர் 24 இரவு இராஜாஜி மன்றம்.
நான் இக்கடிதத்தை எழுதுவதின் நோக்கம் ‘நான் இறக்கும்போது ஒரு கருஞ்சட்டைத் தொண்டனாக – பெரியாரின் சீடனாக இறக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தான்.
விரைவில் பெரியார் திடல் வந்து கழக உறுப்பினராக பதிவு செய்து கொள்வேன்.
– வீ. நடராசன்
வண்டலூர்
