உத்தரகாண்ட் மாநிலத்தின் கோயில் நகரமான அரித்துவாரில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து இறைச்சிக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு அரித்துவாரில் கும்பமேளா நடை பெற உள்ளது.
இந்த விழாவின் போது லட்சக்கணக்கான துறவிகள் அரித்துவாருக்கு வருகை தருவார்களாம். அவர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண் டும், இந்துக்களின் மனம் புண்படாத வகையிலும் ‘புனித’த் தன்மையைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நகரின் அனைத்து வார்டுகளிலும் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்றுவது அல்லது மூடுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
கடைகள் மட்டுமின்றி, உணவு விடுதிகள் இறைச்சி உணவுகளைப் பரிமாறுவதற்கும் தடை விதிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். அரித்துவார் ஒரு ‘புனித’த்தலம் – அதனால் அதன் ஆன்மிகச் சூழலைப் பராமரிக்க இத்தகைய முடிவுகள் அவசியம் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட உள்ள இந்த அதிரடி முடிவு, தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரித்துவாரும், ஹரிகி குண்ட் மற்றும் ஜதாத்பூர் இம்மூன்றுமே 1950 ஆண்டுவரை பழங்குடியினர் மற்றும் இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த நகரங்கள் ஆகும்; மெல்ல ஆர்.எஸ்.எஸ்., விசுவஹிந்து பர்ஷத் போன்ற அமைப்புகள் பழங்குடியினரை மூளைச் சலவை செய்து இசுலாமியர்களுக்கு எதிராகத் திருப்பின.
தற்போது அரித்துவாரில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 30 விழுக்காடு உள்ளது. பழங்குடியினரும், தாழ்த்தப்பட்டச்சமூகத்தினரும் 40 விழுக்காடு உள்ளனர்.
வெறும் 20 விழுக்காடு மட்டுமே உயர்ஜாதியினர் – அதிலும் பார்ப்பனர்கள் 0.9 விழுக்காடு மட்டுமே உள்ளனர். அரித்துவாரைப் பொறுத்தவரையில், அங்கு பெரும்பான்மையான இந்துக்களும் இறைச்சி உண்பவர்கள் தான். 0.9 விழுக்காடு பார்ப்பனர் களுக்காக, 90 விழுக்காடு மக்களின் புரத உணவில் கைவைத்துள்ளது இரட்டை எஞ்சின் பாஜக அரசு!
இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அதற்கான பரிசோ தனைக் கூடமாக வடமாநிலங்களில் பல முக்கிய நகரங்களை மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு என்பது ஒருவரின் தனி நபர்ப் பிரச்சினை! அதில் கொண்டு போய் தங்களின் மத உணர்வு மூக்கை நுழைப்பது நேர்மையானது தானா – மனிதத் தன்மையுடையதுதானா? என்ற கேள்வி கண்டிப்பாக எழவே செய்யும்.
உண்மையைச் சொல்லப் போனால் மாட்டுக் கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் பிஜேபியினர்தான் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக 2024–2025 நிதியாண்டில் மாட்டுக்கறி இறைச்சி ஏற்றுமதி சுமார் 4.16 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
இந்த மாட்டுக்கறி நிறுவனங்கள் பிஜேபிக்கு நன்கொடைகளை வாரி வழங்குகின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனமான ‘அலானா குரூப்’ பிஜேபிக்கு நன்கொடையாக ரூ.30 கோடி வழங்கியுள்ளது.
உள்நாட்டில் ‘பசுப் பாதுகாப்பு’ப்பற்றி நீட்டி முழங்கும் கட்சியினரின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது அசல் நகைமுரணே!
‘‘கும்பமேளா நடக்கும்போது இறைச்சி உண்ணக் கூடாது – இறைச்சிக் கடைகள் இருக்கக் கூடாது’’ என்று எந்தக் கடவுள், யாரிடம் நேரில் வந்து சொன்னதாம்? ஏதோ, எவரோ கிறுக்கி வைத்தது எல்லாம் மத நம்பிக்கை என்று கூறி, அடுத்த மனிதனின் தனிப்பட்ட உரிமையில் ‘ஆட்சி– அதிகாரம்’ இருக்கின்ற காரணத்தால் தலையிடுவது எவ்விதத்திலும் சரியல்ல – இது அப்பட்டமான மனித உரிமை மீறல் அன்றி வேறென்ன?
