சென்னை, ஏப. 4- சென்னை மற்றும் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் எரிபொருள் தட்டுப் பாட்டால் கடும் நெருக்கடியில் உள்ளனர். எரிபொருள் நிரப்பப் பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். விலையும் உயர்ந்துள்ளதால் அவர்களின் தினசரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கில் ஆட் டோக்கள் மணிக்கணக்கில் காத் திருக்கின்றன. மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளதால் தேவை அதிகமாக உள்ள பீக் ஹவரில் அவர்களால் சவாரியை எடுக்க முடிவதில்லை. இதனால் பல ஓட்டுநர்கள் வருவாயை இழக்கின்றனர். எரிவாயு விலையும் கூட ஒரு கிலோ ரூ.76 என்பதில் இருந்து கிட்டத்தட்ட ரூ.100ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படுகிறது.
நீண்ட காத்திருப்பு, அதிகரித்த எரிபொருள் செலவு ஓட்டுநர்களைக் கடும் நிதி நெருக்கடியில் தள்ளி யுள்ளது. ஹார்மூஸ் நீரிணையில் வழக்கமான கப்பல் போக்குவரத்து திரும்பாத சூழலில், எரிபொருள் வரத்து மற்றும் விலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு பெட்ரோலியம் நிறுவனங்கள் விலையை உயர்த்தவில்லை என்ற போதிலும் நாயரா எனர்ஜி, ஷெல் இந்தியா போன்ற தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்திவிட்டனர்.
பொதுமக்கள்
இதனால் ஆட்டோ ஓட்டு நர்கள் மட்டும் பாதிப்பை எதிர் கொள்வதில்லை. பயணிகளும் கூட சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அதாவது பீக் ஹவரில் தேவைப்படும் நேரத்தில் ஆட்டோ கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனால் பயணிகள் ஒரு ஆட்டோவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அப்படியே ஆட்டோ கிடைத்தாலும் வழக்கத்தை விட அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படி இது இரு தரப்பையுமே கடுமையாகப் பாதிக்கிறது.
பெங்களூர்
சென்னை மட்டுமின்றி பெங்களூரிலும் இதே நிலை தான்.. பெங்களூரில் ஆட்டோக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், சேஷாத்ரிபுரம், பசவேஸ்வரா நகர் உள்ளிட்ட எல்பிஜி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர்கள் எரிபொருளைத் தேடியே 10 கி.மீட்டருக்கும் மேல் பயணிக்க வேண்டி உள்ளது. ஹலசூரு, ஆடுகோடி, இந்திரா நகர் போன்ற பகுதிகளிலும் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெங்களூரில் ஒரு லிட்டர் எல்பிஜி விலை ரூ.59-லிருந்து ரூ.85 – ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சில தனியார் நிலையங்கள் ரூ.115 வரை விற்கப்படுகிறது. கோடை விடுமுறை பள்ளி சவாரிகள் குறைத்ததால், பல ஓட்டுநர்கள் வழக்கமான பயணிகளை மட்டுமே நம்பி போராடி வருகின்றனர். அப்படியிருக்கும்போது நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பக் காத்திருப்பது அவர்கள் வருவாயைப் பாதிக்கிறது.
சிக்கல்
தனியார் எல்பிஜி நிலையங்களில் விலை ஏறிவிட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளுக்கு வருகிறார்கள். இதனால் கூட்டம் அங்கு அதிகரிக்கிறது. அதேநேரம் தற்போதைய சூழலில் அரசு பங்குகளில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

