மே.து. ராசுகுமார்
தமிழ் மண்ணைத் தொட்டவுடன் தலைமை அமைச்சர் மோடிக்குத் தமிழ் மொழி மீது பற்றுத் தோன்றிவிடும். தேர்தல் பரப்புரை என்றால் கேட்கவே வேண்டியதில்லை.
புதுச்சேரிச் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் உரையாற்ற வந்த மோடி, வழக்கம் போலத் ‘தமிழ் இனிமையான அருமையான மொழி; தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது’ என்று தனது தமிழ்ப் பற்றைப் பறைசாற்ற முயன்றிருக்கிறார்.
உதட்டில் உலவவிடும் தமிழின் பெருமை மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை வளைத்திடப் போதுமானது என்பது மோடியின் மனக் கணக்கு.
ஆனால், அவருடைய ஆட்சியின் நடவடிக்கைகளோ, பா.ச.க., ராட்ரிய சுய சேவக் சங் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளோ தமிழ்ப் பண்பாட்டைப் போற்றுவதாக என்றுமே இருந்ததில்லை.
கீழடி ஆய்வினை முடக்க முயற்சி
தமிழ்ப் பண்பாட்டுத் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில் கீழடியில் அகழ்வினை நடத்திய அமர்நாத் ராமகிருட்டிணன், அறிவியல் அடிப்படையிலான 982 பக்க அறிக்கை ஒன்றினை 2023 சனவரியில் கொடுத்திருந்தார். இந்த அறிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கீழடி அறிக்கையினை வெளியிடுமாறு ஆணை பிறப்பித்தும் மோடியின் பா.ச.க. அரசு தமிழின் பெருமையை வெளியிட மறுத்து வருகிறது.
அத்துடன், கீழடியின் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து அய்ந்தாம் நூற்றாண்டு வரை என அந்த அறிக்கை கூறுவதை, ஒன்றிய மோடி அரசின் தொல்லியல் துறையிலிருக்கும் ஸநாதனிகள் ஏற்கவில்லை. அதனைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குக் கீழாகக் கூறித் திருத்துமாறு அறிவுறுத்துகின்றனர். ஆனால், கீழடி அகழ்வினை மேற்கொண்ட அமர்நாத் அதற்கு உடன்படவில்லை.
தமிழின் பெருமையை மோடி பேசிய ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் கீழடி அறிக்கை தெளிவில்லாமலும் முழுமையில்லாமலும் இருப்பதாகக் கூறி, மீண்டும் கீழடியில் ஆய்வு செய்து வேறொரு அறிக்கையினை வழங்குமாறு ஒன்றியத் தொல்லியல் துறை கேட்டுள்ளது.
கீழடியின் தொன்மை வெளியுலகுக்குத் தெரிந்தவுடன் அகழ்வாளர் அமர்நாத் வேறிடத்துக்கு மாற்றப்பட்டார். சிறீராம் என்றொருவர் அமர்த்தப்பட்டு, கீழடியில் மேலும் அகழ்வு செய்ய எதுவுமில்லை என்று ஸநாதனிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அறிக்கை பெறப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆணையையடுத்து, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அகழ்வுகளைத் தொடர்ந்து, அமர்நாத் ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், மறு ஆய்வு, வேறு அறிக்கை, திருத்திய கால எல்லைகள் என அமர்நாத்திடம் பணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ச.க. உள்ளிட்ட அ.இ.அ.தி.மு.க. அணி வென்றால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தொடர்ந்துவரும் கீழடி மற்றும் பிற அகழ்வுகளை முடக்கி, தமிழ்ப் பண்பாட்டுத் தொன்மையை மறைக்கும் வகையில் மாற்ற முயலலாம் என பா.ச.க. எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
பெருமை பேசித் தமிழ்ப்
பண்பாட்டை மறுக்கும் மோடி
பண்பாட்டை மறுக்கும் மோடி
தமிழின் பழமையையும் திருக்குறள் பெருமையையும் புகழ்ந்துகொண்டிருக்கும் மோடி, தமிழின் தொன்மையைக் காட்டும் கீழடி அறிக்கையினை வெளியிடத் தயங்கிறார்.
மோடியும் பா.ச.க.வும் அவர்களை வழிநடத்துகின்ற ஸநாதனிகளும் தமிழின் தொன்மையை ஏற்றுக்கொள்ள எப்போதுமே விரும்பியதில்லை. இதனை அவர்களுடைய செயல்பாடுகள் எப்போதும் உறுதிப்படுத்துகின்றன.
ஒருபுறம் மோடி தமிழின் பெருமையைக் கூறினாலும், தமிழ்நாட்டிலுள்ள பா.ச.க.வினர் எவரும் தமிழின் தொன்மையை ஏற்க எப்போதும் முன்வந்ததில்லை.
கீழடி மற்றும் பிற அகழ்வுகளில் வெளிப்பட்ட தமிழின் தொன்மை, இரும்பின் காலம் கி.மு. 3395ஆம் ஆண்டு (சிவகளை), நெல் பயிரின் காலம் கி.மு. 1145க்கு முன்னர், எழுத்துக்கள் கி.மு. 685க்கு முன்னரே தோன்றிவிட்டன என்பன போன்ற சிறப்புகளைத் தமிழ்நாட்டிலுள்ள பா.ச.க. தலைவர்கள் என்றும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை. அதைப் பற்றிப் பேசியதுமில்லை; எழுதியதுமில்லை; பெருமைப்பட்டதுமில்லை.
தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது தமிழ்ப் பண்பாடு தொடர்பான இடங்களுக்கும் அருங்காட்சிய கங்களுக்கும் செல்ல முடியாமல் மோடி இருக்கலாம்.
பண்பாட்டு இடங்களைப்
பார்வையிடாத மோடி
பார்வையிடாத மோடி
ஆனால், கங்கைகொண்டசோழபுரம், திருப்பரங்குன்றம் போன்ற கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்திய மோடி, கடந்த 12 ஆண்டுகளில் பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்தும், பெரும்பாலும் வேறு கோயில்களுக்குச் சென்று வழிபட்டதில்லை.
தேர்தல் நெருங்கியதால் கடந்த ஆண்டு கங்கைகொண்டசோழபுரத்திலும், தேர்தல் வந்துவிட்டதால் தற்போது திருப்பரங்குன்றத்திலும் வழிபாடு நடத்தி, கடவுளர்களைக் கட்சி அரசியலுக்கு இழுத்திருக்கிறார்.
குமரி விவேகானந்தர் நினைவிடம் சென்று ஆழ்ந்த அமைதி நிலை கண்ட மோடி, அப்பொழுதெல்லாம் கோயில்களை நாடிச் செல்லவில்லை.
அதேபோன்று, தமிழரின் பண்டைய பண்பாட்டினை நிலைநாட்டும் கீழடி அருங்காட்சியத்தைப் பார்வையிட மோடி செல்லவில்லை. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற அகழ்விடப் பொருள்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்தின் பொருநையாற்றங்கரையில் 13.20 ஏக்கர் பரப்பில் புதுப்பொலிவுடன் வைக்கப்பட்டிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
மோடி இருக்கட்டும்; அவருக்கு ஆயிரம் பணிகள் என்று கூறலாம். ஆனால், ஒன்றியத் தொல்லியல் துறைப் பொறுப்பிலிருக்கும் ஒன்றிய பண்பாட்டுத் துறை அமைச்சர்கூடத் தமிழகத்தின் தொன்மையைக் காட்டும் அகழ்விடங்களுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் பார்வையிடச் செல்லவில்லை.
ஒன்றியப் பண்பாட்டு அமைச்சரோ, வேறு ஒன்றிய அமைச்சர்களோ, தமிழ்நாட்டின் பா.ச.க.வினரோ தமிழின் தொன்மை, பண்பாடு, சிறப்பு ஆகியன குறித்து வாய்தவறிக்கூட மோடியை வழிமொழிந்து பேசியதில்லை.
புறக்கணிப்பை மறைக்கப் புகழுரைகள்
நிதிப் பங்கீட்டுக் குறைவு, தொழில் திட்டங்களில் புறக்கணிப்பு, நுழைவுத் தேர்வுதி தீணிப்பு, பள்ளிக்கல்வி உதவித்தொகை மறுப்பு, குடிநீர்த் திட்டச் செலவு நிறுத்தம், மெட்ரோ மறுப்பு, தொடர்வண்டி விரிவாக்கம் இல்லாமை என இன்னும் பல்வேறு முனைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதை மறைக்க, தமிழின் பெருமை கூறும் சொற்களே போதுமானது என்று மோடி நினைக்கிறார். இதற்கு மேல் நாம் ஏன் பேசவேண்டுமென ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டுப் பா.ச.க.வினரும் வாய்மூடி நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 97% மக்கள் பகுதியினர் கோவில்களில் வழிபாடு செய்விப்போராகப் பணி பெறுவதை பா.ச.க.வினரும் ஸநாதனிகளும் ஏற்கவில்லை. ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் இதற்கு ஒத்துழைக்கின்றன.
100% தமிழர்களுக்குப் புரியாத சமக்கிருத மொழிக்கு மாறாகத் தமிழில் வழிபாடு நடத்துவதை இவர்களில் எவரும் ஏற்கவில்லை. தமிழ் பழமையான மொழி என்றால், வழிபாடு நடத்தும் தகுதியில்கூட பெறவில்லையா என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும்.
தமிழ்நாட்டுக் கடவுளர்களைச்
ஸநாதனிகள் ஏற்கவில்லை
ஸநாதனிகள் ஏற்கவில்லை
அயோத்தியில் கோயில் குடமுழுக்கு நடந்தபோது, தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அந்நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த உள்ளரங்குத் திரைகள் அமைக்கப்பட்டன. மக்களது நம்பிக்கையை அறுவடை செய்யப் பா.ச.க. தலைவர்கள் பலரும் இவற்றில் பெருமளவில் கலந்துகொண்டு மோடி அரசின் மாபெரும் செயல்பாடாகக் கட்டமைக்க முயன்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் பெருமைப்படுகின்ற, பெருமளவில் மதிக்கின்ற தஞ்சை பெரிய கோயில், பழனி, பேரூர் போன்ற சிறப்பு மிக்க கோயில்களில் குடமுழுக்கு நடந்தபோது தமிழ்நாட்டிலுள்ள பா.ச.க.வினரும் ஸநாதனிகளும் கண்டுகொள்ளவேயில்லை.
இந்தக் கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகள் தமிழிலும் நடைபெறவேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உயர் நீதிமன்றம்தான் தமிழ் நிகழ்வுகளை உறுதிசெய்து தந்தது.
தமிழ்க் கடவுளர்களையும் தமிழ்நாட்டுக் கடவுளர் களையும் வட நாட்டார் மட்டுமன்றித் தமிழ்நாட்டிலுள்ள ஸநாதனிகளும் பா.ச.க.வினரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
காசித் தமிழ்க் கூடலில்
பண்பாட்டுப் புறக்கணிப்பு
பண்பாட்டுப் புறக்கணிப்பு
காசித் தமிழ்க் கூடல் என்னும் ஸநாதன நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து சென்ற மாணவர்களுக்கு, வடபுலத்துப் பண்பாடு அறிமுகம் செய்யப்படவில்லை. மாறாக, ஹிந்திதான் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள கோயில்களுக்குத்தான் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏனெனில் நோக்கம் அதுதான்.
உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழ்நாடு வந்தபோது, தமிழ் கற்பிக்கும் போர்வையில், இங்குள்ள கோயில்களுக்கே அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று, பண்பாட்டுச் சிறப்பிடங்களை அவர்களுக்குக் காட்டவில்லை. ஏனெனில். நோக்கம் அதுவல்ல.
பா.ச.க. ஏற்க வாய்ப்பில்லாத
அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
அ.இ.அ.தி.மு.க. அறிக்கை
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.இ.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொன்மை அகழ்வுகள், இரு மொழிக் கொள்கை போன்றன உள்ளடங்கியுள்ளன.
இவை அனைத்துமே ஒன்றிய அளவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள பா.ச.க.வினரால் ஏற்றுக் கொள்ள இயலாதவை. பா.ச.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இவையெல்லாம் இடம்பெறும் வாய்ப்பிருக்கப்போவதில்லை.
மேலும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மாநில உரிமை குறித்தும் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது. ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, என்பதையும் அண்ணாவின் குரலாக எடுத்துரைக்கத் தவறவில்லை.
இவற்றை எவ்வகையிலும், எக்காலத்தும் ஏற்காத பா.ச.க.வினரோடு அணி அமைத்துக் களம் காணும் அ.இ.அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தாலும் மாநில உரிமைகளுக்காக போராடப் போவதில்லை.
வேண்டிப் பெறுவோம் – வற்புறுத்திப் பெறமாட் டோம், ஒத்துழைப்பில் பெறுவோம் – ஓங்கி ஒலித்துப் பெறமாட்டோம் என்றெல்லாம் முன்கூட்டியே அறிவித்துவிட்ட அ.இ.அ.தி.மு.க., பத்து ஆண்டு கால ஆட்சியில் எதையும் ஒத்துழைத்துப் பெற்றதாகத் தெரியவில்லை.
சுருங்கச் சொன்னால், பா.ச.க.வின் கொள்கைகள், கோட்பாடுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் ஆகிய அனைத்தையும் நிறைவேற்றித் தர மட்டுமே எதிர்க் கூட்டணி ஏற்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் நடந்தது இதுதான். ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் நடக்கப் போவதும் இதுதான்.
தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழர் நலம், தமிழர் வாழ்வுரிமை, தமிழர் ஆட்சியுரிமை என அனைத்துக்கும் பகையாக எப்போதுமே பா.ச.க. இருந்துவருகிறது.
இதனால், ஸநாதன அணியை முறியடிக்க நடக்கும் தேர்தல் இது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகவே புரிந்துகொண்டுள்ளனர்.
நன்றி: ஜனசக்தி 05.04.2026
