உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம், அம்மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதையும், அதிகார வர்க்கத்தின் திமிரையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மருத்துவப் பயனாளிகளின் உயிர் காக்க ஓட வேண்டிய 108 ஆம்புலன்ஸ்கள், இன்று வாரணாசியின் மண்டி மார்க்கெட்டில் தர்பூசணி பழங்களை ஏற்றி வந்து வியாபாரம் செய்யும் வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் குடும்ப நிலத்தில் விளையும் தர்பூசணிகளைச் சந்தைக்குக் கொண்டு செல்ல, அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் சாதாரணமானதல்ல. “ஆம்புலன்ஸ் சும்மா தானே நிற்கிறது” என மருத்துவமனை ஊழியர்களே கூறும் அளவுக்கு நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருப்பது வேதனையானது. ஏழை மக்கள் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் திண்டாடும் சூழலில், ஆளுங்கட்சியினரின் தனிப்பட்ட லாபத்திற்காகப் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.
இரட்டை எஞ்சின் அரசு எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியில், அரசு இயந்திரம் ஒரு தனிநபரின் வீட்டு வேலைக்காரனைப் போலச் செயல்படுவது ஜனநாயகத்தின் வீழ்ச்சியையே காட்டுகிறது. தர்பூசணி ஏற்றிச் செல்லும் நேரத்தில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கோ அல்லது பிரசவ வலியால் துடிக்கும் ஒரு பெண்ணுக்கோ இந்த வாகனம் தேவைப்பட்டிருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்?
மோடியின் உன்னத தொகுதி என்று கூறும் வாரணாசியில், அரசு மருத்துவமனையே வியாபாரக் கூடாரமாக மாறியிருப்பது கண்டிக்கத் தக்கது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ‘மக்களுக்கான அரசு’ என்பது வெறும் காகிதப் பேச்சாகவே முடிந்துவிடும்.
