மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி
ஒடுக்கப்பட்ட மக்களில் ஏறத்தாழ 20 சதவீதம் மக்கள் ஈழவர்கள். சமூக ஒடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள், கல்வி மறுக்கப்பட்ட அவர்கள், அவர்களை விட கீழ் நிலையில் இருந்த புலையர், பறையர் போன்ற சமூகத்தினரை கேவலமாக நடத்தினர். கோயில் தெருக்களில் நடக்கக் கூட உரிமை மறுக்கப்பட்ட புலையர், பறையர், குறவர் ஆகிய தாழ்ந்த நிலை ஜாதிக் கூட்டத்தில் ஈழவர்களும் இருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் புலையர் போன்ற மக்களைக் கீழானவர்களாகவே நடத்தினர். சிறீநாராயண குருவின் அறிவுரைகள் ஈழவ மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
“சிறயின் கீழ்” என்ற ஊரில் ஒரு ஆங்கிலப் பள்ளித் துவக்கப்பட்டது. நாயர் குழந்தைகள் நிறையப் பேர் அங்கு படிக்கத் துவங்கினர். நிர்வாகம் நான்கு ஈழவப் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தது. அந்தப் பிள்ளைகளால் தங்கள் பிள்ளைகள் அசுத்தமாகி விட்டார்கள் என்று கூறி நாயர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பையே நிறுத்தி விட்டார்கள். அதே பள்ளியில் இரண்டு புலையர்கள் பிள்ளைகள் சேர்க்கப்பட்டபோது, ஈழவ பிள்ளைகளின் படிப்பை ஈழவர்கள் நிறுத்தி விட்டனர்.
இந்த ஜாதிய வேறுபாட்டைக் கண்டித்து அய்யன்காளி சிறீ மூலம் மக்கள் சபையில் பேசினார். 22.2.1915 கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்களே புலையக் குழந்தைகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதைச் சுட்டிக்காட்டி மனம் வருந்தி மக்கள் சபையில் பேசினார்.
அவர் எவ்வளவு போராடினாலும் தீண்டப்படாத வர்களின் பள்ளிச் சேர்க்கை கனவாகவே இருந்தது. வெங்கனூரில் சாவடி அரசாங்கப் பள்ளியில் சேர்க்க சில புலையக் குழந்தைகளுடன் அய்யன்காளி சென்றார். பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களை துரத்த முயன்றார். அதற்குள் புலையர்கள் பள்ளிக்குள் நுழைந்த செய்தி ஊருக்குள் பரவியது. உடனே மேல்ஜாதிக்காரர்கள் திரண்டு வந்து அய்யன்காளியையும், அவரது தோழர்களையும் தாக்கினர். இந்தக் கலகம் மெல்ல மற்ற ஊர்களுக்கும் பரவத் தொடங்கியது.
இந்தக் கலவரங்களை அடக்கும் வகையில், கல்வி இயக்குநர் 1914இல் ஒரு கடுமையான உத்தரவைப் பிற்பித்தார். கல்வி இயக்குநர் மிச்செல் நேரடியாகப் பள்ளிகளுக்கே சென்று ஆணை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கத் துவங்கினார். இதனால் கோபமுற்ற மேல்ஜாதியினர் அவர் காரைக் கடத்திச் சென்று எரித்து விட்டனர். அதிகாரி மிச்சல் அதைக் கண்டு கலங்கவில்லை. உறுதியாக நின்றார். அவர் உறுதியால்தான் புலையர், பறையர், குறவர் குழந்தைகள் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். ஆனால், பிரச்சினைகள் அதோடு முடியவில்லை.
அசுத்தமான, கருப்பு நிறக் கீழ் ஜாதிப் பிள்ளைகளோடு, எங்கள் பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து படிக்க விட மாட்டோம்” என்று நாயர், ஈழவர் போர்க்கொடி உயர்த்தினர்.
புலையக் குழந்தைகள் வகுப்பிற்குள் நுழையும்பொழுது, மேல்ஜாதிக் குழந்தைகள் வகுப்பை விட்டு வெளியேறினர். இது கல்வியதிகாரி மிச்சலுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்தது. மிச்சல் கடுமையாக மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட்டார். ஜாதியின் காரணம் கூறி மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் தலைமையாசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவ்வாணைக் கூறியது.
இதைத் தவிர்க்க மேல் ஜாதியினர் வேறொரு தந்திரம் செய்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பே ஏராளமான மேல்ஜாதிக் குழந்தைகள் பள்ளிகளில் நிரப்பப்பட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பொழுது, கீழ்ஜாதிக் குழந்தைகள் வந்த பொழுது, பள்ளிகளில், “இடமில்லை” என்ற அறிவிப்புப் பலகையே அந்தக் குழந்தைகளை வரவேற்றது. இது மீண்டும் மோதலுக்கு வழிவகுத்தது.
அய்யன்காளி தங்கள் இல்லத்துப் பிள்ளைகளைப் படிக்க வைக்க அவர்களுக்கென்று தனிப் பள்ளிகள் அமைப்பது ஒன்றுதான் வழி என்று எண்ணி, தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனியாக பள்ளி அமைக்க அரசுக்கு மனு கொடுத்தார். அவர்கள் சங்கத்தின் சார்பில் வெங்கனூரில் 1914ஆம் ஆண்டு, “புதுவல் வளாகம் மலையாள பிரைமரி ஸ்கூல்” என்ற பெயரில் பள்ளி நடத்த அனுமதி வழங்கியது.
ஏற்கெனவே அய்யன்காளியும் அவர் நண்பர்களும், சேர்ந்து 1905ஆம் ஆண்டு சொந்தமாக “தரையில் எழுதும் பள்ளிக்கூடம்” ஒன்றை நடத்தி வந்தனர். 1914இல் அரசாங்கம் கொடுத்த அங்கீகாரத்தால் பள்ளிக்கூடமாக அது உருவானது. ஆரம்பத்தில் முதல், இரண்டாம் வகுப்புகள் மட்டுமே இருக்கும் பள்ளிக் கூடமாக அது உருவானது.
பள்ளிக் கூடம் கடும் முயற்சியில் உருவாயிற்று. வகுப்பெடுக்க ஆசிரியர்? புலையர் சமுதாயத்தில் அய்யன்காளி உட்பட படித்தவர்கள் யாருமே இல்லை. மேல்ஜாதிக்காரர்கள் அசுத்தமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு வருவார்களா? அப்பொழுது ஆசிரியர் ஊதியம் ஆறு ரூபாய்! புதுவல் வளாக பள்ளியில் பணியாற்ற வந்தால் ஊதியம் ஒன்பது ரூபாய் என்று அரசு அறிவித்தது.
பள்ளிக்கு ஆசிரியரைத் தேடி அய்யன்காளியும், நண்பர்களும் அலைந்தனர். இறுதியில் திருவனந்தபுரத்தில் உள்ள “கைதமுக்கு” என்ற ஊரைச் சேர்ந்த பரமேஸ்வரன் பிள்ளை என்பவர் அந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்ற சம்மதித்தார். கைதமுக்கிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் வெங்கனூர் உள்ளது.
தீண்டப்படாத குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வந்த மேல்ஜாதி ஆசிரியரைப் பார்க்க வெங்கனூர் மக்கள் பள்ளிக்கு அருகே திரண்டிருந்தனர். அவர்கள் ஆசிரியர் பரமேஸ்வரன் பிள்ளையைப் பார்த்துக் கூக்குரலிட்டனர்.
அவர் துணிச்சலாக அவற்றைப் பொருட்படுத்தாமல் வகுப்பறைக்குள் சென்று வகுப்பு எடுக்கத் துவங்கினார். அந்தப் பள்ளியின் ஒன்றாம், இரண்டாம் வகுப்பு படிக்க வந்த மாணவர்கள் பெரும்பாலும் இளமைப் பருவத்தைக் கடந்தவர்கள் என்பதுதான் சோகமான செய்தி.
தங்கள் எதிர்ப்பையும் மீறி வகுப்பு எடுக்க வந்த பரமேஸ்வரன் பிள்ளையைத் தாக்க மேல்ஜாதிக்காரர்கள் ஏற்பாடு செய்தனர். அதை அறிந்த அய்யன்காளி தன் படையினரோடு சேர்ந்து அந்த எதிர்ப்பை முறியடித்தார். பரமேஸ்வரன் பிள்ளையின் பாதுகாப்புக் கருதி தினமும், அவரோடு அவர் ஊரான கைதமுக்குக்குப் போய் அவரை விட்டு வரவும்,காலை நேரம் போய் அழைத்து வரவும் அய்யன்காளி ஏற்பாடுகள் செய்தார்.
பரமேஸ்வரன் பிள்ளையின் ஜாதிக்காரர்களும் அவரைக் கடுமையாக எதிர்த்தனர். அவரை ஜாதி விலக்கம் (பிரஷ்டம்) செய்யும் எல்லை வரை அவர்கள் துணிந்தனர். ஆனால், பரமேஸ்வரன் பிள்ளை அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்து தன் ஆசிரியர் கடமையை நிறைவேற்றினார்.
கீழ்ஜாதிக்காரர்களுக்கு சொல்லிக் கொடுத்ததால், அவர்களைப் பார்ப்பதால், அவர்களைத் தொடுவதால் அவர் அசுத்தமாகி (தீட்டாகி) விட்டார் என்றுதான் அவருக்கு இவ்வளவு எதிர்ப்பும். ஜாதியையும், ஜாதிச் சட்டங்களையும் வைத்துக் கொண்டு மேல்ஜாதி நம்பூதிரிப் பார்ப்பனர்களும், அவர்கள் அடிமைகளாகச் செயல்பட்ட சூத்திர நாயர்களும் தீண்டல், தொடீல் மட்டுமின்றி கல்லாமையையும் கீழ்ஜாதிக்காரர்கள் மீது திணித்தக் கொடுமை திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதுமே நடந்ததென்பதுதான் சோகம்.
1914ஆம் ஆண்டு நெய்யாற்றின்கரை அரசாங்கப் பள்ளியில் ஒரு புலையர் ஜாதியைச் சேர்ந்த 8 வயது பெண்ணைச் சேர்க்க அழைத்துச் சென்றார். தலைமையாசிரியர் புலையர்களை பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டார். அய்யன்காளி அப்பொழுது சிறீமூலம் மக்கள் சபை உறுப்பினர்.
அந்தப் பொறுப்பில் இருந்தும் அவருக்கு மறுப்பே பதிலாகக் கிடைத்தது. அய்யன்காளி தன் நண்பர்களோடு சென்றிருந்தார். அரசின் ஆணையை தலைமை ஆசிரியரிடம் காண்பித்தும் தலைமையாசிரியர் அந்தப் பெண் குழந்தையைச் சேர்க்க மறுத்து விட்டார். அதற்குள் மேல்ஜாதிக்காரர்கள் பள்ளியில் திரண்டு விட்டனர். அய்யன்காளியின் நண்பர்களுக்கும், மேல்ஜாதிக்காரர்களுக்கும் பெரும் சண்டை மூண்டுவிட்டது.
இந்தப் பள்ளிக்கு புலையப் பெண் நுழைந்ததால் பள்ளியே தீட்டாகிவிட்டது என்று கூறி மேல்ஜாதியினர் அன்றிரவே பள்ளிக்கு தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். இந்தச் செய்தி வெளியே பரவியதும் நெய்யாற்றின் கரையிலும், அருகில் இருந்த ஊர்களில் எல்லாம் பெருங்கலவரம் வெடித்தது. 1915ஆம் ஆண்டு (மலையாள ஆண்டு 1090) நடந்த இந்தக் கலவரத்திற்கு, “தொண்ணூறாம் ஆண்டு கலவரம்” என்றே இன்றும் கேரளாவில் அழைக்கப்படுகிறது.
இனக்கலவரம் பெரும் கொடுவிளைவுகளை நாட்டில் உண்டாக்கிறது. “புலையர் கலகம்” என்று பேசப்பட்ட இந்தக் கலகம் நாயர்களுக்கும், புலையர்களுக்கும் நடந்த இந்தக் கலகம் மூலம் மீண்டும் புலையர்களை அடிமை நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று மேல்ஜாதியினர் திட்டமிட்டே, கூலிப் படைகளை வைத்து நடத்தினர்.
1914இல் மீண்டும் புலையர்களை பள்ளிகளில் சேர்க்க புது ஆணையொன்றை பிறப்பித்தது. அய்ந்தாம் வகுப்பு படித்தபின், மேலே படிக்க வேண்டுமென்றால் திருவல்லாவில் உள்ள அரசாங்கப் பள்ளியில்தான் சேரவேண்டும். அரசின் கண்டிப்பான உத்தரவால் மூன்ற புலையக் குழந்தைகள் அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கீழ்ஜாதியைச் சேர்ந்த குழந்தைகளால் தங்கள் குழந்தைகள் அசுத்தமாகிவிட்டனர் என்று கூறி, அந்தப் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் நிறுத்திவிட்டனர். அதனால் அந்தப் பள்ளியையே பிள்ளைகள் இல்லாமல் மூட வேண்டியதாயிற்று.
அப்பொழுதும் ஆத்திரம் தீராத மேல்ஜாதி காலிகள் அந்தப் பள்ளிக்கும் நெருப்பு வைத்து எரித்தனர். விவேகானந்தர் பள்ளி என்ற பெயரில் இன்றும் இயங்கும் அந்தப் பள்ளிக்கு அன்று “நெருப்பு வைத்தப் பள்ளி” என்றே அழைக்கப்பட்டது.
(சான்று: “மகாத்மா அய்யன்காளி’
– நிர்மால்யா)
(தொடருவேன்…)
