வி.சி.வில்வம்
பெரியார் தொண்டர்களில் அதிக வயதைக் கடந்து முன்னணியில் இருப்பவர் அய்யா வீ.மு.வேலு. பெங்களூரில் (இப்போது பெங்களூரு) வசிக்கும் அவரை, ‘விடுதலை – ஞாயிறு மலரு’க்காகச் சந்திக்கச் சென்றோம். 106 வயதில் ஒருவரால் 2 மணி நேரம் அமர்ந்து பேச முடியுமா? வாருங்கள் அவரிடமே கேட்போம்!
அய்யா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? தங்களின் அன்றாடப் பணிகள் குறித்தும் கூறுங்கள்?
தமிழ்நாட்டின் செஞ்சி அருகே இருக்கும் அவலூர்பேட்டை தான் எனது சொந்த ஊர். 17.09.1920 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் இருச்சம்மாள்-முருகேசன். 1914 காலகட்டத்தில் அப்பா இராணுவத்தில் பணிபுரிந்தார்கள். ஓரளவு புகழ்பெற்ற குடும்பம் எங்களுடையது. என்னுடன் பிறந்தோர் 7 பேர். நான் ஏழாவது வரை படித்துள்ளேன். அதன் பின்னர் பெங்களூரில் உள்ள அத்தை வீட்டிற்கு வந்துவிட்டேன். 15 வயதில் வந்த எனக்கு, இப்போது 106 வயது ஆகிறது.
60 ஆண்டுகளாக ‘விடுதலை’ வாசிக்கிறேன். அதுமட்டுமின்றி இதர நாளிதழ்கள், நூல்கள் என எனது வாசிப்பை நான் விடவில்லை. குறிப்பாகக் கண்ணாடி அணியாமல் படிக்கிறேன். நான் இயற்றிய நாடகங்களைப் புத்தகமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
திராவிட இயக்க உணர்வு தங்களுக்கு எப்போது, யாரால் ஏற்பட்டது?
ஏழாவது படிக்கும் போது, எங்கள் ஆசிரியர் இராமலிங்கம் அவர்களால் இந்த உணர்வு கிடைத்தது. அவர்தான் பெரியார் கொள்கையைச் சொல்லிக் கொடுத்து, பகுத்தறிவுச் சிந்தனையைக் கற்றுக் கொடுத்தார். பாடல்கள் எழுதி மேடையில் பாடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தார். 1938 ஆண்டு பெரியார் அவலூர்பேட்டை வந்திருந்தார். நிகழ்ச்சி தொடங்குமுன் நான் ஒரு பாடல் பாடினேன். “ஊரை ஏய்க்கின்ற ஆசாமிகள் உண்டு நாட்டிலே; ஒரு சாண் வயிற்றுக்காக ஆண்டவன் பெயரையும் சந்துக்கு இழுக்கிறார்கள் ஒரு பாட்டிலே”, எனத் தொடங்கும் பாடல் அது. அக்கூட்டத்தில் 20 பேர் இருந்தார்கள், அனைவருமே கல் எறிவதற்காக வந்தவர்கள்.
நான் பாடி முடித்ததும் என் மீது கல் எறிந்தார்கள். நான் மயங்கிய நிலையில், புகையிலை பயிர் செய்யும் தோட்டத்தில் என்னை வீசிவிட்டார்கள். பிறகு என்னை வீட்டிற்குத் தூக்கி வந்து மஞ்சளை வைத்து ஒத்தடம் கொடுத்து, மண்ணாங்கட்டியை அடுப்பில் சூடு செய்து, ஈரத்துணியால் கட்டியும் ஒத்தடம் கொடுத்தார்கள். கிராமத்தில் அப்போது எந்த மருத்துவ வசதியும் கிடையாது.
பெங்களூர் வந்த பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?
அத்தை மாமா இருந்த காரணத்தாலும், வேலை வாய்ப்புத் தேடியும் இங்கு வந்தேன். நான் முதன்முதலில் வந்து இறங்கியது, லால்பார்க் சாலையில் உள்ள காதர்ஷெரீப் கார்டன் பகுதிக்குத் தான்! முழுவதும் குடிசைப் பகுதிகள். பாமாயில் தகர டப்பாவை சேர்த்து, மேற்கூறை அமைத்திருப்பார்கள். அப்போது வீட்டு வாடகை எட்டணா. நான் திராவிடக் கொள்கையில் இருந்ததால், யாரைப் பார்த்தாலும் வணக்கம் அய்யா, வணக்கம் அம்மா என்று கூறுவேன். அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.
தமிழ்நாட்டில் ஓரளவு நான் படித்த காரணத்தால், இங்குள்ள சிறுவர்களுக்கு அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன். எனவே ஒரளவு அறிமுகமும் ஆனேன். பெங்களூரில் “தோல் ஷாப்” என ஒரு பகுதி இருந்தது. அதுதான் பின்னாளில் ‘பெரியார் நகர்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு கழகத் தோழர்கள் 15 பேருக்கு மேல் இருந்தார்கள். கருப்புச் சட்டை அணிந்து, அவர்களுடன் அறிமுகம் ஆனேன். “கண்டோன்மெண்ட்” அருகே ‘பெரியார் நகர்’ இப்போதும் இருக்கிறது.
அந்தப் பகுதியில் நடந்த கூட்டத்திலும் பாடல் பாடத் தொடங்கினேன். “கருப்புச் சட்டை படையில் சேரணும்; நம்மை கண்டவுடன் பார்ப்பான் எல்லாம் ஓடணும்” என்று பாடுவேன். பின்னாளில் லால்பார்க் பகுதியில் “திராவிட வாலிபர் கழகம்” என்கிற அமைப்பையும் தோற்றுவித்தோம்.
பெங்களூரில் என்ன பணி செய்தீர்கள்?
பெங்களூர் வந்த புதிதில் பல்வேறு வேலைகளைச் செய்தேன். பின்னர் ‘மெக்கானிக்’ வேலை கற்றுக் கொண்டு, வாகனங்களை இயக்கத் தொடங்கினேன். பிறகு முறைப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றேன். அப்போது காவல்துறைதான் உரிமம் வழங்குவார்கள். இந்தச் சூழலில் பெங்களூர் மாநகராட்சியில் ஓட்டுநர் பணி கிடைத்தது. மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் சற்றொப்ப 40 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
எந்த சாஸ்திர, சம்பிரதாயங்களும் நான் கடைப்பிடிக்க மாட்டேன். ஆயுதபூஜையிலும் பங்கேற்க மாட்டேன். ஆனால் வேலையில் ஓர் ஒழுங்கு முறையோடு நடந்து கொள்வேன். பணி நிமித்தமாய் யாரும் என்னைக் குறை சொல்ல முடியாது. அதிலும் அக்காலத்தில் பார்ப்பனர்களே அதிகாரிகளாக இருந்தார்கள்.
தந்தை பெரியாரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறதா?
பெங்களூரில் இரண்டு முறை பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தி இருக்கிறோம். தவிர பெரியாரை தமிழ்நாட்டிலும் இரண்டு , மூன்று முறை சந்தித்துள்ளேன். அதிலும் ஒரு பெரிய வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு உண்டு. எங்களின் முதல் மகளுக்குப் பெரியார் “நாகமணி” எனப் பெயர் சூட்டினார்.
நாகம்மையார் – மணியம்மையார் என இரண்டு பெயரும் இடம் பெறுவது போல அது அமைந்திருந்தது. எங்களின் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு நேசமணி, செல்வமணி, வீரமணி, சங்கமணி என நான் பெயர் சூட்டினேன்.
எங்களுக்கு 5 பிள்ளைகள். அனைவருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான். ஒரு மகனுக்கு மா.நன்னன் அவர்களும், அடுத்த மகளுக்கு ஆசிரியரும் நடத்தி வைத்தார்கள். எனது திருமணமும் சுயமரியாதை முறையிலே நடந்தது. அன்னை மணியம்மையார் அவர்களின் சித்தப்பா மகன் தமிழரசன் எனக்குச் செய்து வைத்தார். இவர் பெங்களூர் மாநகராட்சியில் பணிபுரிந்தவர்.
ஏராளமான நாடகங்கள் எழுதியுள்ளதாக அறிந்தோம், அதுகுறித்துக் கூறுங்கள்?
ஆமாம்! மகரஜோதி, அம்பேத்கர், கட்டைவிரல், கருஞ்சிறுத்தை, மாதா கோயில் மணியோசை, கல் சுமந்த கசடர்கள், அம்மன் அருள், பரஞ்சோதியார், கார்த்திகை தீபம், வேலுநாச்சியார், திப்புசுல்தான், ஓம்சக்தி, நவீன நந்தனார், சத்ரபதி சிவாஜி, கஜினிமுகமது, புரட்சிக்கவிஞன், பகத்சிங், சந்திரகுப்த சாணக்கியன், சுபாஷ் சுந்தரபோஸ், செருப்படி மாரியம்மன், செவ்வாய்தோஷம், காசியாத்திரை, வைகுண்ட ஏகாதேசி உள்ளிட்ட 86 நாடகங்கள் எழுதியுள்ளேன். அவற்றை நூலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
எனது நாடகங்களை எம்.ஆர்.ராதா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பல ஆளுமைகளும் பாராட்டி உள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏழு நாடகங்களைத் தலைமையேற்றி நடத்தித் தந்தார்கள். பெரியார் திடலிலும் ஆசிரியர் அவர்கள் எனது நாடகத்தை அரங்கேற்றினார்கள். பெரியார் கொள்கைத் தொடர்பான பட்டயப் படிப்பும் (DPT – Diploma in Periyar Thoughts) முடித்துள்ளேன்.
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
ஆசிரியர் அவர்கள் பி.ஏ., மாணவராக இருந்த போதே, பெங்களூருக்கு அழைத்துக் கூட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்குப் பிறகு ஏராளமான நிகழ்ச்சிகளில் ஆசிரியர் கலந்து கொண்டுள்ளார்கள். நானும் ஆசிரியர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிற்கு நிறைய முறை போயிருக்கிறேன்.
சென்ற மாதம் கூட பெங்களூரில் நிகழ்ச்சிக்கு வந்த ஆசிரியர், எங்கள் வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துச் சென்றார்கள். இந்தப் பகுதி முழுக்கவே பரபரப்பாகக் காட்சி அளித்தது. 50 க்கும் மேற்பட்டோர் கருச்சட்டையுடன் வந்திருந்தனர். இந்தப் பகுதி மக்களுக்கு ஒரு வாரம் இதே பேச்சுதான்.
‘பெரியார் உலகம்’ எனும் பகுதியைத் தமிழர் தலைவர் ஆசிரியர் உருவாக்கி வருகிறார்கள். அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை. பெரியார் உருவாக்கிய இயக்கச் சொத்துகளைப் பல நூறு மடங்கு அதிகமாக்கி சாதனைப் புரிந்தவர் நம் ஆசிரியர் அவர்கள். இன்றைக்குப் பெரியார் உலகத்திற்கு இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள் என்றால், அவையனைத்தும் ஆசிரியர் மீது வைத்துள்ள அன்பினால் மட்டுமே”, எனத் தம் 106 வயதிலும் கொள்கை உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கிறார் சுயமரியாதை வீரர் வீ.மு.வேலு அவர்கள்!
