பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் பெண்களின் நிலை!

மகளிர் ஆணையத் தலைவியே சாமியாரோடு சேர்ந்து நூற்றுக்கணக்கானப் பெண்களை நாசம் செய்த நிகழ்வு – அதிர்ச்சியானக் கொடூரம் தற்போது மராட்டிய அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.

மகாராட்டிர மாநில அரசியலில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைக்குரிய காணொலிகள் அம்மாநிலத்தின் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக, மகளிர் ஆணையத் தலைவி மற்றும் ஒரு மாநில அமைச்சர் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சாமியாரோடு மகளிர் ஆணையத் தலைவி

மும்பையில் மதுக்கூடம் ஒன்றில் நடன மாதுவாகப் பணிபுரியும் பெண் ஒருவர் மராட்டிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “குடும்பச்சிக்கல் தொடர்பாக சாமியாரை அணுகிய போது அவரும், மிகவும் முக்கியமான ஒரு பெண்மணியும் தனிமையில் இருந்தனர். அவர்கள் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அதைப் படமாக எடுத்து பெரிய திரையில் இருவரும் ஒன்று சேர்ந்து பார்த்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒரு பேட்டி மராட்டிய அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே?

அந்த நிகழ்வை கிட்டத்தட்ட மராட்டிய மக்கள் அனைவரும் மறந்தே போனார்கள்.

யார் அந்தப் பிரபலப் பெண்மணி? யார் அந்தச் சாமியார்?

மகாராட்டிர மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ரூபாலி சக்கன்கர், சாமியார் அசோக் காரத்.

சாமியார் மீது புகார் – கைது!

மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த அந்த நடனமாதுவின் ஊடகப்பேட்டியைத் தொடர்ந்து எழுந்த புகார் காரணமாக சாமியார் அசோக் காரத் கைது செய்யப்பட்டார்.

இவர்  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, ஆபாசக் காணொலி எடுத்து மிரட்டியதாக நாசிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ரூபாலி சக்கன்கர் மகாராட்டிரா மாநிலத்தின் மகளிர் ஆணையத் தலைவியாகப் பதவிக்கு வருவதற்கு முன்பு – அரசியலில் இருக்கும்போது மிகவும் குறுகிய காலத்திலேயே அஜித்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியில் மிகவும் முக்கிய பதவி இவருக்குக் கிடைத்தது.

இவரது சொத்து மதிப்புக் குறித்தும் பெரும் விவாதம் நடந்து வருகிறது.

பாதங்களைக் கழுவி, நீரைக் குடித்த அவலம்!

மாநில மகளிர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டே சாமியாரின் பாதங்களைக் கழுவி அந்த நீரைக் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி உள்ளது.

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய உயரிய பதவியில் இருப்பவர், பெண்களுக்கு எதிரானக் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவருடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது தார்மீக ரீதியாகத் தவறு என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

இதனைத் தொடர்ந்து, மகாராட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அறிவுறுத்தலின்படி அவர் தனது பதவியிலிருந்து 2026 மார்ச் 20 அன்று விலகினார்.

மந்திரம் கற்றவராம்!

ரூபாலிக்கும். அந்தச் சாமியாருக்கும் பல ஆண்டுகளாக நெருக்கமானத் தொடர்பு இருந்தது.

சாமியார் சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்ததால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் உயர் பதவிக்கு வந்ததாக அவரே ‘மும்பை மிண்டே’ என்ற மாலை இதழுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டியளித்திருந்தார். 2021ஆம் ஆண்டிலிருந்து இவர் தொடர்ந்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருந்தார். இவரே பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து அதைப் படமாக எடுத்து சாமியாரும், இவரும் தனிமையில் பார்த்து ரசிப்பார்கள் என்றால் இவரிடம் நீதி கிடைக்கும் என்று புகார் மனுவைக் கொடுத்த பெண்களின் நிலை என்னவாயிருக்கும்?

ரூபாலி சக்கன்கர் தனது பதவியைப் பயன்படுத்தி அசோக் காரத்திற்கு எதிரானப் புகார்களை மறைக்க முயன்றதாகவும், அவருக்கு எதிராகச் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா அந்தாரே (Sushma Andhare) பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், ரூபாலி சக்கன்கர் ‘மந்திர வித்தைகளை’ (Tantravidya) கற்றுக்கொண்டதாகவும் ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தந்த அழுத்தத்தால், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவரைப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது இது குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுரை, ஞாயிறு மலர்

அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் திருநங்கை காணொலி சர்ச்சை

மகாராட்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் சம்பந்தப்பட்ட காணொலி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் தனது அரசு அதிகாரப்பூர்வ இல்லத்தில் திருநங்கை ஒருவருடன் ஆட்சேபனைக்குரிய நிலையில் உள்ள காணொலி இணையத்தில் கசிந்தது. அதில் பலவித அசைவ உணவுகள், வெளிநாட்டு மதுபாட்டில்கள் இருந்தன. இந்தக் காணொலி வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைச்சரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தின. மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் அரசு இல்லத்திலேயே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாகரிகமற்றது என அவர்கள் குற்றம் சாட்டினர்..

இந்த இரண்டு நிகழ்வுகளும் மகாராட்டிராவின் ஆளும் கூட்டணிக்கு  பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

ரூபாலி சக்கன்கர் பதவி விலகிய பிறகும், இந்த விவகாரத்தில் பல புதிய புகார்கள் எழுந்துள்ளன.

மராட்டிய ஊடகவியலாளர் பரத் சவுதரிதான் சாமியார் அசோக் காரத் குறித்த உண்மைகளை வெளியே கொண்டு வந்தவர்.

ரூபாலி சக்கன்கர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாகக் காவல்துறையில் இவர் புகார் அளித்துள்ளார். இதனால் இது வெறும் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது மட்டுமல்லாமல், அதிகார அத்துமீறல் சம்பந்தப்பட்டது என்றும் பார்க்கப்படுகிறது.

ரூபாலி சக்கன்கர் மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது,  சாமியார் அசோக் காரத் மீது ஏற்கெனவே அளிக்கப்பட்ட சில புகார்களின் கோப்புகளை தனது அலுவலகத்திலிருந்து அகற்றியதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் திருநங்கைகளும், வெளி நபர்களும் எப்படி மிக எளிதாகச் சென்றார்கள்? அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே காலகட்டத்தில் (2026 மார்ச்-ஏப்ரல்) நடந்திருப்பதால், மகாராட்டிர அரசியலில் ஒழுக்கச் சிதைவு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இதே மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் ஆஸ்தான சாமியார் ரிஷிகேஷ் வைத்யா என்ற பார்ப்பனர் தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல பெண்களைச் சீரழித்துள்ளார். இது தொடர்பாக இதுவரை இரண்டு பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதான் பாஜக ஆளும் மாநிலத்தின் பெண்களின் பாதுகாப்பு இலட்சணம்.

பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்பும்,  சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அரசாங்கமும் ஒருங்கே இத்தகைய சர்ச்சைகளில் சிக்கியிருப்பது அம்மாநிலப் பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *