மனைவியின் சொத்துகள் கணவருக்கு கிடைக்காதாம்! உயர்நீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பு!

4 Min Read

மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா?

ஒரு இந்து பெண் தனது பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? இல்லையா? என்பது குறித்து அய்தராபாத் உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் கீழ், ஒரு பெண் தனது பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்தில் அவர் கணவருக்கு உள்ள உரிமை குறித்து அய்தராபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் பின்னணி மற்றும் சட்ட விதிகளின் விரிவான விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கின் பின்னணி குறித்து ஆராய்ந்தால், ஒரு பாட்டிக்கு இரு பேத்திகள் இருந்தனர். அந்த பாட்டி தனது சொத்தை 2002 ஆம் ஆண்டு தனது முதல் பேத்திக்கு தான பத்திரம் செய்து கொடுத்தார். முதல் பேத்தியின் பெயரில் வருவாய்த்துறை ஆவணங்கள் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் முதல் பேத்தி திருமணமாகி சில காலத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே அந்த பாட்டி தான பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, தனது இரண்டாவது பேத்திக்கு சொத்தை உயில் மூலம் எழுதி வைத்தார். 2012இல் பாட்டி மறைந்த நிலையில் இரண்டாவது பேத்தி தனது அந்த சொத்தை தனது பெயருக்கு மாற்றக்கோரி விண்ணப்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளும் அதற்கு சம்மதித்தனர்.

நீதிமன்ற வழக்கு

ஆனால் மறைந்த முதல் பேத்தியின் கணவர், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கொடையாக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை ரத்து செய்தது செல்லாதது என்றும், மனைவியின் சொத்தை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் கணவர் முறையீடு செய்தார். கணவரின் வாதத்தை ஏற்று அவருக்கு ஆதரவாக இணை ஆட்சியர் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து இரண்டாவது பேத்தி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2)(a)இன்படி ஒரு பெண் தனது மூதாதையர்களிடம் இருந்து பெற்ற சொத்துக்கள், அவருக்கு குழந்தை இல்லாத பட்சத்தில் அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே செல்லும் என்றும், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் சிவில் நீதிமன்றம் ஏற்கெனவே தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி இரண்டாவது பேத்தி வாதங்களை எடுத்து வைத்தார். ஆனால் முதல் பேத்தியின் கணவர் ஒருமுறை கொடையாக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை ரத்து செய்தது சட்டப்படி செல்லாது, மனைவியின் சொத்து கணவருக்கு சேர வேண்டும் என்று வாதிட்டார்.

மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜசேகர் ராவ் வாரிசுரிமை சட்டம் குறித்து கூறியதாவது, சட்டப்பிரிவு 15(2)(a)இன்படி ஒரு பெண் தனது தந்தை அல்லது தாயிடமிருந்து வாரிசு அடிப்படையில் பெற்ற சொத்துகள், அந்தப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் அவர் இறந்து விட்டால் அது அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கு திரும்பச் சென்று விடும். இந்த சட்டத்தின்படி பெற்றோரிடமிருந்து வந்த சொத்தில் கணவருக்கோ அல்லது கணவரின் வாரிசுகளுக்கோ எந்த பங்கும் கிடையாது. அந்த சொத்தில் மீது கணவருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே பாட்டி செய்த தான பத்திர ரத்து நடவடிக்கையை முதல் பேத்தியின் கணவரால் கேள்வி கேட்க முடியாது என்று கூறி தீர்ப்பளித்தார். மேலும் அந்த சொத்தை இரண்டாவது பேத்தியின் மனுதாரருக்கு மாற்றம் செய்யும்படி வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

சட்டப்பிரிவு 15(1) மற்றும் சட்டப்பிரிவு 15(2)(a)

சட்டப்பிரிவு 15 ஒரு இந்து பெண் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவரது சொத்துக்கள் எப்படி பிரிக்க வேண்டும் என்று கூறுகிறது. பொதுவான விதி பிரிவு 15(1) ஒரு பெண்ணின் சொத்து முதலில் மகன்கள், மகன்கள் (மரணமடைந்த பிள்ளைகளின் குழந்தைகளுக்கும் சேர்த்து) பின்னர் கணவருக்கும், கணவரின் வாரிசுகள், தாய், தந்தைக்கும் செல்லும். தற்போது நீதிமன்றம் சுட்டிக்காட்டிய முக்கியமான பகுதி பிரிவு 15(2)(a) ஒரு பெண் தனது தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்தை பெற்றிருந்து, அவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் அவர் இறந்து விட்டால், அந்த சொத்து மீண்டும் அந்தப் பெண்ணின் தந்தையின் வாரிசுகளுக்கே செல்லும். இந்த சூழ்நிலையில் பிரிவு 15(1)இல் சொல்லப்பட்டுள்ள கணவர் என்ற வரிசை செல்லுபடியாகாது. அதாவது அந்த சொத்தில் கணவருக்கோ அல்லது கணவர் வாரிசுகளுக்கு எந்த பங்கும் கிடையாது.

தீர்ப்பின் முக்கிய சிறப்பம்சங்கள்

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமானது ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்து அவர் இறந்த பிறகு, குழந்தைகள் இல்லை என்றால், மீண்டும் ரத்த உறவுகளான அவரது தந்தை வழி வாரிசுகளுக்கே செல்ல வேண்டும். தந்தை வழி சொத்து மட்டுமல்ல தாயிடமிருந்து பெற்ற சொத்தும் இதே விதியின் கீழ்வரும். கணவர் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்பதால் கணவர் பெயருக்கு பட்டா அல்லது வருவாய் துறை ஆவணங்களை மாற்றுவது சட்டப்படி செல்லாது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு அவரது தந்தை ஒரு நிலத்தை உயிலின்றி விட்டுச் செல்கிறார். அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லை அந்த பெண் இறந்துவிட்டால் அந்த நிலம் அவரது கணவருக்கு போகாது. மாறாக அந்த பெண்ணின் சகோதரர் அல்லது சகோதரிக்கோ (தந்தையின் வாரிசுகளுக்கு) செல்லும்.

சட்ட நிலைப்பாடு

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு இந்து பெண் தனது பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்தில், அவருக்கு குழந்தைகள் இருந்தால் கணவருக்கு பங்கு உண்டு. குழந்தைகள் இல்லை என்றால் அந்த சொத்தில் கணவருக்கு எந்த உரிமையும் இல்லை. குழந்தை இல்லாமல் இறந்த அந்தப் பெண்ணின் சொத்து அவரது பிறந்த வீட்டு வாரிசுகளுக்கே செல்லும் என்பதே தற்போதைய சட்ட நிலைப்பாடு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *