திருச்சியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
ரூ. 600 கோடி செலவில் புதிய ‘டைடல் பார்க்’
சென்னை, ஏப். 7 திருச்சி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மேம்படுத்தும் நோக்கில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் நிதிநிலையறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து தற்போது சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (6.4.2023) தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
பேரவையில் பேசிய அவர், சிப்காட் பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு பயன்பாட் டிற்காக 600 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும் அய்டி துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.600 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த டைடல் பார்க் அமைவதன் மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.