டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்ததை மனதில் வைத்து தற்போது தமிழ்நாட்டை பழி வாங்க துடிக்கிறது பாஜக, தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆந்திரப் பிரதேச தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் நாளந்தாவில் பெண் பாலியல் துன்புறுத்தப்பட்டு, கிராமத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார்; 8 பேர் கைது. ஆண்கள் அப்பெண்ணை அவமதித்து, உடலைத் தவறாகத் தொட்டு, கிராம வீதி வழியாக இழுத்துச் செல்லும் காணொலியால் பரபரப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* முதலாளிகளுக்காக மோடி அரசு ரூ. 26 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது – ஆர்.ஜே.டி. மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் குற்றச்சாட்டு. ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணச் செலவுகளுக்காக வெறும் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையிலான சிறிய தொகையை கடனாகப் பெறும் ஒரு நாட்டில், நாட்டின் ஆண்டு பட்ஜெட்டில் ஏறக்குறைய பாதி அளவிற்கு சமமான கடன்கள் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று சஞ்சய் கண்டனம்.
* வங்காளத் தேர்தல்: ‘SIR’ சிறப்புத் திருத்தப் பணிக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்கள், மால்டாவில் நீதித்துறை அதிகாரிகளை முற்றுகை
* சமூக நீதியை நிலைநாட்டுவதில் ஜே.என்.யு. பல்கலைக்கழகம் தோல்வி; எஸ்.சி., எஸ்.டி. மாணவர் சேர்க்கை 25 சதவீதம் குறைவு – மாநிலங்களவையில் திக்விஜய் சிங் கண்டனம்.
தி இந்து:
* இன்றுடன் முடிய இருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்பு. 2023-ஆம் ஆண்டின் ‘பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தில்’ (WOMEN’S RESERVATION ACT) செய்யப்படவுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கிலும், அச்சட்டத்தின் அமலாக்கத்தை விரைவுபடுத்தும் குறிக்கோளுடனும், ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
* சி.ஏ.ஏ. குறித்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்: இபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி. தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, பாஜக கொண்டு வந்த சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் சிறுபான்மை யினருக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டும் மு.க.ஸ்டாலின், இச்சட்டம் மாநிலங்களவையில் (RS) அதிமுக மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘தென் மாநிலங்கள் பாதகமான நிலையில் உள்ளன’: மக்களவை இடங்களை அதிகரிக்க முன்மொழியும் மசோதா குறித்து ஒன்றிய அரசை சாடிய காங்கிரஸ். தென் மாநிலங்களுக்கு கூடுதலாக 66 இடங்கள் மட்டுமே கிடைக்கும்; ஆனால் வட மாநிலங்களுக்கு கூடுதலாக 200 இடங்கள் கிடைக்கும்,” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் பதிவு.
– குடந்தை கருணா
