தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
கடல் போல் கூடியிருந்த மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணியின் கொள்கைக் கோட்பாட்டையும், எதிரணிகளின் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டையும் அவருக்கே உரித்தான உயர் தரத்தோடும் தனித் தன்மையோடும் விமர்சித்து பேசியுள்ளார்.
2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை இருந்து வரும் தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளை எடுத்துக் கூறினார். ‘‘தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் செய்துள்ளோம்; சொல்லாததையும் செய்துள்ளோம்’’ என்று மார்தட்டிச் சொல்லி இருக்கிறார்.
அதே நேரத்தில் ‘என்.டி.ஏ. கூட்டணி’ என்று சொல்லப்படும் கட்சிகளின் நிலை என்ன? கடந்த காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்டது என்ன? அ.தி.மு.க.வை ஆட்டிப் படைக்கும் ஒன்றிய பிஜேபியின் செயல்பாடுகள் எத்தகையவை என்பதை ஆற்றோட்டமாக அலசி ஆராய்ந்து பேசியிருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்திருக்கும் உரிமை மறுப்புகள், திட்ட மறுப்புகள் பற்றியும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை. கல்விக்காக ஒன்றிய அரசு மாநிலத்திற்குத் தர வேண்டிய நிதி மறுக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை (‘சமக்ர சிக்ஷா அபியான்’) திட்டத்திற்கு ரூ.3,458 முதல் ரூ.3,548 கோடி வரை, ஊரக வளர்ச்சித்துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ.2000 கோடி (‘மகாத்மா காந்தி’ என்ற பெயரைக் கூட ‘VB – G Ram G’ என பிஜேபி அரசு மாற்றி வைத்துள்ளது) குடிநீர்த் திட்டம் (ஜல் ஜீவன்) ரூ.3112 கோடி முதல் ரூ.3200 கோடி வரை சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்திற்கு ரூ.9,500 கோடி.
தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு தர மறுத்த நிலுவைத் தொகை – ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து 70 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவுப் பெரிய நிதி மறுப்பையும் சமாளித்து – இந்தியத் துணைக் கண்ட அளவில் பல முக்கிய துறைகளிலும் திராவிட மாடல் அரசான தி.மு.க. அரசு தமிழ்நாட்டை முதல் இடத்தில் நிறுத்தியுள்ளது. அதனால்தான் முதலமைச்சர் திருவாரூரில் மட்டுமல்ல – எங்கு சென்றாலும் தி.மு.க. தலைமையிலான அரசின் சாதனையை நெஞ்சு நிமிர்த்தி சொல்லி வருகிறார்.
இதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பிஜேபிபற்றி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு மேலோங்கி நிற்கிறது; இது ‘பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்று வைத்துக் கொண்டாலும் ‘சித்தாந்த ரீதியாக’ பிஜேபிக்கும் – திராவிடத்திற்கும் உள்ள எதிர்நிலை தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேர்ப் பிடிக்கும் வகையில், திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சியினர் எடுத்துக் கூறி வந்துள்ளதால் பிஜேபி என்றாலே ஓர் ஒவ்வாமை தமிழ் மண்ணில் ஓங்கி நிற்கிறது.
பிஜேபி மட்டுமல்ல – அதனோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கி நிராகரிக்கப்படுகிறார்கள்.
இந்த வகையில், ‘பொருளாதாரம்’ மற்றும் ‘சித்தாந்தம்’ என்ற இரண்டையும் முதன்மையாக முன்னிறுத்தி தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபியையும் – அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து பிரச்சாரம் என்பது மிகப் பெரிய வலிமையான ஆயுதமாக தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
தி.மு.க.வின் வெற்றியை மாற்றி அமைக்க பிஜேபி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள் எத்தனைக் குட்டிக் கரணம் போட்டாலும், அது தமிழ்நாட்டு மக்கள் – வாக்காளர்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை.
மேலும் இந்த 5 ஆண்டுகளில் ‘திராவிட மாடல்’ தி.மு.க.. அரசின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர் வீட்டிலும் அன்றாடப் பேசு பொருளாக – அனுபவப் பொருளாக மாறி விட்டதாலும், ‘அடுத்த ஆட்சி என்பதும் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான்’ என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதாலும், இந்தக் கூட்டணியை எதிர்க்கும் காட்சிகள், தொடக்க நிலையிலேயே மிகப் பெரிய சுணக்கத்திற்கும், தொய்வடைந்த நிலைக்கும், தோல்வி மனப்பான்மைக்கும் ஆளாகி விட்டன.
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞரின் திருவாரூரில் நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கிக் கொடுத்த தேர்தல் பிரச்சார முழக்கம் தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மண்ணின் மணமாகப் பிரகாசிக்கப் போகிறது!
ஆனாலும், ஏதாவது குறுக்கு வழிகளில் பிஜேபி சில தந்திர உபாயங்களை மேற்கொள்ளும். அதனை முறியடிக்க தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தோழர்களின் களப் பணியில் மிகுந்த எச்சரிக்கையுடன் விழிப்பாகப் பணியாற்ற வேண்டும்!
கவனம்! கவனம்!! கவனம்!!!
