சென்னை, ஏப். 7- மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரை யாளர் இறையன், சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் ஆகியோரின் பெயரனும், இசையின்பன்–பசும்பொன் ஆகியோ ரின் மகனுமான இ. ப. இன நலம் – ஜோ. ஆட்லின் ஆகியோரின் இணை ஏற்பு விழா 25.3.2023 சனிக்கிழமை சென்னை பெரியார் திடலில் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
இணையேற்பு விழாவின் முதல் நிகழ்வாக காலை பத்தரை மணிக்கு கலை அறப்பேரவை கலைவாணன் பொம்மலாட்டக் கலைக் குழுவினர் வழங்கிய ‘சுயமரியாதை திருமணம் ஏன்?’ என்னும் தலைப்பில் பகுத்தறிவு கருத்துகளை நகைச்சுவையுடன் வழங்கி கூடியிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணம் எளிய முறையில் ஒரு மணி நேரம் விளக்கிய நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
அதன் பின்னர் குடும்பத்தினர் சார் பாக வரவேற்புரை வழங்கிய இறைவி தங்கள் குடும்பத்தில் ஜாதி, தாலி மறுப்பு, காதல் என்ற நிலையில் நடை பெற்ற சுயமரியாதைத் திருமணங்கள் இன்று மத மறுப்பாகவும் நடைபெறு வதையும், கூடுதல் சிறப்புடன் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்த தங்கள் பெற்றோர் களை கொலைவெறியுடன் துரத்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இன்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கை ஒன்றே மக்கள் நல் வாழ்விற்கு உகந்தது; குறிப்பாக பெண்களின் வாழ் வில் சுயமரியாதையினைத் தரவல்லது என்பதை உணர்ந்தவர்களாக இருப்ப தைக் காட்டும் வண்ணம் வாழ்விணை யர்களை இழந்த அய்ந்து பெண்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெறுவதை மிகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
வாழ்த்துரை வழங்கியோர்
வாழ்த்துரை வழங்கிய, சான்றோர் போற்றல் நிகழ்வில்,காட்சி ஊடகவிய லாளர் ஜீவசகாப்தன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை செயலாளர் குடந்தை தமிழினி, திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை வழங்கியும், இத்தகைய திருமணங்களின் அவசியம் குறித்தும் உரையாற்றினர் .
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில ஆலோசகர் கோவி. லெனின், துணைவரை இழந்த ஆண் எந்தவித சங்கடங்களுக்கும் ஆளாகாமல் வாழ்த் துரை வழங்க உரிமை இருக்கும்பொழுது ஒரு பெண் அதனை செய்ய இந்த சமுதாயத்தில் இன்றைக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதனை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.
திராவிடர் கழக பிரச்சார செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இளைஞர்கள் காதல் திருமணங்களை ஜாதி ஒழிப்பிற்கான ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய அவசியத்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் உரையில் இறையனார் –திருமகள் குடும்பத்துடன் தமக்கு இருக்கும் பிணைப்பு பற்றியும் பசும்பொன் அவர்கள் சுயமரியாதை திருமண நிலையத்தின் மூலம் நடத்தும் திருமணங்கள் ஜாதி மத மறுப்பாக மட்டுமின்றி பார்ப்பனர்களும் வந்து திருமணங்களை நடத்திச் செல்வதையும் பட்டியலிட்டுக் காட்டினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் உரையில் இறையனாரின் தமிழ்ப் புலமை பற்றியும் அவர் திருமகள் அம்மையாரின் அறுபதாம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை பூட்கை பெருவிழாவாக நடத்தியது பற்றியும் நினைவு கூர்ந்து நெகிழ்வுரையாற்றினார்.
தமிழர் தலைவர் வாழ்த்துரை
இறுதியாக இணை ஏற்பு உறுதி மொழியை ஏற்கச் செய்து வாழ்த்துரை வழங்கிய திராவிடர் கழகத்தின் தலைவரும் வாழ்வியல் அருளியுமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் பேருரையாளர் இறையனார்–திருமகள் இருவரின் சிறப்பான தொண் டறத்தைப் போற்றியும், இசையின்பன்– பசும்பொன் இருவரும் இன்று ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டியும், சுய மரியாதைத் திருமணத்தின் வரலாறு, நோக்கம் பற்றியும் நீண்ட உரையாற்றினார்.
இணை ஏற்பு உறுதிமொழி
இணையர்கள் உறுதிமொழி ஏற்கும் போது மாற்றிக் கொண்ட மாலையினை முன்னிலை வகித்த பெண்களில் இருவரைத் தரும்படி செய்து அந்தப் பெண் “தங்கள் வாழ்க்கையிலேயே தங் களுக்கு கிடைத்த மிகப்பெரிய சிறப்பு இது” என்று நெகிழ்ச்சியுடன் கூறும ளவுக்கு மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றார். முன்னிலை வகித்த பெண்கள் தாங்கள் அடைந்த பெருமையினைக் கூறிக் கூறி பெருமிதம் அடைந்தனர்.
இந்த விழா இணைப்பு விழாவாக மட்டுமன்றி குடும்பத்தின் வேர்களை போற்றும் விதமாக அமைந்ததும் குடும்ப உறவுகள், இயக்கத் தோழர்கள், இணைய நண்பர்கள் என மாநாடு போல அமைந்ததும் பலருடைய பாராட்டையும் பெற்றது. திருமகள் அவர்களால் தன் வரலாற்றுக் குறிப்பாக எழுதப்பட்ட ஜாதி கெடுத்தவள் என்ற நூல் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.