பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எது?

2 Min Read

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக பூஜையின் பெயரால் மருமகளை நிர்வாணப்படுத்தி குடும்பத்தினரே கொடுமைப்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனராம்!

கான்பூர் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த சில காலத்திற்கு முன்புதான் திருமணமாகியிருந்தது. திருமணமான சில நாட்களிலேயே அந்தப் பெண்ணின் மாமியார் மற்றும் குடும்பத்தினர், மதம் மற்றும் யாகம் என்ற  பெயரால் ஆடையின்றி நள்ளிரவில் ஊரைச் சுற்றி வருதல், அமாவாசை அன்று பிணத்தின் மேல் அமர்ந்து உடலுறவு செய்வது போன்ற  சடங்குகளைச் செய்யுமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர்.

இதைச் செய்ய மறுத்ததால், வீட்டில் இருந்த குடும்பத்தினர் அந்தப் பெண்ணைத் துன்புறுத்தி ஆடைகளை நீக்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகமான மற்றும் விபரீதமான செயலுக்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் மற்றும் மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர், அவரைக் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

நீண்ட நாட்களாக இந்தக் கொடுமையைத் தாங்கிக் கொண்டு, கடும் வேதனையை அனுபவித்து வந்த அந்தப் பெண், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, தனது உயிருக்குப் பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து அவர் கண்ணீருடன் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதச் சடங்குகள் – மூடநம்பிக்கையின் பெயரால் ஒரு பெண்ணை அவரது குடும்பத்தினரே இழிவுபடுத்தி சித்திரவதை செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

‘‘தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!’’ என்று  பொய்க் கூச்சல் போடும் பிஜேபி சங்பரிவார்கள், பிஜேபி ஆட்சியில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் நடத்திருக்கும் இந்தக் கேடு கெட்ட – கீழ்த்தரமான ஆபாசமான நிகழ்வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இதைப் பற்றிக் கேட்டால், அவர்கள் தயாராக வைத்திருக்கும் பதிலில், ‘‘மத சம்பந்தப்பட்ட சடங்காச்சாரியமான நடவடிக்கை – அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?’’ என்று அவர்களுக்கே உரித்தான வகையில் (மத மூடநம்பிக்கையே முக்கியம்)  சொன்னாலும் சொல்லுவார்கள். இதன் மூலம் மத சமாச்சாரங்கள் எவ்வளவு ஆபாசமானவை – அருவருப்பானவை என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலங்கள் வரிசையில் டில்லி முதலிடம் – 144.4%, அரியானா – 118.7%, தெலங்கானா –117.6%, அது மட்டுமா? உத்தரப்பிரதேசம் எல்லாவிதமான குற்றங்களின் மொத்த எண்ணிக்கையில் முதலிடமல்லவா வகிக்கிறது!

இந்தியாவில் தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் சராசரி விழுக்காடு 66.4%.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநகரங்கள் வரிசையில் மும்பை கோகிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர்.

இந்த வரிசைகளில் தமிழ்நாடு இடம் பெறவில்லை. இந்தப் புள்ளி விவரங்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் சமீபத்திய தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆண்டறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ‘‘தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’’ என்று மனசாட்சியின்றி பொய்யாகக் கூப்பாடு போடுவது  காழ்ப்பு அரசியல் மட்டுமல்ல – பச்சையான அநாகரிக ஓட்டு அரசியலே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *