சேலம், ஏப். 1- தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்குக் கூடுதல் சுமை ஏற்படும் வகையில், 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), ஆண்டுதோறும் பணவீக்கம் மற்றும் சாலை பராமரிப்புச் செலவுகளைக் கணக்கில் கொண்டு கட்டணங்களை மாற்றி அமைக்கிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 77 சுங்கச்சாவடிகளில், ஒப்பந்த காலமுறைப்படி தற்போது 60 சாவடிகளில் 5 சதவிதம் முதல் 7 சதவிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகும் முக்கிய இடங்கள்: சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய நுழைவாயில்கள் உட்பட மாநிலம் முழுவதும் இந்த உயர்வு அமலாகியுள்ளது.
சென்னை & புறநகர்: பரனூர், சூரப்பட்டு, வானகரம், சிறீபெரும்புதூர், நல்லூர், கிருஷ்ண கிரி, சமயபுரம், கப்பலூர், சிட்டம் பட்டி, நாங்குநேரி உள்ளிட்ட 60 இடங்கள். இந்தத் திடீர் கட்டண உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பதால், காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் வரத்துச் செலவு அதிகரித்து சந்தையில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. ஆம்னி பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணமும் அதிகரிக்கக்கூடும்.
மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் அந்தந்த ஒப்பந்த தேதிகளின் அடிப்படையில் வரும் காலங்களில் கட்டண மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.
