திருவாரூர், ஏப். 1- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக நேற்று (31.3.2026) திருவாரூர் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்களிடம் உரையாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாட்டி மற்றும் கலைஞர் சிலைக்கு மரியாதை
சென்னையிலிருந்து தஞ்சாவூர் வழியாகக் கார் மூலம் திருவாரூர் காட்டூருக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது பாட்டியும் கலைஞரின் தாயாருமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தயாளு அம்மையார் அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டபோது, அங்கு படித்துக் கொண்டிருந்த திருக்கண்ண மங்கை கிராமத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவன் சிவதர்ஷன் என்பவருடன் உரையாடினார்.
அப்போது, அந்த மாணவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினான். அதைக் கேட்டு புன்னகைத்த முதலமைச்சர் அந்த மாணவரிடம், என்னை ஏன் உனக்குப் பிடிக்கும்? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர், “கல்விக்காகவும், மாணவர்களுக்காகவும் நீங்கள் அதிக திட்டங்களைச் செயல்படுத்தி கல்வியில் புரட்சி செய்து வருகிறீர்கள். அதனால் உங்களைப் பிடிக்கும்.”
இந்த பதிலைக் கேட்டு நெகிழ்ந்துபோன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவனின் முதுகில் தட்டிக்கொடுத்து, “எதிர்காலத்தில் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்” என வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதேபோல் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த விளமல் பகுதியைச் சேர்ந்த ஜெயலெட்சுமி என்ற பெண்மணி, தனது மகன் விக்னேஷ் அரசுப் பணித் தேர்வுகளுக்கு இங்குதான் படித்து வருவதாகவும், முதலமைச்சரின் கையால் பணி ஆணை பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு முதலமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது இல்லத்திற்குச் சென்ற வழியில், அழகிரி நகர் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது அங்கிருந்த குழந்தைகளுக்குச் சாக்லேட்டுகளை வழங்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
