சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்(எம்))போட்டியிடும் அய்ந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று (31.3.2026) வெளியிட்டார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
வேட்பாளர்கள் அறிவிப்பு
கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் விவரம் பின்வருமாறு: பழனி – பாண்டி, கந்தர்வகோட்டை –- சின்னதுரை, பத்மநாபபுரம் – செல்லசுவாமி, திருவொற்றியூர் – சுந்தரராஜன், கீழ்வேளூர் – லதா.
செய்தியாளர் சந்திப்பில் பெ. சண்முகம் தெரிவித்த முக்கிய அம்சங்கள்: திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாகவும் வலிமையாகவும் உள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் இந்தத் தோழமை தொடர்ந்தாலும், தற்போது புதிய கட்சிகளின் இணைப்பால் கூட்டணி மேலும் பலம்பெற்றுள்ளது.
மக்களின் ஆதரவு: கடந்த அய்ந்தாண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிருக்கான திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது. இந்தத் திட்டங்களால் பயனடைந்த மக்கள் நிச்சயம் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
மனுத்தாக்கல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள்.
