திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு!
திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, ஏப்.1 திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற திருக்குறள் பேரவைகளுக்கு உண்டு. நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம், உலகத்தைப் புரிந்து கொள்வோம். அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும். அதற்கு உங்களுடைய பேரவை துணை நிற்கட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘திருக்குறள் பேரவை’’
22.3.2026 அன்று மாலை சென்னை குரோம் பேட்டையில், திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற மார்ச் மாதக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை’’ (குறள் 322)
எல்லாருக்கும் நாம் பிரித்துப் பிரித்துக் கொடுக்கி றோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதன்படி நம்முடைய வாய்ப்புகள் அனைவருக்கும் வரக்கூடிய சூழல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொன்றையும் பகுத்தறிவுப் பார்வை யோடு திருவள்ளுவர் பார்த்தார்.
தந்தை பெரியார், திராவிட இயக்கம் இல்லாவிட்டால்…
ஆனால் நண்பர்களே, இந்தக் குறளை, இவ்வளவு அறிவு ஆழ்ந்த திருக்குறளை நம்முடைய நாட்டிலே மக்களிடம் பரவாத வண்ணம் எதைக் கொண்டு அடைத்து விட்டார்கள்? தந்தை பெரியார், திராவிட இயக்கம் இல்லாவிட்டால், இவ்வளவு எளிதாக மக்கள் மத்தியிலே இந்தத் திருக்குறள் பரவ வாய்ப்பே இல்லை என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.
இது ‘பெரியார் களஞ்சியம்.’ தந்தை பெரியார் அவர்க ளுடைய நூல்களை எல்லாம் களஞ்சியமாக கால வரிசைப் படியெல்லாம் தொகுத்து வெளியிட்டிருக்கி றோம். திருக்குறள் பற்றிய அவருடைய உரைகள் அத்தனையும் அடங்கிய, மிக முக்கியமான ஒரு களஞ்சி யம். அந்தப் பெரியார் களஞ்சியத்தில், திருக்குறள், வள்ளுவரைப்பற்றி பல இடங்களில் அய்யா பேசிய உரைகளைத் தொகுத்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம். வாய்ப்பு இருக்கிறவர்கள், நூலகத்திலோ அல்லது வாங்கியோ படித்துப் பார்க்கலாம். ஒரு செய்தியை இங்கே மிக முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
திருக்குறளைப்பற்றி சொல்லுகிற போது, இந்தத் திருக்குறள், 70 ஆண்டுகளுக்கு முன்னால் மக்களி டையே அறிமுகமாகவில்லை. இராமாயணம் தெரிந்த அளவுக்கு, பெரிய புராணம் தெரிந்த அளவுக்கு, கந்த புராணம் தெரிந்த அளவுக்கு, 18 நாள் படிக்கக் கூடிய பாரதம் தெரிந்த அளவுக்கு, திருக்குறள் மக்கள் மத்தி யிலே தெரியவில்லை. அறிவுப்பூர்வமான, ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய அறநூலான திருக்குறள் தெரியவில்லை.
அறமென்றால், நிறைய பேர் ‘தர்மம்’ என்று சொல்வார்கள். ஆனால், அது கிடையாது.
வள்ளுவர் மிக அழகாகச் சொன்னார்,
‘‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற’’ (குறள் 34)
அதுதான் அறம். திராவிட சமுதாயத்தினுடைய பண்பாட்டினுடைய பிரதிபலிப்பு அது. திருக்குறள் மாதிரி ஒரு அரிய நூல் – உலகத்துக்கே அறிவாயுதம். அதில் மதம் இல்லை.
மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடலை நினைத்துப் பார்த்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
‘‘வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி’’
திருக்குறள் என்றால், ஒரு புத்தகம் அல்ல, தத்துவம்!
இன்றைக்கு நடக்கின்ற போராட்டம் எத்தகையது? மனுநீதி ஆள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். திருக்குறளுக்கு இடமிருக்கக்கூடாது என்று நினைக்கி றார்கள். திருக்குறள் என்றால், ஒரு புத்தகம் அல்ல. தத்துவம். அரசியல் போராட்டமே இன்றைக்கு அதுதான். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை யில், எப்போதும் தேவைப்படுவதை விட, இப்போது வள்ளுவர் அதிகமாகத் தேவைப்படுகிறார்.
குறளுடைய பரப்பு என்பது விரிவடைய வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார். இதைச் சொல்லும் போது, இரண்டு தத்துவத்தை சொல்லவேண்டும். நிறைய சொல்லலாம். ஆனால், அந்தக் கருத்தை வலியுறுத்தக்கூடிய வகையில், மிக முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். எளிமையாகச் சொல்லக்கூடியவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள்,
‘‘வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி’’ என்று சொன்ன பாடலுக்கு விளக்கம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும். இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்கள் என்றால், திருக்குறளுக்கு நீண்ட காலமாகவும், இன்றைக்கும் அதிகாரப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உரை என்று சொன்னால், அது பரிமேலழகர் உரைதான் என்று சொல்லிக் கொண்டி ருப்பார்கள். புது உரைகள் இன்றைக்கு நிறைய வந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுதுதான் திருக்குறளுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
புரட்சிக்கவிஞரி்ன பார்வையில் திருவள்ளுவர்!
பரிமேலழகர் உரை தான் சிறந்த உரை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில், அதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்லுகிறார்,
‘‘வள்ளுவர்க்கு நிறமில்லை, மதமும் இல்லை
மதங்கட்கப் பாலிருந்தே குறள் செய்துள்ளார்
உள்ளசிறு மதங்குறிக்கும் சொற்கள் கொண்டே
உவகையொடு தத்தமது மதத்தில் சேர்த்துத்
தெள்ளிவைத்த நீறிடுதல் திருமண் சார்த்தல்
செழும்பிண்டி அமர்ந்தானைச் சேர்த்தான் என்னல்
தள்ளிவைத்த மரபென்று பேசல் யாவும்
சரியென்று தோன்றவில்லை என் கருத்தில்’’ என்கிறார் புரட்சிக்கவிஞர்.
அது மட்டுமல்ல, ‘‘வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்’’ என்று சொல்லும் போது. அய்யா தந்தை பெரியார் அவர்கள் மிக விளக்கமாகச் சொன்னார். மனுநீதி என்று சொல்லக்கூடிய ஒரு தத்துவம் ஜாதியை, வர்ண தர்மத்தை வலியுறுத்தக்கூடிய, மனிதர்களுக்குள் பேதத்தை உருவாக்குவது. ஆனால், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொல்வது, பேதத்தை நீக்குவது.
அதுமட்டுமல்ல, அறிவுக்குச் சுதந்திரம் கொடுத்து, ‘‘நீ கேள்வி கேள்! நம்பு, நம்பாதே அது உன் உரிமை. நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, திணிப்போ அதில் கிடையாது’’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பும் உண்டு.
இந்த நூலில், தந்தை பெரியார் அவர்கள் பல கருத்துகளை, புரட்சிக்கவிஞர், மற்றவற்றைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். இதில் இன்னொன்று, திருக்கு றளை, திருக்குறளுடைய வள்ளுவர் பெரு மையை கீழே இறக்க வேண்டும் என்று, சிலர் என்ன செய்தார்கள்? திருவள்ளுவருடைய பிறப்பைப் பற்றி எழுதினார்கள். நம்முடைய நாட்டில் புரட்சிகரமான ஒரு கருத்தை யாராவது சொன்னால், அவர்களை இழிவுப்படுத்துவதற்கு ஒரு கதையை உண்டாக்குவான். ‘‘ஓ அவர் யாருக்குப் பிறந்தவர் தெரியுமா? அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?’’ இது நீண்ட காலமாக ஆரியம் கையாளுகிற கதை.
மிகப்பெரிய அளவிற்கு வேதனையை உண்டாக்கக்கூடியது!
அப்படி வருகின்ற நேரத்தில், ஆதி என்பவருக்கும், பகவன் என்பவருக்கும்- உயர் ஜாதியைச் சார்ந்த வருக்கும், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவருக்கும் பிறந்தவர் திருவள்ளுவர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தை என்னவோ அதையே நான் சொல்கிறேன். ஏனென்றால், நமக்குக் கோபம் வரவேண்டும், ஆத்திரம் வரவேண்டும். பார்ப்பானுக்கும், பறச்சிக்கும் பிறந்தவர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கெட்டிக்காரராக இருந்தால், உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்பது போன்ற ஒரு கருத்தை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு இடத்திலும் இது போன்ற ஒரு ஊடுருவல் வரும்போது, நம் ரத்தம் கொதிக்கக்கூடிய அளவில் இருக்கிறது. அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால், கிடையாது என்பது மட்டுமல்ல, மிகப்பெரிய அளவிற்கு வேதனையை உண்டாக்கக்கூடியது.
இது அறிவார்ந்த அரங்கம். பல பேருக்குத் தெரியும். ஒரே ஒரு தகவலை மட்டும் எடுத்து உங்களுக்குச் சொல்லுகிறேன். வள்ளுவர் என்று, திருவள்ளுவர் என்று சொன்னாலே, அதை ஒரு ஜாதி ஆக்கிவிட்டான். வள்ளுவர் என்றால், ஒரு ஜாதி. அந்த ஜாதியிலேயே கொஞ்சம் மட்டத்தில் உசத்தி என்பதுபோன்று, ‘‘வள்ளுவப் பண்டாரம்’’ என்பார்கள். புரோகிதர் போன்று அவருக்கு உயர்ந்த நிலையைக் கொடுப்பார்கள். இதெல்லாம் தவறாக வரக்கூடிய, தவறான நிலை?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள், முழுமையாக அவர்கள் இந்தப் புத்தகத்தை முடிக்க முடியவில்லை. அது ஒரு கெடு வாய்ப்பு.
மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ஒரு கருத்தை முதலில் எடுத்த உடனே சொல்கிறார். இந்தக் கருத்தை மதிக்கிறார். திருவள்ளுவருடைய பிறப்பைக் கொச்சைப்படுத்துகிறார்கள் அல்லவா, அதை பற்றி! இந்தத் தகவல்கள் மக்களிடையே போய்ச் சேரவேண்டும். அப்படி கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற திருக்குறள் பேரவைகளுக்கு உண்டு.
புரட்சிக்கவிஞர் அவர்கள் மிகத் தெளிவான விளக்கத்தை எடுத்துச் சொன்னார்கள். இலக்கிய ரீதி யாகவே பதில் சொன்னார். அறிவார்ந்த பதிலை, இலக்கிய ரீதியாகவே, ஆதாரம், சான்றாவணங்கள் இவற்றிலிருந்தே எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.
பாரதிதாசன் திருக்குறள் உரையில்,
‘‘தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன. உழவும் தொழில் என்னும் துறையில் அடங்கு மேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்துறையாக வைத்துக் கருத்தூன்றிக் காத்து வந்தார்கள், உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழிற் துறையில் அடங்கியவை.
எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலை யறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப்பயிற்சியும் கல்வி என்ற துறையில் அடங்கும்.
வரைவு என்னும் துறையாவது யாது? – எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரை யறுத்தலும், அளவு செய்தலும் முதலியவை. இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!
ஆறு துறையே அன்றிப் போர்த் துறை ஒன்று தனியே இருந்து வந்ததோ எனில் அவ்வாறில்லை, கல்வி என்னும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.
இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே; அது இந்நாளைய ‘செக்ரடேரியேட்’ போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பன். அவன் எல்லா துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் ‘‘வள்ளுவன்’’ என்பது.
‘‘வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு
உள்படு கருமத் தலைவருக்கு ஒன்றும்’’
என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.
பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் ஜாதியைக் குறிப்பதாகக் கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல! அகம்பட்டன் என்ற சொல் அரசனின் அகச்சுற்றம் ஆறில்– மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதைச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந்நாளில் இழிந்த ஜாதிக்காரர் என்று எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் – அவரின் அலுவற் பெயரே வள்ளுவர்!
வள்ளுவன் என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. வண்மை என்றது அறிவு வளத்தை. (நம் திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக)’’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, இப்படி மிக முக்கியமாக தாறுமாறாக உயர்ந்த கருத்துகளைத் தாழ்த்திச் சொல்வது என்பதாக இருக்கக்கூடியது.
இறுதியாக, . ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.
‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்’’ (குறள் 620)
ஊழ் என்று சொன்னால் தலையெழுத்து. நம்மாள் என்ன செய்கிறார்கள், ‘தலையெழுத்து தலையெழுத்து’ என்று நம்பி நம்பி, வீணாகப் போகின்ற ஒரு சமுதாயம் நம்முடையது. விளக்கம் சொல்ல முடியாதபோது, ‘‘அது என் தலையெழுத்து, அப்படிதான் இருக்கும்’’ என்று சாதாரண பாமர மக்கள் உள்பட சொல்வார்கள்.
மேலும், ‘‘அன்றைக்கு எழுதியவன் எழுத்தை, அழித்து எழுதவா முடியும்?’’ என்கிறார்கள்.
நம்மூரில், தேர்தல் நடைபெறும்போது, அழிக்க முடியாத மய்யை வைக்கிறார்கள். அதையே அழித்து விட்டு, ‘‘எத்தனை தடவை ஓட்டு போட்டு இருக்கேன், பார்த்தீங்களா?’’ என்று கேட்கிறார்கள்.
அழிக்க முடியாத மய்யையே அழிக்கக்கூடிய அளவுக்கு வந்திருக்கிற போது, ‘‘ஆண்டவன் தலையில் எழுதி வைத்திருக்கிறான், அதை அழிக்க முடியாது’’ என்று சொல்லுகிறார்கள்.
தந்தை பெரியார் சொன்னார், ‘‘ஊழ் என்பது இருக்கிறதே, அது தலைவிதி, அழிக்க முடியாதது என்பது அல்ல’’ என்றார். வள்ளுவருடைய குறளின் அடிப்படையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
தந்தை பெரியார் அதற்கு ஓர் உதாரணத்தை மிக அழகாக விளக்கிச் சொல்லி இருக்கிறார். இந்தக் களஞ்சி யத்தில் ஒரு பக்கத்தில் இருக்கிறது. ஒரு பித்தளையை உருக்கி, இரண்டு மணியை தயார் செய்கிறார்கள். ஒரே உலோகம்தான். ஆனால், அந்த உலோகத்தை உருக்கி முடித்த பிறகு, மணியை தயார் செய்த பிறகு, அந்த மணிகளை அடிக்கும் போது, இரண்டு மணியினுடைய சத்தம் ஒரே மாதிரி வரவில்லை. ஒரு மணியினுடைய தன்மை வேறு. இன்னொரு மணியினுடைய ஒலி வேறு. காரணம் அதனுடைய அமைப்பின் மூலம் ஏற்பட்ட ஒரு கெமிக்கல் சேஞ்ச் – ஒரு வித்தியாசமாக இருக்கக்கூடியது. அது மாதிரி முழுக்க முழுக்க ஒரு மனிதனுடைய கூட்டமைப்பு வரும்போது சுபாவம் என்று ஒன்று உண்டு. பெரியார் அவர்கள் இதை நடைமுறையிலே பயன்படுத்துவார். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், ஊழ் என்பதற்கு எந்த மூடநம்பிக்கைக்கும் இடங்கொடுக்கக் கூடாது.
எனவே, இந்தக் குறள் மிக முக்கியமாக அறிவின் ஆழமான ஊற்று. ‘‘அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை’’ என்றார் புரட்சிக்கவிஞர்.
எனவே, நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம், உலகத்தைப் புரிந்து கொள்வோம். அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும். அதற்கு உங்களுடைய பேரவை துணை நிற்கட்டும்!
வாய்ப்பளித்த உங்களுக்கு, நன்றி! நன்றி! நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
