திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர் – அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன்!

11 Min Read

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்! திருவாரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

திருவாரூர், ஏப்.1 திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர் –அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன்! தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும் என்றார் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (31.3.2026) திருவாரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம் வருமாறு:

2026 சட்டமன்றத் தேர்தலின் ‘சூப்பர் ஸ்டாராக’ விளங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதி யில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திரு வாரூர் மண்ணிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பிரச்சாரத்தை – பரப்புரையைத் தொடங்குகிறேன்.

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர். அதனால் நான் இங்கிருந்து தொடங்குகிறேன். இந்த மேடையில் இருக்கும் இவர்கள், உங்களின் நன்மதிப்பை வாக்கு களாகப் பெற்று, சட்டமன்ற உறுப்பினர்களாக, 17 ஆவது சட்டப்பேரவைக்குள் நுழைய இருக்கும் நம்மு டைய வெற்றி வேட்பாளர்கள்.

திருவாரூரில் பூண்டி கலைவாணன்

திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில், நம்முடைய அருமைச் சகோதரர் பூண்டி கலைவாணன் களமிறங்கு கிறார். அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் திரு வாரூர் மக்களாகிய நீங்கள் உங்கள்  வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னார்குடியில் டி.ஆர்.பி. ராஜா

அடுத்து, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில், நம்முடைய தம்பி டி.ஆர்.பி. ராஜா களமிறங்குகிறார். நம்முடைய டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் மன்னார்குடி மக்களாகிய நீங்கள், உங்களின் வாக்குகளை அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

திருத்துறைப்பூண்டியில்
தோழர் மாரிமுத்து

திருத்துறைப்பூண்டி தொகுதியில் நமது கொள்கைக் கூட்டணியின் பலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பொதுவுடைமை இயக்கத்தின் போரா ளியான தோழர் மாரிமுத்து அவர்கள் களமிறங்குகிறார். திருத்துறைப்பூண்டி மக்களாகிய நீங்கள், கதிர் அரிவாள் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அவருக்கு அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்னிலத்தில் முகமது முபாரக்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு, எஸ்.டி.பி.அய். கட்சியின் வேட்பாளர் – நம்முடைய அன்புக்குரிய சகோதரர் முகமது முபாரக் அவர்கள் களமிறங்குகிறார். நன்னிலம் மக்கள் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் வாக்குகளை அவருக்கு அளித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நான்கு பேரையும், உங்களின் பிரதிநிதிகளாக – உங்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க, உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் வழங்க வேண்டும்.

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நான் இந்த மண்ணின் மைந்தன். இன்னும் சொன்னால், தலைவர் கலைஞரின் மகன். உங்களால் உருவாக்கப்பட்ட இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்… அன்போடும் – உரிமையோடும் கேட்கிறேன்… வெற்றி உறுதியா!

இந்த நான்கு பேருக்கும் நீங்கள் தரப்போவது வெற்றி! அது உறுதியா? உறுதி (மக்கள்). வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் இருக்கையில்
அமரலாம்.

‘வெல்வோம் ஒன்றாக’ என்று
உறுதி எடுத்திருக்கிறோம்!

இப்போது நீங்கள் சொன்ன உறுதிபோன்றே, நேற்று மாலை, கொள்கை உறவாக நம்முடன் இணைந்தி ருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று உறுதி எடுத்திருக்கிறோம். அதை முடித்துவிட்டுதான் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

நம்முடைய ஹிட் திட்டங்களில், டிரெண்ட்-செட்டர் என்றால், அது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! நம்முடைய தமிழ்நாட்டைப் பார்த்து, பல மாநிலங்களும் உரிமைத் தொகை வழங்க தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தேர்தலைக் காரணம்காட்டி இந்த உரிமைத் தொகையை நிறுத்த, ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. திட்டம் தீட்டியது! நாங்கள் சும்மா இருப்போமா… விழித்துக் கொண்டோம். ஏழைகளின் சுருக்குப் பையிலிருந்துகூட, காசை உருவத் திட்டம் போடும் பா.ஜ.க.விற்கு, நம்முடைய திராவிட மாடலின் நலத்திட்டங்கள் மூலமாக மக்களுக்கு நேரடிப் பணப் பயன் கிடைப்பது எரியத்தான் செய்யும்! யார் வயிறு எரிந்தால் என்ன… மக்களின் மனது நிறைய வேண்டும்! அதுமட்டும்தான் என்னுடைய லட்சியம் – நோக்கம்! அதனால்தான், பிப்ரவரி மாதமே, மூன்று மாதத்திற்கான உரிமைத் தொகையை அட்வான்சாகவும் – கோடைக்கால சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாயைச் சேர்த்து, அய்ந்தாயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறோம்!

அதுமட்டுமல்ல, சற்றேறக்குறைய 22 ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டிருந்த கோரிக்கையான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தியிருக்கிறோம்.

இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் எதிர்க்கட்சியினர்!

இப்படி அனைத்து வகையிலும் தமிழ்நாடு டாப்பில் இன்றைக்கு வந்திருக்கிறது. இது, பா.ஜ.க. தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட அடிமைக் கட்சிகளுக்கு எல்லாம் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை எப்படியாவது கலவர பூமியாக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, ஏராளமான போலிச் செய்திகளைத் தொடர்ந்து பரப்பிப் பார்த்தார்கள். கலவர வெறியுடன் திரிந்த அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது! அவர்கள் பரப்பியது அனைத்துமே அவதூறுதான் என்று உண்மை வெளிப்பட்டு, இன்றைக்கு மக்கள் முன்னால் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது! அந்த பெருமிதத்தோடும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களோடும்தான், வாக்கு கேட்டு மக்களான உங்களைச் சந்திக்க, உங்கள் ஸ்டாலின் இன்றைக்குத் திருவாரூருக்கு வந்திருக்கிறேன்.

நேற்று முன்தினம், நான் வெளியிட்ட இந்தத் தேர்தல் அறிக்கைக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்! அந்தத் தேர்தல் அறிக்கையை நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்தீர்களா… அதெல்லாம் வாக்குறுதிகள் மட்டுமல்ல. திராவிட மாடல் 2.0-வில் நிச்சயம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள்!

அதில் முக்கியமானது,

இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கும் திட்டம்!

இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கும் திட்டம்… எவ்வளவிற்குக் கூப்பன் தரப்போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்தும் புது பொருளை வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் உங்களுக்குப் பிடித்த பிராண்டை வாங்கிக் கொள்ளலாம்! அதில் என்னென்ன பொருட்களைச் சொல்லி இருக்கிறோம்… பிரிட்ஜ், வாஷிங் மிசின், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன், மின்னடுப்பு. இதில், உங்கள் வீட்டுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, இனிமேல் மாதந்தோறும் பெறும் மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக கிடைக்கப் போகிறது!

அடுத்து, காலை உணவுத்திட்டம். இது குழந்தைகளின் பசியைப் போக்கும் திட்டம் மட்டுமல்ல, இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் திட்டம்! இனிமேல், காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப்போகிறோம்!

டெல்டா மண்டலத்தைச் சேர்ந்த, உழவர் பெருமக்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக மிகவும் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அது என்னவென்றால், 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!

இதுமட்டுமல்ல, புதுமைப்பெண் திட்டத்திலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் இனிமேல் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப் போகிறோம்!

உயர்கல்வி படிக்கச் செல்லும் பிள்ளைகளுக்கு அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம்.

அந்தப் பிள்ளைகள், உயர்கல்வி முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி கொடுத்து, மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையும் 6 மாதத்திற்கு வழங்கப் போகிறோம்.

குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்!

சோழ நாடு சோறுடைத்து என்கிற பெருமை கொண்ட டெல்டா மக்களான உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றுமொரு வாக்குறுதி: நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பேரிடர் கால இழப்பீடுகளாக இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு இனிமேல் எக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27 ஆயிரம் ரூபாயும், மானாவாரிப் பயிர்களுக்கு 12 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக் காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளும் இங்கு வந்திருப்பீர்கள். சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்கும் உங்களைத் தொழில் முனைவோராக முன்னேற்ற வேண்டும் என்று பிணை எதுவும் இல்லாமல் 5 இலட்சம் ரூபாய் வரை மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்போகிறோம்.

10 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்கப் போகிறோம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஒரு மாபெரும் தொலைநோக்குத் திட்டம் அறிவித்திருக்கிறேன். டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்! உறுதியாக சொல்கிறேன்… அடுத்த 5 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளுக்கான உட்கட்டமைப்பு மாறப் போகிறது.

இவ்வாறு, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர்ச்சியைப் காண்பதற்காக அடுத்த 5 ஆண்டிற்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப் போகிறோம்.

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம், கொஞ்சம்தான்! தேர்தல் அறிக்கை புத்தகத்தில் இன்னும் ஏராளமாக இருக்கிறது!

நான் கலைஞரின் மகன்… சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன்! அதுமட்டுமல்ல, சொல்லாததையும் அதிரடியாகச் செய்வேன்! இது உங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் NDA கூட்டணிக்கும் தெரியும்!

தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க வேண்டும். திராவிட மாடல் ஏற்படுத்தியிருக்கும் இந்த வளர்ச்சியை அழிக்க வேண்டும். இதுதான், NDA கூட்டணியின் நோக்கம்! NDA-வின் தலைமையாக இருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ்நாட்டில் நம்மை எதிர்ப்பதற்கு வலிமை இல்லை என்று, அ.தி.மு.க.வை விலைக்கு வாங்கியிருக்கிறது!

பொதுவாக, பா.ஜ.க-வைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யாது. ஆனால், தேர்தல் வந்துவிட்டது என்றால், கண்துடைப்பிற்காக பட்ஜெட்டில் சில அறிவிப்புகளைக் கொடுப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு அதைக்கூட செய்ய மனமில்லாத, வஞ்சக எண்ணத்தோடு இருக்கும் உருவம்தான் NDA.

பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்யவில்லை; நாம் வைத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை!

மதுரையில் ஒரு எய்ம்ஸ் அறிவித்தார்கள்; அதன் நிலைமையை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை!

சென்னை மெட்ரோ திட்டத்திற்கு நிதி தரவில்லை. ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறோம்; தரவில்லை!

குடிநீர் திட்டத்திற்கான நிதியும் தரவில்லை!

இத்தனை தடைகளையும் சமாளித்துப் பல்வேறு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். திறமையான நிர்வாகத்தால் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக உயர்ந்திருக்கிறோம்.

இருப்பதிலேயே என்ன கொடுமை என்றால்? ஹிந்தித் திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று, நம்முடைய வீட்டுக் குழந்தைகள் படிப்பதற்கான கல்வி நிதியைக்கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை! இப்படி வஞ்சக எண்ணம் கொண்ட கூட்டத்திடம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியுமா? இப்படிப்பட்ட வஞ்சக கூட்டத்திடம் தமிழ்நாட்டு மக்களை ஒப்படைக்க முடியுமா?

பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணியை
வேரோடு வீழ்த்த வேண்டும்!

NDAவைத் தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்! அப்போதுதான், தமிழ்நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும்! NDA கூட்டணி என்பது, எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதனால்தான் சொன்னேன்… இந்தத் தேர்தல் என்பது, தமிழ்நாடு அணி vs டில்லி அணி! தமிழ்நாடு vs NDA! தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும்! தமிழ்நாடு கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. – அ.தி.மு.க கூட்டணியையும், வேரோடு வீழ்த்த வேண்டும்!

நீங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும், நாம் போராடுவது, தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கும் கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வெற்றி! மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டுக்கான வெற்றி இது.

எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மண்ணின் மைந்தனாக கேட்கிறேன்… கலைஞரின் மகனாக கேட்கிறேன்… உங்களின் பொன்னான வாக்குகளை, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு நீங்கள் வழங்க வேண்டும்!

நான் உறுதியாகச் சொல்கிறேன்… அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் ஆட்சியை, நாங்கள் வழங்குவோம்!

NDA-வின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? தி.மு.க. சாதனைகளின் தொடர்ச்சியா?

ஏப்ரல் 23 அன்று, நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது நீங்கள் சிந்திக்க வேண்டியது, ஒன்றே ஒன்றுதான், NDA-வின் தமிழர் விரோத சந்தர்ப்பவாத கூட்டணியா? தி.மு.க. சாதனைகளின் தொடர்ச்சியா? என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்…

தமிழ்நாடு வளம் பெற… நல்லாட்சி தொடர்ந்திட… ஆதரிப்பீர் உதயசூரியன்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை!  வெல்வோம் ஒன்றாக!

– இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *