சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாகச் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி கற்பகம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள்
சென்னை மாநகராட்சி தலை மையிடமான ரிப்பன் மாளிகையில், வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனா ளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி துணை ஆணையரும், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கற்பகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு மாற்றுத்திறனாளி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் வருமாறு: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தரமான சாய்வுதள வசதி (Ramps) அமைக்கப்பட வேண்டும்.
சிறப்பு ஏற்பாடுகள்
தேவைப்படும் நபர்களுக்கு சக்கர நாற்காலிகள் (Wheelchairs) தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.வாக்குச்சாவடிக்கு உதவியாளர்களுடன் சென்று வாக்க ளிக்க உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். பார்வைத்திறன் குறைபாடு உடையவர் களுக்கான பிரெய்லி வசதி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக் கைகளை கனிவுடன் கேட்டறிந்த அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் முன்கூட்டியே உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர். மேலும், தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் திமுக மாற்றுத் திறனாளிகள் அணி மாநிலத் தலைவர் ரெ. தங்கம், டிசம்பர் 3 இயக்க மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரபு, மாற்றுத்திறனாளி சமூக நீதி இயக்கத் தலைவர் பி. சரவணன், வித்யாசாகர் அமைப்பின் சுமித்ரா மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
