உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்
தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர் களுக்கான தேநீர் விருந்துடன் கூடிய கலந்துரை – ஆலோ சனைக் கூட்டம் ஒன்றினை தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (30.3.2026) மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார்.
தேர்தலில் போட்டியிடாத ஒரே ஓர் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்குத் தனி அழைப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்தியா முழுவதும் தேர்தல்கள் நடந்த வண்ணமாகவே உள்ளன; கூட்டணி வைத்து கட்சிகள் போட்டியிடவும் செய்கின்றன.
முதன்மையான கட்சியானது – அந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது நடைமுறைதான். ஆனாலும், தி.மு.க. தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளதுபோல, வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
இத்தனைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து சேதாரம் இல்லாமல் வழிகாட்டி, கட்டுக்கோப்பாக அழைத்துச் செல் லுவது என்பது எளிதானதல்ல.
அதனைச் சிறப்பாக சாதித்துக் காட்டியது தி.மு.க. தலைவர் தான்!
அதேபோல கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி, எத்தனை இடங்கள், எந்தத் தொகுதிகள் என்று வரையறுத்து, வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தொடங்கிய நாளில், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், முன்னணி யினரையும் அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்து, தேர்தலில் போட்டியிடும் அத்தனைத்தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் – கேட்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தி.மு.க. தலைவர் அனைவரையும் வரவேற்று, கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறினார். சுமூகமான முறையில் கூட்டணி அமைந்ததற்கு ஒத்துழைப்பு அளித்த அத்தனைக் கட்சிகளின் தலைவர்களுக் கும், நன்றியினையும் தன் தலைமை உரையில் தெரிவித்துக் கொண்டார்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினரை அழைத்து, தேர்தலுக்கு முன்பு ஆலோசனை நடத்திய தி.மு.க. தலைவரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது என்று அனைவருமே மனமுவந்து பாராட்டினர்.
தி.மு.க. தலைவர் தன் உரையில் குறிப்பிட்ட ஒரு கருத்து அவரின் உயரத்தை வானளவிற்கு அழைத்துச் சென்றது.
‘‘20க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு முடிவை எட்டுவதில் பல சிரமங்கள் இருக்கத்தான் செய்தன. கூட்டணிக் கட்சிகள் கேட்ட எண்ணிக்கை மட்டுமல்ல; விரும்பிய தொகுதிகளைக் கொடுக்க முடியாத இடர்ப்பாட்டை – இக்கெட்டைப் புரிந்து கொள்வீர்கள் என்பதில் அய்யமில்லை! அதனால் மனவருத்தமும், கசப்பும் ஏற்பட்டிருக்குமாயின் அவற்றிற்காகப் பொறுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்ற முதலமைச்சரின் வார்த்தைகள் வந்தவர்கள் அனைவரையும் புதிய உணர்ச்சிக்கு ஆளாக்கின!
அந்த ஒரு நிமிடம் நெகிழ்ச்சியில் அனைவரையும் உறைய வைத்தன!
‘நமது கூட்டணியின் தலைவர் எத்தகைய பண்பாளர் – வழி நடத்தும் உன்னதத் தலைவர் – பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர்’ என்ற பெருமிதத்தில் அனைவரும் திளைத்தனர்.
‘தலைமைப் பண்பு’ என்பது சாதாரணமான ஒன்றல்ல! அந்த நிலையை எய்துவதற்கு கனிந்த அனுபவமும், முதிர்ச்சியும், விரிந்த உள்ளமும், விட்டுக் கொடுக்கும் பாங்கும் தேவை! இவை அனைத்தும் ஒருங்கே ஒருவருக்கு அமைவது என்பது நினைத்துப் பார்க்கப்படவே முடியாத ஒன்றாகும்.
இந்த இலக்கணம் அமைந்த தலைவர் என்பதை மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நிரூபித்துக் காட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் கூறிய இன்னொரு கருத்தும் மிக முக்கியமானது;
‘‘தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்ல; தி.மு.க. வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் தி.மு.க.வினர் எப்படி உழைக்கிறார்களோ, அந்த அளவுக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நிற்கும் தொகுதிகளிலும் தி.மு.க.வினர் கடுமையாக உழைத்து வெற்றி பெற வைக்க வேண்டும்; அதில் எங்கேனும் சோடைப் போயிருந்தால், அலட்சியம் காட்டியிருந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தான் எச்சரித்து இருந்ததையும் வெளிப்படுத்தினார் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அக்கூட்டத்தில் பங்கேற்ற – மூத்த தலைவர் – தேர்தல் கூட்டணியில் இல்லாத தலைவர் என்ற முறையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டிய, வலியுறுத்திய முக்கியமான கருத்து ‘கட்டுப்பாடு’ என்பதாகும் – அதுதான் நமது வெற்றிக்கு முக்கிய மான பலமாகும். அடித்தளமும் ஆகும் என்றும் வழிகாட்டினார்.
கூட்டணியின் தலைவர் பேச்சில் காணக் கிடைத்த அடக்கமும், அமைதியும், பொறுப்புணர்ச்சியும், அரவணைக்கும் தன்மையும் தலைமைப் பண்பும், கடமையும், கண்ணியமும் – அவரை மிகச் சிறந்த உயர்ந்த தலைவராகப் படம் பிடித்துக் காட்டியதை – தாய்க் கழகத்தின் தலைவர் உச்சிமோந்து பாராட்டினார்.
தி.மு.க. தலைமையில் அமைந்தது கொள்கைக் கூட்டணி – மக்கள் மனதில் இடம் பெற்ற கூட்டணி என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் களத்தில் சட்டப் பிரச்சினைகள், பணியில் சுணக்கம், இடர்ப்பாடு, முட்டுக்கட்டைகள் இருந்தால் அவற்றை உடனடியாகத் தெரிவிப்பதற்காக தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தனி ஏற்பாடுகள் (War Room) செய்யப்பட்டுள்ளன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அப்படித்தெரிவிக்கப்பட்டால், அவை என் கவனத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும் எ்னறும், அதன் மேல் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டணித் தலைவர் அவர்கள் தெரிவித்த கருத்து – தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு இருக்கும் அனுபவத்தி்ன் வெளிப்பாடாகும்.
‘‘ஒன்றாக செல்வோம்– நன்றாக வெல்வோம்!’’ என்பது வெறும் முழக்கமல்ல; செயல்பாட்டின் மறுவாசிப்பு என்ற முறையில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. – அதன் கூட்டணிக் கட்சிகள் – சமூக இயக்கங்கள், இலக்கிய வட்டாரங்கள், பொது நல அமைப்புகள் முழு மனதுடன் கடமையாற்றிட வேண்டும். தமிழ் நாட்டுக்கும், டில்லிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்தத் தேர்தல்’’ என்று முதலமைச்சர் கூறியதை உள் வாங்கி நடக்கட்டும் களப்பணிகள்! வெற்றி நமதே!
தமிழ்நாட்டின் இந்த வெற்றி இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியலிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிற்றளவும்கூட அய்யமில்லை!
