மிகப் பலம் வாய்ந்த வெற்றியே முக்கியம்!

4 Min Read

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 29.3.2026 அன்று வெளியிட்டார்.

பட்டுக்கோட்டையில் (29.3.2026) செய்தியாளர்களிடம்  பேசும்போது, திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தி.மு.க. வேட்பாளர் பட்டியலைக் குறித்து அவருக்கே உரித்தான முறையில் மதிப்பீடு செய்துள்ளார். ‘‘புதுமுகங்கள், இளைஞர்கள், மூத்தவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஓர் அழகான சித்திரமாக முதலமைச்சர் வெளியிட்ட பட்டியல் நேர்த்தியானது என்பதில் அய்யமில்லை’’ என்று தாய்க் கழகத்தின் தலைவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்தப் பட்டியலைப் பார்த்த மாத்திரத்திலேயே, ‘வெற்றிக் காற்று உதயசூரியன் நோக்கியே வீசும்’ என்பதில் அய்யமில்லை.

1957 சட்டமன்றத் தேர்தலில் அடி எடுத்து வைத்த தி.மு.க. கடந்த 69 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்தது. குக்கிராமங்கள் வரை தி.மு.க.வின் கட்டமைப்பு உள்ளதுபோல் வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

இது தி.மு.க.வுக்கு மிகப் பெரிய பலம் ஆகும்.

தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக் காலம் (2021–2026) என்பது – எதிரிகளின் வாயடைக்கச் ெசய்திருக்கிறது. சித்தாந்த ரீதியில் எதிர்த் திசையில் இருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு பல வகைகளிலும் திராவிட மாடல் அரசுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தாலும், அவற்றையும் கடந்து முதல் நிலை மாநிலமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை – இந்தியாவிலேயே முதல் இடத்தில் தி.மு.க. அரசு பிரகாசமாக ஒளி வீசுகிறது  என்பதை – எதிரிக் கட்சியாக ஒன்றியத்தின் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் பிஜேபியைச் சார்ந்த அமைச்சர்களே, நாடாளுமன்றத்திலேயே புள்ளி விவரத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு திராவிட மாடல் அரசு சாதனை படைத்து விட்டது.

நடக்க இருக்கும் தேர்தலில் நேர்மையான முறையில் எதிர்க்கட்சிகள் ‘திராவிட மாடல்’ அரசின்மீது புகார் கற்களை வீசி எறிய முடியாது – அப்படி எறிந்தாலும் அந்தக் கற்கள் திரும்பி வந்து குற்றங் கூறுவோரைத் தாக்கும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் முதலமைச்சர்களைத் தமிழ்நாடு கண்டுள்ளது. ஆனால், ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் முதல், அனைத்து அமைச்சர்களும் சதா மக்களிடையே சங்கமித்துக் காணப்படுகிறார்கள். ‘மக்களோடு மக்களாக உறவாடுவது’ என்பதுதான் ‘ஜனநாயகம்’ என்ற சொல்லுக்குச் சரியான அர்த்தமாகும்.

இதில் நூற்றுக்கு நூறு துல்லியமான ஆட்சியாக இருக்கிறது என்று மதிப்பிடுவோமேயானால், அந்த மதிப்பெண் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கே வந்து சேரும்.

சித்தாந்த ரீதியில் எதிரிகளை சந்திக்கிறோம் – பொருளாதார ரீதியிலும் ஒன்றிய அரசின் நெருக்கடிகளை சமாளிக்கிறோம். இயற்கைப் பேரிடர் போன்றவைகளுக்கு உதவ வேண்டிய மனிதநேயம் கூட இல்லாத ஓர் அரசாக ஒன்றியத்தில் மோடி தலைமையிலான ஆட்சி கால்மேல் கால் போட்டுக் கொண்டு ‘சட்டாம்பிள்ளை’த்தனத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது.

‘இரட்டை என்ஜின் ஆட்சி’ என்ற முறையில் ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு கருத்தினை எடுத்து வைக்கிறது.

இதன் பொருள் என்ன? ‘ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டு, அதே பிஜேபி ஆளும் மாநிலத்தின் கண்களுக்கு வெண்ணெய்யும், மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாற்றுக் கட்சிகளின் கண்களில் சுண்ணாம்பும் வைக்கும் விபரீத அணுகுமுறை’ என்ற விரிவாக்கத்தின் சுருக்கமான விஷச் சொற்கள்தான் ‘இரட்டை என்ஜின் ஆட்சி’ என்பது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மாநில ஆட்சிகளுக்கு மட்டும்தான் மக்கள் உண்டு; ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது. அதே நேரத்தில் மாநில அரசுகளுக்குரியவர்களை உறிஞ்சி இழுக்கும் மய்யமாக ஒன்றிய அரசு நடந்து வருகிறது.

ஒரு பக்கம் சித்தாந்தத்தையும் எதிர்க்க வேண்டும்; இன்னொரு பக்கம் ஒன்றிய பிஜேபி அரசால் திட்டமிட்டு வஞ்சிக்கப்படும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டும் என்கிற கம்பிமேல் நடக்கும் நிலை  இருந்தாலும், ‘இரட்டை என்ஜின் ஆட்சி’ நடக்கும் மாநிலங்கள் எல்லாம் மூக்கின் மீது விரலை வைத்துப் பார்க்கும் வகையில், வெற்றியுடன் வீர நடைபோடும் ஆட்சிக்குக் கிடைக்கும் பெருமை என்பது– கட்சிக்கு அப்பாற்பட்ட ஒட்டு மொத்த தமிழர்களுக்கே கிடைத்த தனிப் பெரும் பெருமையாகும். அதற்காக ஒவ்வொரு தமிழனும் – ‘திராவிட மாடல்’ அரசுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

திராவிட இயக்கம் நூற்றாண்டையும் கடந்த இயக்கம் – அதனுடைய நீட்சிதான் தி.மு.க.

திராவிட இயக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் இந்த மண்ணுக்கான கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுவது, இளைஞர் பாசறைகள் அமைத்து தயார்படுத்துவது என்பதுதான் முதல் பலம்! அந்த அடிக்கட்டுமானம் சரியாக இருந்தால் தான் அதன் மேல் எழுப்பப்படும் அரசியலும் நொடித்துப் போகாமல் இருக்கும்.

இன்றைக்கு இருக்கும் மதவாத அபாய நிலையிலிருந்த இந்தியத் துணைக் கண்ட மக்களைக் காப்பாற்றுவதற்கு – திராவிட சித்தாந்தம் இந்தியா முழுவதும் சுழன்றடிக்க வேண்டியது கட்டாயம்.

தமிழ்நாட்டில் மீண்டும் அமையும் ‘திராவிட மாடல்’ ஆட்சி எந்த அளவுக்கு முன்னிலும் பலமாக அமைகிறதோ, அந்த அளவுக்குத்தான் மதவாத சக்திகளை வீழ்த்த முடியும்!

நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை மேலோட்டமாகப் பார்க்காமல், இந்த அடிப்படைக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்;  அப்படிப் பார்த்தால்தான் இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் – குறிப்பாக பெண்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று பீடுநடை போட முடியும். இந்தக் கண்ணோட்டத்திலும் – நடக்க இருக்கும் தேர்தலை அணுக வேண்டியது அவசியம்!     அவசியமே!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *