செத்தும் பயன்தரும் சீரியர்கள் தொண்டு!

4 Min Read

மனிதன் ஒரு கூட்டுச் சமூகப் பிராணி. உலகமே ஒரு குலம். ‘‘மனிதம்’’தான் அவர்களுடைய தனித்த அடையாளம்! தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுயசிந்தனையாளர் –

விருப்பு, வெறுப்புகளை வென்றெடுத்து எதையும் – உண்மை காண – அதனை அதன் நிர்வாணத் தன்மையில் ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும்; அதற்கு முக்கியத் தேவை – ‘மனிதர்களுக்கு அறிவுச் சுதந்தரம் வேண்டும்’ என்பதை வற்புறுத்துபவர் தந்தை பெரியார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கண்ட சுயமரி யாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கமான பேத ஒழிப்புக்கான சமத்துவ இயக்கத்திற்கு மறுபெயர் சூட்ட வேண்டுமானால் ‘அறிவுச் சுதந்தர இயக்கம்’ என்று பெயர் சூட்டலாம் என்று கூறுவார்.

‘‘தனக்கு எந்தப் பற்றும் கிடையாது – அறிவுப் பற்று, வளர்ச்சிப் பற்றைத்தவிர’’ என்று தெளிவாகவும், உறுதியாகவும் தனது பகுத்தறிவுக் கொள்கைகளை, அச்சம் துளியும் இன்றி, வெறும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல், அறிவு வயப்பட்ட வாதங்களை தனது உரைகளில் கூறி, மக்களைச் சிந்திக்க வைத்து மனமாற்றம் கொள்ளச் செய்தார்.

நேரிடையாக அவரது கொள்கையை ஏற்று கருப்புச் சட்டை அணிந்து, அவரது தொண்டர் களாகுபவர்களைத் தாண்டி, எந்தக் கட்சி, எந்த வண்ணம் அடைந்தவர்களானாலும் அவர்கள் தந்தை பெரியார் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டு, அவர் வயப்பட்டவர்களாகவும் – ஏன் சில நேரங்களில், அவர்களை அறியாமலேயே அவரது கொள்கை வயப்பட்டவர்களாகவும் மாறி வாழ்ந்திடும் பல குடும்பங்கள் உண்டு.

வைதீகம், கடவுள் நம்பிக்கை இவை ஒருபுறம் இருந்தாலும், தந்தை பெரியார் இயக்கத்தின் இடையறாத அறிவுப் பிரச்சாரம் சூறாவளியென சுழன்றடித்த காரணத்தால் – வெகு மக்களின் சிந்தனையிலும், செயலிலும்கூட குறிப்பிடத்தக்க மாறுதலை தமிழ்நாடு கண்டு பெருமிதத்துடன் பெரும் பயனை நாளும் துய்த்து மகிழ்கிறது.

மத நம்பிக்கைக்கேட்ப, தங்களது நம்பிக்கைக் கேட்ப சடங்குகள் செய்து, உடல்களைச் சுமத்து சென்று எரிக்கவோ, புதைக்கவோ செய்து விடுவார்கள்.

ஆனால், இப்போது இளைஞர்கள், முதியவர்கள் சிந்தனையில் ஓர் அைமதிப் புரட்சி நடந்து வருவது பாராட்டத்தக்கது; அதே நேரத்தில் இப்படி ஒரு புதுமையான மாறுதல் எப்படி நடந்துள்ளது என்பதை சிந்தித்தால் – அது தந்தை பெரியார் இயக்கத்தின் மறைமுக தாக்கத்தினால் என்பது புலப்படும். இன்றைய நாட்களில்  ‘உடல் உறுப்புக் கொடை’ என்பது இயல்பாக வருகிறது!

உயிரோடு இருக்கும்போது –  குருதிக்கொடை (ரத்த தானம்), அடுத்து (இறப்புக்குப்பின்), உறுப்புக் கொடை – உடற்கொடை!

கண்தானம் என்பது விழிக்கொடை – இயக்கமாகவே ஆகி வருகிறது.

‘செத்தும் வாழுகிறார்கள்’ இந்த சீர்மிகு தன்னலம்  துறந்த தகைமைகள்!

இது தமிழ்நாட்டில்தான் மற்றொரு பாராட்டத்தக்க புதுமை  – தமிழ்நாடு அரசே, ‘உடற்கொடை’யை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தரும் குடும்பத்தவர்களுக்கு பாராட்டுச் சான்று நன்றியுடன் வழங்குகிறது!!

உடற்கொடையினருக்கு ‘அரசு மரியாதை தர வேண்டும்’ என்று (தி.மு.க.) ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் ஆணையே போட்டு அது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளது!

‘‘தியாகச் செம்மல்’’ அல்லது ‘‘தொண்டறக் குடும்பம்’’ என்ற பெயரில் ஒரு தனிச் சான்றிதழ் கொடுத்து, பெருமைப்படுத்தலாம்!

ஒரு முழு உடல் கொடை, மருத்துவக் கல்விக்கு முக்கிய பாட நூலின் செய்முறை விளக்கத்தை  பயனுற வகையிலும் சொல்லிக் கொடுக்கும்.

‘செத்தவர் பிழைப்பரோ?’ என்று சித்தர்கள் பாட்டுப்பாடிக் கேட்டதுகூட மாறி விட்டது இப்போது!

என்னே! மதுரையில் ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை!

அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட மூளைச் சாவு அடைந்தவரின் முக்கிய உடல் உறுப்புகள் (கிட்னி, இதயம் போன்றவை)  மதுரையிலிருந்து விமானம் மூலம் (1½ மணி நேரம் பறந்து வந்து)கொண்டு வரப்பட்டு சென்னையிலும், பெங்களூருவிலும் உடல் உறுப்பு தேவை மருத்துவப் பயனாளிகளுக்கு   பொருத்தப்பட்டு புதுவாழ்வு பெற்று மகிழும் நிலை உள்ளதே.

செத்தவரும் மற்ற வாழுபவர்க்குள்ள உடற் குறைகளை மாற்றி சரி செய்து  புதுவாழ்வுப் பொலிவு ஏற்படச் செய்கிறாரே!

இன்றுகூட ஒரு செய்தி இதோ! படியுங்கள்,

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் ெகாடை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 34). கடந்த 19-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கிய அருண்பாண்டியனுக்கு நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய குடும்பத்தினர் அருண்பாண்டியனின் உடல் உறுப்புகளை கொடை செய்ய முன் வந்தனர். இதையடுத்து அருண்பாண்டியனின் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண், தோல் உள்ளிட்ட 5 உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் அவற்றை 5 மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மறைந்த உடல் உறுப்புகளை எரிப்பதைவிட, புதைப்பதைவிட, மற்றவர்களுக்குப் பயன்படுகிறது என்று எண்ணும்போது, இதைவிட பெரிய தியாகமும், துக்கத்தைப் போக்கிக் கொள்ளும் துணிந்த நல் வழிகள் வேறு ஏது!

வாழ்க பரந்த உள்ளமுள்ள மனிதக் கூட்டம்!

வளர்க மனிதநேயம்!

தொடர்க பரப்புரைகளை!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *