சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்வு
இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் உள்ள சிறீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
இந்த உயர்வு வாகனத்தைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.100 வரை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து துறையில்
ஏற்படும் பாதிப்புகள்
இந்த கட்டண உயர்வு பொதுப் போக்கு வரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிக் கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
இயக்கச் செலவு அதிகரிப்பு: ஒரு ஆம்னி பேருந்துக்கு தினமும் சராசரியாக ரூ.2,000 சாலை வரியாக செலுத்தப்படும் நிலையில், கூடுதலாக ரூ.2,000-க்கும் மேல் சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. இது உரிமையாளர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.
கட்டண உயர் வைத் தவிர்க்க வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து கிராமப்புறச் சாலைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
நலிவடைந்து வரும் போக்குவரத்து துறையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தேசிய நெடுஞ் சாலைகளில் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அடிப்படை வசதிகள்: சுங்கச்சாவடிகளில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக ஏற்படுத்தித் தர வேண்டும். மக்களின் நலன் மற்றும் போக்குவரத்துத் துறையின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
