எப்போதும் ‘‘ஹீரோ’’வாக இருந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை இப்பொழுது ‘சூப்பர் ஸ்டாராக’ ஒளி வீசுகிறது! வாக்காளர்களே, தி.மு.க. கூட்டணி வெற்றி – நமது வாழ்க்கைக்கான படிக்கட்டு!

10 Min Read

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.3.2026) வெளியிட்ட தேர்தல் அறிக்கை – தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல, நாம், நமக்காகவே தேர்வு செய்யும் வாழ்வின் வளர்ச்சிக்கானது – இது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல – மக்கள் வளர்ச்சிக்கான ஆவணம், சாசனம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி, வர வேற்று வாழ்த்து அறிக்கை வருமாறு:

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்று சொல்வதுண்டு! அதையும் விஞ்சும் வகையில், தேர்தல் அறிக்கையென்றால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு நிகராகுமோ என்று சொல்லும் அளவிற்கு, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையையும் விஞ்சும் அளவுக்கு, அடுத்த தேர்தல் அறிக்கை – வெறும் ஆடம்பர வெற்றுச் சொற்கோவைக்கு இடமின்றி, ஆக்கப்பூர்வமான அம்சங்களை உள்ளடக்கமாகக் கொள்ளும் கடமையும், பொறுப்பும் வாய்ந்தவைகளாக ஒளிவிடுவதை நாடு கண்டு வருகிறது!

சம்பிரதாயமான
தேர்தல் அறிக்கை அல்ல!

கட்சிகளின் தேர்தல் அறிக்கை என்பது ஏதோ சம்பிரதாயமானது என்றிருந்த நிலைப்பாட்டிலிருந்து மாற்றி, மக்களின் வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தும் ஓர் ஆவணம் என்று கருதும் அளவுக்கு – தேர்தலின் கதாநாயகன் என்று பாராட்டும் நிலைக்கு ஜனநாயகத்தில் தேர்தல் அறிக்கையை முக்கியத்துவப்படுத்திய பெருமை தி.மு.க.வுக்கு உண்டு.

எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி!

தி.மு.க. தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிகளின்  எண்ணவோட்டத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும்.

அந்த வகையில், தேர்தலில் வைக்கப்பட்ட முதல் அடியே வெற்றிப் பதாகையாக ஜொலிக்கச் செய்துவிட்டது – 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களின் முன்வைக்கப்பட்ட தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!

ஒவ்வொரு தேர்தலின்போதும், கடந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் இவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறோம் என்று மார்தட்டிக் கூறும் அறிவு நாணயமும், துணிவும் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு!

அந்த சாதனைத் துணிவோடு மக்களைச் சந்தித்து வருகிறது! இந்தத் தேர்தல் அறிக்கையும் – தமிழ்நாட்டின் நிலைகளை அலசி ஆராய்ந்த, சலித்தெடுத்து, தேவையானற்றை மிச்ச சொச்சமின்றி அழகுறப் பட்டியலிடப்பட்டு உள்ளது. மக்களோடு மக்களாகப் பழகும் ஒரு கட்சிக்குத்தான் மக்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு அடையாளமான ஆவணம்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.3.2026) வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

ஊதும் அடுப்பை ஒழித்து எரிவாயு அடுப்பைத் தொடங்கி வைத்தவர் முத்தமிழறிஞர் முதலமைச்சர் கலைஞர்!

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில், 2006–2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் – ‘‘இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் திட்டம்’’ – அதை விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், அடுப்படியில் புகையினால் அவதிப்பட்டு, உடல்நலனும் பாதிக்கப்பட்ட பெண்களின் கையிலிருந்த ஊதுகுழலைப் பறித்து, சிலிண்டருடன் கூடிய இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்ததோடு நிற்கவில்லை; அறிவித்த அதே நிதியாண்டிலேயே 2006 செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணா பிறந்த நாளிலேயே செயல்படுத்தி யும் காட்டினார்.

ஆம், ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற பழைய பல்லவியை அடுப்பில் போட்டு எரித்து, அறிவியலின் வாசனையை பெண்களிடத்தில் கொண்டு சேர்த்தது தி.மு.க. ஆட்சியே!

(ஊதுகிற அடுப்பே மறந்து – மீண்டும் மோடி ஆட்சியில் திரும்புகிற விசித்திரமும் கண்கூடு)

‘பெண்ணடிமை என்பது மனித சமூக அழிவு’ என்றார் தந்தை பெரியார்!

‘‘பெண்ணடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெறவேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும், நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது’’ என்றார் பெண்ணுலகப் புரட்சியாளர் தந்தை பெரியார் (‘குடிஅரசு’, 16.6.1935).

தந்தை பெரியார் கொள்கைப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட கலைஞர் அவர்கள், அடுக்க டுக்காக பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அவர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார். அதற்காகத்தான் ‘‘மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்’’ என்ற விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தது திராவிடர் கழகம் (29.4.1990).

அதன் நீட்சியாக, சமூகநீதிக்கான ஆட்சி மாண்பாளர் – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த ஆட்சியில் (2021–2026) அடுக்கடுக்கான அரிய திட்டங்களைப் பெண்களுக்காகத் திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் காட்டினார், காட்டுகிறார்!

மகளிருக்கான
விடியல் வாழ்வின் மலர்ச்சி!

1.விடியல் பயணத் திட்டம் 2.புதுமைப் பெண் திட்டம் 3.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 4.அரசுப் பணிகளுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் வேலை வாய்ப்பில் 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறைக் கால அளவு 9 மாதங்க ளிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. பணி புரியும் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக ‘‘தோழி’’ என்ற பெயரில் அதிநவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள்.

அண்மையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை (ரூ.3 x 1000 = ரூ,3000)  கோடைக்கால சிறப்பு நிதி உதவி யாக ரூ.2000–மும் சேர்த்து ரூ.5,000 ஒரே தடவையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும், நீட்சியாக அடுத்த கட்ட பெண்கள் மேம்பாட்டுக்காக நேற்று (29.3.2026) முதலமைச்சர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் – ‘தொட்டிலை ஆட்டுங்கை தொல்லுலகை ஆளும் கை’’ என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் வரிக்கான செயலாக்கமாக ஒளிர்கிறது!

இல்லத்தரசிகளுக்கான
ஏற்றமிகு அறிவிப்பு!

  1. ‘‘நமது இல்லங்களில் அரசிகளான மகளிரை மகிழ்விக்க முக்கியமான வாக்குறுதி. இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களைப் புதிதாக வாங்க, ஏற்கெனவே உள்ள ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்ற ‘இல்லத்தரசி’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் இல்லத்தரசி கள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியில் அருகே இருக்கும் கடைகளில் இந்தப் பொருட்களை வாங்கிக் கொள்ள ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும்.’’

மகளிர் உரிமைத் தொகை

  1. இப்போது ‘மகளிர் உரிமைத் தொகை’ என்ற பெயரில் மாநிலம் முழுக்க ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த உரிமைத் தொகையானது வரும் ஆட்சிக் காலத்தில் 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாணவர் உதவித் தொகை

  1. கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி மாதம் தோறும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்- மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இனி ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்ப டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காலை உணவுத் திட்டம்

4.முதலமைச்சரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக, தி.மு.க. காலை உணவுத் திட்டத்தைக் குறிப்பிட்டு வருகிறது. (இது இந்தியாவையும் கடந்து, வெளிநாடுகளின் கண்களையும் அகல விரித்துப் பார்க்கச் செய்கிறது).  இந்தக் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே காலை உணவு வழங்கப்படுகிறது. 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதல மைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.

5.மாணவர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திட்டமான லேப்–டாப் திட்டம், கடந்தாண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அய்ந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் லேப்–டாப் வழங்கப்படும்.

அதேபோல, ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

6.இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

7.முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

சமூகநீதித் திசையில் பெரும் பாய்ச்சல்!

திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கை சமூகநீதி! முதலமைச்சர் நேற்று (29.3.2026) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சமூகநீதியில் பெரும் பாய்ச்சலைக் காண முடிகிறது!

1.இடஒதுக்கீட்டை முழுமையாக எல்லா நிலைகளிலும் நடைமுறைப்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

2.உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டிட இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வருவதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

3.ஒன்றிய அரசின் உயர்பதவிகளிலும், பொதுத்துறை நிறுவனங்கள், அய்.அய்.டி.,
அய்.அய்.எம்., எய்ம்ஸ், தேசிய சட்டப்பள்ளிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படாத அநீதி ஒழிக்கப்பட தேவையான முயற்சி!

4.சட்டபூர்வமாகத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு எண்ணிக்கையானது முழுமையாக நடை முறைப் படுத்தப்படும்: அது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

5.ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் ஆகிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்.

6.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பெண்களுக்கான தொழில்வாய்ப்புகளைப் பெருக்குவதற்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

7.தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு நடைமுறையை மாற்றி, அதற்குப் பதிலாக மாநில அரசின் இடஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்தப்படும்.

8.தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் எடுக்கப்படவுள்ள ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படும்.

வளமான வாழ்வுக்கான
நட்சத்திரப் புள்ளிகள்!

5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி.

அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா.

ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, 50 லட்சம் வேலைவாய்ப்பு.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை.

தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும்.

மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள்.

திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்.

5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

தொழிற்சாலைகளுக்குச் செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகங்கள்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவம் பிற்படுத்தப்பட்டோர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.

மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள்.

தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்.

மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்.

அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் மய்யங்கள்.

கவர்ச்சித் திட்டங்களல்ல –
வளர்ச்சித் திட்டங்கள்!

முதியோர் உதவித் தொகை ரூ.1,200–லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தித் தரப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500–லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பல்வேறு துறைகளிலும் சிறப்புறப் பணியாற்றிடும் திருநர் – திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இருபால் மாணவர்களும் பள்ளி இடை நிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தி.மு.க. ஆட்சியின் அறிவிப்புகளும், திட்டங்களும் வெறும் அச்சிட்ட காகிதங்களாக இருந்ததில்லை. அவை உறுதியாக செயல்படுத்திக் காட்டப்பட்டவைகளாக இருந்தவற்றை கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மக்கள் பார்த்திருக்கிறார்கள் – அனுபவித்தும் வருகிறார்கள்.

சொன்னதை செய்யும் ஆட்சி!

மேலும், சொல்ல வேண்டுமானால், தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவைகளும் தி.மு.க. ஆட்சியில் செயல்மலர்களாகப் பூத்துக் குலுங்கி யிருப்பதை சுவாசித்திருக்கிறோம்.

ஆட்சிக்கு வர இயலாதவர்கள் எதை வேண்டு மானாலும் சொல்லலாம்; ஆட்சிக்குக் கண்டிப்பாக வரப் போகிற தி.மு.க. ஆட்சி, அப்படியெல்லாம் அள்ளிவிட முடியாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் பொறுப்பாக – ஆக்கப்பூர்வ வாக்குறுதிகளை ஆழ்ந்து சிந்தித்து, மாவட்டங்களில் எல்லாம் சுற்றுப் பயணம் செய்து, மக்களின் குறைகளை நேரில் அறிந்து, எதிர்பார்ப்புகளை நேரிலேயே தெரிந்துகொண்டு, நடைமுறை சாத்தியத்தோடு தேர்தல் அறிக்கை அறிவியல் கண்ணோட்டத்தோடு வகுத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கை எத்தகையது?

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் அவர்கள், ‘‘தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் எப்போதும் ‘ஹீரோ’! இப்போது ‘சூப்பர் ஸ்டாராக’க் களம் இறங்கியிருக்கிறது – ‘திராவிட மாடல்’ 200 தொகுதி களுக்குமேல் வெல்லும். ‘வெல்வோம் ஒன்றாக!’’’ என்று நிறைவாகச் சொன்ன இந்த வாசகம் வெறும் வார்த்தைகள் அல்ல – நாட்டு மக்களுக்கான உரிமை சாசனமேயாகும்.

வாக்குச் சாவடி செல்லுமுன் ஒரே ஒரு மணித்துளி சிந்தித்தாலே போதும்!

தி.மு.க.வின் இத்தேர்தல் அறிக்கை ‘அடுத்த தேர்தல்’ என்று சிந்திப்பதைத் தாண்டி, அடுத்த தலை முறைகளையும் சேர்த்து எண்ணி உருவாகியுள்ள, மாற்றத்திற்கான மகத்தான வெளிச்சமும்கூட!

வாக்குச் சுத்தம் உள்ளது தி.மு.க. தேர்தல் அறிக்கை – கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம் – பயனையும் அனுபவித்திருக்கிறோம் – இனியும் நமது வளர்ச்சிக்கான ஆட்சி – மக்களுக்கான ஆட்சி தி.மு.க. தலைமையிலான ஆட்சியே என்று உறுதியான நம்பிக்கையோடு தி.மு.க.வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வெற்றி பெறச் செய்வோம்! அந்த வெற்றி, ஒரு கட்சிக்கான வெற்றியல்ல – நமக்கான வெற்றி – நமக்கு நாமே சூட்டிக்கொள்ளும் பெருவெற்றி என்பதை உணர்வீர்!

உதிக்கட்டும் உதயசூரியன்! மறையட்டும் காரிருள்!!

தேர்தல் அறிக்கையை அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக, ஆவணமாக, சாசனமாகத் தயாரித்த தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது உளப்பூர்வமான பாராட்டுகள், வாழ்த்துகள்!

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

30.3.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *