பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய எழுச்சி உரை!

8 Min Read

‘‘தோழனே! நீ வீசுகின்ற கற்கள் ஒவ்வொன்றும் என்ன சொல்கின்றன தெரியுமா? அழகிரியே, மேலும் பேசு; உரத்துப் பேசு;
பேசுவதை மட்டும் நிறுத்தாதே என்றுதான் சொல்லும்!’’ இப்படி முழங்கியவர்தான் அஞ்சா நெஞ்சன் அழகிரி!
அந்த ஆணி வேரின் மீது எழும்பியதுதான் இந்த ‘திராவிட மாடல்’ அரசு!

பட்டுக்கோட்டை, மார்ச்,29. “ஈட்டி எட்டிய வரையிலும் பாயும்; பணம் பாதாளம் வரையிலும் பாயும்; எங்கள் தந்தை பெரியாரின் கொள்கைகள், இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்தையும் தாண்டி அதற்கு, அப்பாலும் பாயும்” என்று பேசியவர் தான் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி என்று அழகிரியின் பேச்சு வன்மையை சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், “சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும்” எனும் தலைப்பில் மாபெரும் பரப்புரைக் கூட்டம், 28.03.2026  அன்று மாலை 5 மணிக்கு, அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில் – தினசரி சந்தை வளாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், மாவட்டக் காப்பாளர் அத்திவெட்டி பெ.வீரையன்  தலைமையில், மாவட்டச் செயலாளர் கா.தென்னவன் வரவேற்புரை வழங்க இந்நிகழ்வு தொடங்கப்பட்டது. பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரம், தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் ச.குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ஆ.ரத்னசபாபதி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பெரியார் பெருந்தொண்டர் அ.காளிதாசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்து சிறப்பித்தார். தொடர்ந்து, மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் அசோக் ராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சி.நா.சக்கரவர்த்தி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் செந்தில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு, முன்னிலை வகித்து உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி  நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்

திராவிடர் கழகம்

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி ஜவாஹிருல்லா, மணப்பாறை சட்டமன்றத் தொகுதி அப்துல் சமது ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்துப் பயனாடை அணிவித்தனர். அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர். உடன்: எஸ்.ஏ. ஷேக்முஹம்மதுஅலி, முஸ்தபா, தாஹா நவீன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 29.3.2026)

தொடக்கத்தில், “புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குழு”வினர் பாவலர் பொன்னரசு  தலைமையில், உமா மகேஸ்வரி, சந்திரமதி, மகாராஜன் ஆகியோர் எழுச்சிகரமான இயக்கப் பாடல்களைப் பாடினர். “கருப்பு நிறத்தில் தந்தை பெரியார் பெண்ணுரிமையை மீட்டெடுத்த எங்கள் பெரியார்”, “பெரியார் ஒருவர் தான் பெரியார்”, “மானமுள்ள எல்லோருக்கும் மனிதன் என்ற அறிவு இருக்கும்”, “இப்படி ஒரு தலைவரை நாம் பார்க்க முடியுமா?”, “படிப்புக்கு அறிவுக்கு சம்பந்தமில்லை படிச்சவன் பல பேருக்கு பகுத்தறிவு இல்ல”, “அய்யா பெரியாரின் போர்படைத் தளபதி; அவர் ஆரியர் ஆதிக்கத்தை அதிரடித்த தளபதி” உள்ளிட்ட ஏராளமான பாடல்கள், இசைக்கருவிகளின் பின்னணியுடன் பாடப்பட்டன.

கழகத் தலைவர் ஆசிரியர் இரவு 7:30 மணிக்கு நிகழ்விடத்துக்கு வருகை தந்தார். திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திகப் பொன்முடி தலைமையில், இளைஞர்கள் கழகத் தலைவரை கொள்கை ஒலி முழக்கங்கள் முழங்க எழுச்சிகரமாக வரவேற்றனர். மேடைக்கு வருகை தந்த கழகத் தலைவருக்கு பல்வேறு அமைப்பினர், கட்சிப் பொறுப்பாளர்கள் பொன்னாடையணிவித்து மரியாதை செய்தனர், பெரியார் உலகம் நன்கொடையும், விடுதலை சந்தாக்களும் ஆசிரியர் அவர்களிடம் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், இயக்கப் புத்தகங்களை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யும் முகத்தான், ஓட்டுநர் அருள்மணி ஒத்துழைப்புடன் ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் வாசித்து, மக்கள் வாங்கிப் பயன்பெற அழைப்பு விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து, மேடை நிர்வாகத்தையும் அவரே மேற்கொண்டார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டு, அவர் உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

எஸ்.டி.பி.அய். சார்பில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முகமது முபாரக் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர். உடன்: அமீர் ஹம்சா, ரசீத் மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 29.3.2026)

அவர் தமது உரையை, “திராவிட மாடலுக்கு அடித் தளமிட்ட அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவர் பிறந்த ஊரில் உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்” என்று உணர்ச்சிப் பூர்வமாகத் தொடங்கினார். மேலும் அவர், “இந்த மண் எங்களுக்கும் புதிதல்ல; நாங்கள் உங்களுக்கும் புதிதல்ல.  80 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் நான் பேசியிருக்கிறேன்” என்று தனக்கும், பட்டுக்கோட்டை மண்ணுக்கும் உள்ள நீ…ண்ட நெ…டிய தொடர்பை சுட்டிக்காட்டினார். தவிர்க்கவே முடியாமல், அந்தக் காலத்து திராவிடர் இயக்கத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “அன்றைக்கு அழகிரி பேசிய கூட்டங்களில் கல் விழாத கூட்டங்களே இல்லை” என்றும், “கல் தன் மீது விழுந்த பிறகும், அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் எதிரில் நிற்கும் பொது மக்களைப் பார்த்து, கம்பீரமாக, “தோழனே! நீ வீசுகின்ற கற்கள் ஒவ்வொன்றும் நாங்கள் பேசுவதை நிறுத்தி விடாது. அதற்குப் பதிலாக, அழகிரியே மேலும் பேசு; உரத்துப் பேசு; தெளிவாகப் பேசு; என்று தான் சொல்லும்” என்றும், “உங்கள் ஊருக்கு வந்தவர்களை கல்வீசி வரவேற்பது தான் உங்கள் பண்பாடு போலும் என்று தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். ஆகவே, உங்களுக்கு நன்றி காட்ட வேண்டாமா? நானும் பேசிக்கொண்டே உங்கள் மீது கற்களை வீசுகிறேன்” என்றும் பேசி, அவர்களை வெட்கப்பட வைத்து இயக்கத்தை வளர்த்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி” என்றும் அழகிரியின் எந்த இயக்கத்தவரிடத்தும் பார்க்க முடியாத சொல்ல முடியாத பெருமைகளை வரிசையாக விவரித்தார்.

தொடர்ந்து அவர், மேலும் ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்தை சுட்டிக்காட்டி உரையாற்றினார். அதாவது 1930 களில் அன்றைக்குப் பிரபலமாக இருந்த நாதஸ்வர விற்பன்னர் சிவக்கொழுந்து, வியர்வையைத் துடைக்கும் சிறு துண்டைத் தோளில் போட்டமைக்காக  ஜாதி ரீதியாக விமர்சிக்கப்பட்டபோது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சா நெஞ்சன் அழகிரி, அதைக் கடுமையாக எதிர்த்ததுடன், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு தான் வாசிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அன்றைக்குப் பட்டுக்கோட்டையில் முகாமிட்டிருந்த தந்தை பெரியாரும் நிகழ்விடத்துக்கு வந்து, அழகிரியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். இறுதியில் சிவக்கொழுந்து சிறு துண்டைத் தோளில் போட்டபடியே நாதஸ்வரத்தை வாசித்தார் என்பதை சொல்லிவிட்டு, 1973இல் தந்தை பெரியாரின் 95 ஆம் பிறந்தநாள் நிகழ்வில், நாதஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு “நாதஸ்வர சக்கரவர்த்தி” என்று பட்டம் சூட்டும் நிகழ்வில் சிவக்கொழுந்துவின் தோளில் துண்டைப் போடக்கூடாது என்று எதிர்த்த உயர் ஜாதியைச் சேர்ந்த ராஜா சர்.முத்தையா (செட்டியார்) அவர்களை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு இணையாக; சரிசமமாக தன்னுடன் அமர வைத்து, ஜாதியின் முதுகெலும்பை உடைத்த அரிய வரலாற்றையும் எடுத்துச் சொல்லி அழகிரியின் கொள்கை உறுதி எவ்வளவு பெரிய தாக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்திக் இருக்கிறது என்பதை எடுத்து இயம்பினார்.

மேலும் அவர், 1955இல் அஞ்சா நெஞ்சன்   அழகிரி அவர்களின் நினைவிடத்திற்கு தந்தை பெரியார் சென்றபோது, அங்கு பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாதார்க்கும் தனித்தனி இடுகாடு இருந்ததைப் பார்த்து, அதைக் கண்டித்து எழுதினார். அதன் காரணமாக அந்தப் பாகுபாடு ஒழிக்கப்பட்டது. அழகிரி கல்லறையில் இருந்த போதும் ஜாதி ஒழிப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறார் என்ற ஆழமான தகவலையும் சொல்லி, ‘‘அஞ்சா நெஞ்சன் அழகிரி தான் திராவிட இயக்கத்தின் ஆணிவேர்! அந்த ஆணி வேரின் மீதுதான் இன்றைக்கு இருக்கும் திராவிடம் மாடல் அரசு கட்டப்பட்டு இருக்கிறது. இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. இது தெரியாமல், வடக்கிலிருந்து வரும் சிலர் திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி வீசி விடுவோம் என்கிறார்கள். அந்த வேர் எங்கே இருக்கிறது? என்பது அவர்களுக்குத் தெரியாது. அஞ்சா நெஞ்சன் தான் அந்த வேர்!’’ என்பதைக் கூறி, அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பேச்சு வன்மைக்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிட்டார். அதாவது, “ஈட்டி எட்டிய வரையிலும் பாயும்; பணம் பாதாளம் வரையிலும் பாயும்; எங்கள் தந்தை பெரியாரின் கொள்கைகள், இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்தையும் தாண்டி அதற்கு அப்பாலும் பாயும் என்று தந்தை பெரியாரின் கொள்கைகளின் வீரியத்தை கம்பீரமாக எடுத்துச் சொல்வதைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்” என்று சொல்லி, “இது தெரியாமல் அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாத புதியவர்கள் சிலர், திராவிட மாடல் அரசை எதிர்ப்பதாக உளறிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்கள் மத்தியில் நன்றாக சென்று சேர்ந்திருக்கின்றன. ஆகவே, திராவிடம் மாடல் அரசுதான் மறுபடியும் ஆட்சி அமைக்கும். அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல; கூட்டணி கட்சியினருக்காக அல்ல;  உங்களுக்காக;  உங்களின் சந்ததிகளுக்காக; அவர்களின் கல்வி வேலைவாய்ப்புகளுக்காக; சுயமரியாதையான வாழ்வுக்காக’’ என்று கூறி, வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை, அதன் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி, தமது உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி நன்றி சொல்லி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார். தொடர்ந்து கழகத் தலைவர் பட்டுக்கோட்டை செய்தியாளர்களது   கேள்விகளுக்கு உரிய பதில்களை அளித்தார். பின்னர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மன்னார்குடி ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன், மாவட்ட ப.க.புரவலர் என்.கே.ஆர். நாராயணன், வீர விளையாட்டுக் குழு மாநில அமைப்பாளர் கறம்பக்குடி முத்து, பட்டுக்கோட்டை பொதுக்குழு உறுப்பினர் வளர்மதி சேகர், விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் அ.திருப்பதி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அ.தேவிகா, மாவட்ட மகளிரணித் தலைவர் நீ.தேவி, மதுக்கூர் ஒன்றியத் தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, சேதுபாவா சத்திரம் ஒன்றியத் தலைவர் சி.செகநாதன், அறந்தாங்கி மாவட்ட ப.க. தலைவர் தங்க.கண்ணன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா துரைராசு,  ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர் இ.அல்லிராணி, பேராவூரணி நகர தலைவர் சி.சந்திரமோகன், பேராவூரணி நகரச் செயலாளர் த.நீலகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் முத்து துரைராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சோம.நீலகண்டன், ஒன்றியத் தலைவர் இரா.வீரமணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அரவிந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக் காப்பாளர் அரு.நல்லதம்பி மற்றும் பொதுமக்கள் இந்தியா கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *