சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யவும், மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0′ ஆட்சியை அமைக்கவும் இளைஞர் அணி தீவிரமாகச் செயல்படும் எனத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திமுகவின் முதன்மை அணியான இளைஞர் அணியைப் பலப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைகள், வார்டுகள் மற்றும் பாகங்கள் (Booths) என அனைத்து நிலைகளிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது ஒரு மிகப் பெரிய தேர்தல் கட்டமைப்பு என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், ‘களத்தில் இளைஞர் அணி’ எனும் மாபெரும் தேர்தல் பிரச்சார முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பின்வருமாறு அமையும்:
பாக வாரியாகச் சந்திப்பு: ஒவ்வொரு பாகத் திலும் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி மீது ஆர்வம் கொண்ட 10 இளைஞர்கள் இணைந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள இளம் வாக்காளர்களை நேரில் சந்திப்பார்கள்.
இரண்டு முறை சந்திப்பு: தேர்தல் நாளான 23.04.2026-க்குள், அனைத்து வாக்காளர்களையும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பார்கள்.
“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை” என்ற உறுதியுடன் இப்பிரச்சாரம் அமையும் என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், மாநில உரிமைகளை டில்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் ‘அடிமைகளின்’ எண்ணத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என்றும், கடந்த 5 ஆண்டுகால அரசின் சாதனைகளை ஒவ்வொரு இல்லத்திற்கும் கொண்டு சேர்ப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.
