பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே!
பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள்
வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை!
அவர்கள் வாழ்கிலர்; மாய்கின் றார்கள்.
பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும்
பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர்
மாய்கின் றார்என எண்ணுதல் மடமை
அவர்கள் மாய்கிலர்; வாழு கின்றனர்.
சாக வேண்டிய தமிழர் சாகிலர்:
வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்!
வறள வேண்டிய தமிழகம் வறண்டிலது
காரணம் பெரியார் கண்கா ணிப்பே !
அன்னார் நினைப்பெலாம் தமிழர்க் கேயாம்
உரைப்பன தமிழர்க் குறுதி பயப்பன
அவர்தாம் தமிழர்க்குத் தமிழகம் அளிப்பவர்
அந்த முதியோர் ஆற்றலைத் தாண்டிநீ
எங்கே ஓடி எதுபெற முடியும்?
மலையுச்சிக் கப்பால் பிலத்தின் கீழ்ப்படி!
புகழ்வேண் டாமா உனக்கு? மிகமிக
அறம்வேண் டாமா உனக்கு? நிறம்பல
கூறித் தமிழரைக் கொல்வார் குதிகால்
நரம்பை வெட்டுதல் நல்ல தொண்டல்லவா?
என்செய வேண்டும் இதற்கெலாம் எண்ணுக!
என்றும் பெரியார் நன்னெறி பற்றுக!
தப்புக் கணக்குப் போடாதே
செப்பேட்டில் உன்புகழ் செதுக்குக நீயே!
(‘குயில்’ – 17.2.1959)
(‘விடுதலை’ – 22.2.1959, ப.4)