25.3.2026 அன்றைய
‘துக்ளக்’ இதழுக்கானப் பதிலடிகள்
கேள்வி (1): இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடிக்கு எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்துள்ளது பற்றி?
பதில்: அதனால் என்ன? நமது நாடாளுமன்றத்தில் ராஹுல் மோடியை வசைபாடுவது நின்றபாடில்லையே.
பதிலடி: அதெல்லாம் சரிதான். இஸ்ரேல் யூதர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் – ஆரியர்களுக்கும் நெருக்கமான உறவு – தொடர்பு உண்டு. இஸரேலில் யூதர்கள் 73 விழுக்காட்டினர்.
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் – அமெரிக்கக் கூட்டுக் களவாணிகளால் கொல்லப்பட்டதற்கு ஓர் இரங்கல் கூடத் தெரிவிக்கும் நாகரிகம் – பண்பாடு இந்தியப் பிரதமருக்கு இல்லையே!
* * * * *
கேள்வி (2): கிருஷ்ணர் கீதையைச் சொன்னார், ராமர்..?
பதில்: கிருஷ்ணனின் கீதையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். ராமனின் வாழ்க்கையைப் பார்த்து அதன்படி நடக்க வேண்டும் – என்று கூறினார் மஹாத்மா காந்தி.
பதிலடி: காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே கூட கீதையின் சுலோகத்தை நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி, காந்தியாரைப் படுகொலை செய்ததற்குத் தன் பக்கத்தில் உள்ள நியாயத்தை (?) கூறினான் – அந்தக் கீதையை குருமூர்த்திகள் உயர்த்திப் பிடிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
* * * * *

கேள்வி (3): ஓட்டுக்குப் பணம் வாங்குவது தவறா, கொடுப்பது தவறா?
பதில்: வாங்குவது அறத்துக்கு எதிரானது – கொடுப்பது சட்டத்துக்கு எதிரானது.
பதிலடி: இதற்கு குருமூர்த்தி அய்யரின் குருவான திருவாளர் ‘சோ’ ராமசாமி அய்யரே பதில் சொல்லியிருக்கிறாரே!
கேள்வி: இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கிடலாம் என்ற அரிய தத்துவத்தை முதலில் கண்டுபிடித்த ஜீனியஸ் காங்கிரஸா, திமுகவா?
பதில்: இவர்கள் யாருமில்லை; விபூதி, குங்குமத்தோடு நிற்காமல் புளியோதரை, வெண் பொங்கல்னு இலவசமா கொடுத்த பக்தர்கள் வருவாங்கன்னு கண்டுபிடித்த கோயில்கள் தான் (‘துக்ளக்’, 20.6.2012)
* * * * *
கேள்வி (4): சோ போல் நீங்களும் அரசியல் சாணக்கியராக மாறிவிட்டீர்கள்தானே?
பதில்: சோ-வைப் போல் எதிலும் இல்லாத நான், அரசியலில் மாத்திரம் எப்படி அவரைப் போல் சாணக்கியர் ஆக முடியும்?
பதிலடி: ஓ அதுவா? அரசியலில் நான் தரகு வேலை செய்கிறேன் (‘ஆனந்த விகடன்’, 1.3.2012) என்று குருமூர்த்தி அய்யரின் குருநாதர் சொல்லியிருக்கிறாரே!
* * * * *
கேள்வி (5): துக்ளக் பத்திரிகை பா.ஜ.க. கொள்கைவழியில் தான் செயல்படுகிறது என்கிறேன். இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: சோ காலத்திலேயே இந்தக் குற்றச்சாட்டு இருந்தது என்பது, புதிய வாசகரான உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
பதிலடி: குற்றச்சாட்டை மறுக்கவில்லை – அவர்களுக்கே உரித்தான கொல்லைப்புற வழியில் பதில் சொல்லி இருக்கிறார் அவ்வளவுதான்!
* * * * *
கேள்வி (6): பிரதமர் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் உயரிய விருது வழங்கப்படுவதன் ரகசியம்?
பதில்: அவர்கள் உயரிய விருதை மோடிக்குத் தருவதற்குக் காரணம், ஜனநாயக உலகில் மிக உயர்ந்த தலைவர் என்று கருதப்படும் மோடியால், அந்த விருதுக்கும் பெருமை என்பதால்தான்.
பதிலடி: நல்ல தமாஷ்! மோடி ஜனநாயகவாதியாம்! ஜனநாயகத்தின் முக்கிய மய்யமான நாடாளுமன்றம் நடக்கும்போதே – வெளிநாட்டுக்கு ‘டூர்’ கிளம்பி விடுவார்; அப்படிப் போகாமல் டில்லியிலேயே இருந்தாலும் நாடாளுமன்றப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார் – நாடாளுமன்றத்தில் இதுவரை எத்தனைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்? ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது உண்டா?
இத்தகைய ஒருவர்தான் ஜனநாயக உலகில் கொடிகட்டிப் பறக்கிறாராம்! வேலிக்கு ஓணான் சாட்சி என்பது இதுதானோ!
* * * * *
கேள்வி (7): ட்ரம்ப்பிஸம், ராஹுலிஸம் – இரண்டில் எது டாப் டூப்பிஸம்?
பதில்: இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது. நம்மைப் பற்றி ட்ரம்ப் கூறும் பொய்களின் எதிரொலி அரசியலை செய்வது ராஹுலிஸம். ராஹுல் எதிரொலி அரசியல் செய்வார் என்று நம்பி பொய் கூறுவது டிரம்ப்பிஸம்.
பதிலடி: முக்கியமான ஒன்றான பூணூலிசத்தை விட்டு விட்டீர்களே, குருமூர்த்தி அய்யர்வாளே?
* * * * *
கேள்வி (8): திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி, ஸ்வாமி தரிசனம் செய்தது வரவேற்கத்தக்கதா?
பதில்: தனது மதச்சார்பின்மைக்குத் தீட்டுப் பட்டு விடுமோ என்று அஞ்சிய முந்தைய பிரதமர்களைப் போல், கோவிலுக்குச் செல்ல அஞ்சும் பிரதமர் அல்ல நரேந்திர மோடி.
பதிலடி: அடுத்த மதத்தினரின் வழிபாட்டு இடங்களை இடிப்பது, கோயில் கோயிலாகச் சுற்றி சாமி கும்பிடுவது, பக்திப் பிரச்சாரம் செய்வது, மதவாதம் பேசுவது – இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் தானே ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி வகையறாக்களின் கைமுதல்! சாதனைகளை சொல்லுவதற்குச் சரக்கு இல்லாத போது மத நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் தானே அவர்களின் யு(ப)க்தி!
* * * * *
கேள்வி (9): ஆர்.எஸ்.எஸ். தினசரி ஷாகாவில் நீங்கள் கலந்து கொண்டது உண்டா?
பதில்: 1971-லிருந்து 20 ஆண்டுகள் தினசரி ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்தியும் இருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மூலம் நான் பெற்ற தேசபக்தி, கட்டுப்பாடு, நேர்மை, துணிவு, எளிமை, பணிவு ஆகிய நற்குணங்கள் என் தனி மற்றும் பொதுவாழ்க்கையைச் சீரமைத்தது.
பதிலடி: திருப்பதிக்குப் போய் மொட்டைத் தலையனைப் பார்த்தீர்களா என்று கேட்பது போலிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்க அரும்பாடுபட்ட காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே குருமூர்த்தி அய்யர்வாளின் மகான்! (ஆதாரம்: ‘துக்ளக்’, 12.5.2021, பக். 15) ஆமாம் ஆர்.எஸ்.எஸ்.சில் ஆண்டு காலம் பயிற்சி பெற்றதாக மார்தட்டும் நீதிபதியை மறந்து விட்டீர்களே!
* * * * *
கேள்வி (10): அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானில் 1,000 பேர் பலியாகியுள்ளது நெஞ்சை உருக்குவதாக உள்ளதே?
பதில்: ஈரான் தூண்டுதலில் 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஒரே நாளில், காஸாவில் ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் மடிந்தது நெஞ்சை உருக்கவில்லையா? அதற்குப் பழிவாங்கல்தான் இது, இன்றைய உலகம் ஆன்மிக உலகம் அல்ல. பழிக்குப் பழி எனும் அசுர உலகம்.
பதிலடி: ஆன்மிக உலகமென்றால் அகிம்சையின் மறுவடிவமோ!
நாதுராம் கோட்சே ஆன்மிகவாதி அல்லவா!
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது ஆன்மிகம் அல்லவா?
இந்தக் கொலையை ஆண்டுதோறும் மதுரையில் பக்திப் பரவசத்தோடு கொண்டாடுவது ஆன்மிகத் தத்துவத்தின் மயிர்க் கூச்செறியும் நிகழ்வோ!
* * * * *
கேள்வி (11): ஒவ்வொரு செவ்வாயும் தவறாமல் வரும் துக்ளக் இதழில், 8 நாட்கள் கழித்து தேதி இடப்படுகிறதே? ஏன் இந்த முரண்பாடு?
பதில்: முரண்பாடு இல்லை. துக்ளக்கில் வரும் விஷயங்களைப் படித்து, விவாதித்து, ஜீரணிக்க ஒரு வாரம் ஆகும் என்பதால், அதற்கு 8 நாள் கழித்து தேதி இடப்படுகிறது.
பதிலடி: ஜீரணிக்க எட்டு நாள் தேவைப்படுகிறதா? ரொம்பவும் ஆபத்து! அஜீரணக் கோளாரால் ஏதாவது வந்து தொலையப் போகிறது – ஜாக்கிரதை!
* * * * *
கேள்வி (12): 5 வருட ஆட்சியும், கூட்டணியின் வாக்கு வங்கியும் வாங்கித் தராத ஓட்டுகளை, நடுராத்திரியில் அனுப்பும் 5,000 ரூபாயும், 2,000 ரூபாயும் வாங்கிக் கொடுக்குமா?
பதில்: 5 வருட ஆட்சியினால் வெறுத்துப் போனவர்களின் வாக்குகளைப் பெறத்தானே, நடுராத்திரி பணம்.
பதிலடி: பீகாரில் ரூபாய் 10 ஆயிரம் கொடுத்தது பட்டப் பகலிலா? பலே “கெட்டிக்காரர்கள்?’
* * * * *
கேள்வி (13): சீமானின் செயல்பாடுகள் எப்பொழுதும் வித்தியாசமாக இருக்க என்ன காரணம்?
பதில்: தமிழகம் ஈ.வெ.ரா. கருத்துகளுக்கு ஏற்பு இல்லை என்று புரிந்து கொண்ட அவர், தமிழகம் ஈ.வெ.ரா. மண் அல்ல, ஈ.வெ.ரா.தான் மண் என்று கூறியதால் வித்தியாசமானவர் சீமான். தமிழ் விரோதிகள் என்று தி.மு.க. பழித்த பிராமணர்கள் தான். தமிழை வளர்த்தார்கள் என்று புரிந்து கொண்டதாலும் வித்தியாசமானவர் அவர்.
பதிலடி: விபீஷணர்களுக்கு ஆழ்வார் பட்டம் கொடுத்த கூட்டமாயிற்றே!
குறிப்பு: ‘துக்ளக்’ கேள்வி பதில் பகுதியில் முஸ்லீம், கிறித்தவர் என்று 8 இடங்களில் சுட்டிக் காட்டி தங்களின் பாப்பன மதவெறியைக் கொட்டித் தீர்க்கப்பட்டுள்ளது.
