கேள்வி 1 : வயது அதிகமானபின் மறதி நோயுள்ள ஒருவர் பெரிய அளவில் சாதிக்க முடியுமா?
-ஓவியன், சென்னை-106
பதில் 1 : வயது அதிகமானால் மறதி ஏற்படுவது தவிர்க்க இயலாதது, இயல்பானதுதான்! ஆனால், மன உறுதியுடன் செயல்படும் எவராலும் – எந்நிலையிலும் சாதிக்க முடியும். மனமிருந்தால், உறுதியான இலக்கு நிர்ணயித்து உழைத்தால், உழைப்பின் வாரா வெற்றிகள் உளவோ!
—
கேள்வி 2 : வளரிளம் பருவ (ஆன்மிகத்தில் நாட்டமுள்ள) மாணவர்களிடம் பெரியாரின் கருத்துகளை புரிய வைக்கப் பொதுவாக எவ்வழியைப் பின்பற்றவேண்டும்?
– கே.பாண்டுரங்கன், பழனி
பதில் 2 : அவர்களை ஈர்க்கும் வகையில் பரப்புரையை நேருக்கு நேர் – கலந்துரையாடல் போன்று நடத்தினால் நல்ல மாற்றத்தை அவர்களுக்குள் உருவாக்கும்!
—
கேள்வி 3 : நங்கநல்லூர் – மூவரசம்பட்டு பஞ்சாயத்துக் குளத்தில் கடவுளர் சிலையைக் முக்கி எடுக்கும் ‘தீர்த்தவாரி’ என்ற நிகழ்ச்சியில் 5 இளம் வயது அர்ச்சகர்கள் உயிரிழந்துள்ளதுபோன்ற நிகழ்வுகளை இனியும் நடக்காமல் தடுப்பது யார் பொறுப்பு?
-விஜயகுமார், செய்யாறு
பதில் 3 : அக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்படியான கோயில் அல்ல; தீர்த்தவாரி நடத்த அத்துறையின் அனுமதியும் பெறப்படவில்லையே!
—
கேள்வி 4 : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதானி விவகாரத்தை மூடி மறைப்பதற்காக ஆளுங்கட்சியாலேயே தொடர்ந்து முடக்கப்படுவது ஜனநாயகக் கோட்பாட்டை சிதைக்காதா?
– ஆதித்தமல்லன், மடிப்பாக்கம்
பதில் 4 : இதுவரை மக்களவையில் துணை சபாநாயகரே இல்லையே, அதுவே ஜனநாயகமா? புரியவில்லை!
—
கேள்வி 5 : ”மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள இன்றைய தி.மு.க. ஆட்சியைவிட, முன்பிருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியே மேலானது” என்று சிலர் கூறுகிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
– கே.சுந்தரம், திருநெல்வேலி
பதில் 5 : திருந்தாத ஜென்மங்கள் – இன்னமும் இருக்கத்தானே செய்கின்றன!
—
கேள்வி 6 : ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது ஏதோ சாதாரண நிகழ்வுபோன்று ஆகிவிட்டதே, பெரிய அளவிற்குக் கண்டனங்களோ, எதிர்ப்புகளோ இல்லையே, ஏன்?
– இரா.இராஜூ, வடலூர்
பதில் 6 : காங்கிரஸ் இதற்குரிய கண்டனத்தை பெரியதாக நடத்திட போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய காரணம். கட்சியில் கோஷ்டிச் சண்டைகளே மூலகாரணம்!
—
கேள்வி 7 : வயதானவர்களை அவர்களது பிள்ளைகள் சரி வர பராமரிப்பதில்லையே, ஏன்?
– கே.சுந்தரமூர்த்தி, திருநெல்வேலி
பதில் 7 : ‘மக்கள் தந்தைக்கு ஆற்றும் உதவி’ இதுதான் இந்த யுகத்தில் போலும்! ‘நன்றி கெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா’ பாட்டொலிதான் ஒலிக்கின்றது.
—
கேள்வி 8 : பிரதமர் மோடியின் வருகையால், தமிழ்நாட்டில் அரசியல் (கூட்டணி) மாற்றம் ஏற்படுமா?
– ச.சங்கர், செங்கல்பட்டு
பதில் 8 : ஒருபோதும் ஏற்படாது; புளிச்ச மாவுதான்!
—
கேள்வி 9: சிறையில் கைதிகள் மரணம் தொடர்ந்து நடைபெறுவது, ஆட்சியாளர்களுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்தாதா?
– ச.சரண்யா, சத்தியவேடு
பதில் 9 : நிச்சயம் ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனம் இத்துறையில் மிக முக்கியம்!
—
கேள்வி 10 : அ.தி.மு.க.வில் மேலும் ஒன்றரை கோடி உறுப்பினர்களை சேர்ப்பதாகச் சொல்கிறார்களே?
– வே.காசி, வந்தவாசி
பதில் 10 : எந்த அ.தி.மு.க.வில்…? இ.பி.எஸ். அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அ.தி.மு.க., மற்ற பிரிவுகளா? பா.ஜ.க. நீங்கிய அ.தி.மு.க. குழுவா? புரியவில்லை! கூட்டம் சேரலாம், கொள்கை என்ன?