சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் மாநில உரிமைகளையும் தமிழர்களின் சுயமரியாதையையும் காப்பதற்கான போர் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணியின் தோல்விகள் குறித்து விரிவாகப் பேசினார்.
ஒற்றை ஆட்சி முறையைத் திணிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு மற்றும் மதவாதக் கொள்கைகளை முறியடிக்க வேண்டியது அவசியம் என்று எழிலன் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ‘நம்பர் ஒன் ஸ்டேட்’ ஆக வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் ‘திராவிட இன்ஜின்’ தான் என்றும், பா.ஜ.க. கூறும் ‘டபுள் இன்ஜின்’ இங்கு எடுபடாது என்றும் விமர்சித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய அவர்: 2019 முதல் இதுவரை 10-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அவர் அறிவித்த பல வாக் குறுதிகள் (புயல் நிவாரணம் போன்றவை) நிறைவேற்றப் படவில்லை. மகளிர் உரிமைத் தொகை சாத்தியமில்லை என்று எடப்பாடி கூறிய நிலையில், இன்று 1.18 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணியில் விரிசல் இருப்பதாகக் கூறப்படும் வதந்திகளை எழிலன் திட்டவட்டமாக மறுத்தார்.
“எங்கள் கூட்டணியில் இருப்பது ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மை அல்ல, அது சகோதரத்துவ மனப் பான்மை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது என்ற ஒற்றை இலக்கோடு காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க., தே.மு.தி.க. என அனைவரும் சுமுகமாகத் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளோம்.”
தி.மு.க. 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் 85%-க்கும் அதிகமானவற்றை நிறைவேற்றி யுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மற்றும் சிலிண்டர் மானியம் போன்ற மீதமுள்ள வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தாமதமாகின்றன. ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தத் தடைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க.வின் புதிய தேர்தல் அறிக்கை மக்களிடம் கருத்து கேட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு ‘மாபெரும் டிரெய்லராக’ அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
