“அறிஞர் அண்ணாவின் உயில் (கடைசி) கடிதம்” என்ற 24 பக்கங்கள் கொண்ட சிறு நூலினை, அண்ணா மறைந்த பிப்ரவரி திங்களில் (2026) திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
அறிஞர் அண்ணா அவர்கள் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து நூலின் முதல் பக்கத்தில் இடம்பெற்று நம்மை மகிழ்விக்கிறது.
1969 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்காக தன் தம்பிமார்களுக்கு. காஞ்சி (12.01.1969) இதழில் எழுதிய அந்த – வாழ்த்து கடிதமே, அண்ணாவின் மரண சாசனமாக, இறுதிக் கடிதமாக அமைந்துவிட்டது!
முதல் வரியில் தொடங்கி, இறுதி வரியில் நிறைவு பெறும் இந்த கடிதத்தை படிக்கும்போது, அண்ணாவே நம்மிடம் பேசும் உணர்வினை நாம் பெறுகிறோம்!
முதலமைச்சர் பதவியை சூழ்நிலைக் கைதியாக எண்ணியது, மாநிலங்கள் அதிக அதிகாரம் பெறத்தக்க விதத்தில் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. தொழிலும் பொருளாதாரமும் ஒரு சிலரின் ஏகபோகமாகக் கிடப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்று பாடுபடுவது. ஒரு நிமிடம் கூட காலத்தை வீணாக்காமல் பணி தொடர்வது, கை வலியோடு ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதுவது கூட தனியானதோர் சுவை தருகிறது என குறிப்பிடுவது முதலான ‘அண்ணா வின் உணர்ச்சிமிகு வரிகள் நம்மை நெகிழச் செய்கின்றன. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், அண்ணாவின் பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சிலையை திறந்து வைத்து, முதலமைச்சர் அண்ணா ஆற்றிய (இறுதி) உரை நூலின் நிறைவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
இந்நூல் அண்ணாவின் இறுதி உரையும். எழுத்தும் இடம்பெற்றுள்ள நம்மை மகிழ்விக்கின்றது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் நிற்கும் நம் தோழர்களுக்கு இந்நூல் புத்தெழுச்சியை ஊட்டும் என்பது உறுதி! உரிய நேரத்தில் நூலை வெளியிட்ட திராவிடர் கழகத்திற்கு நம் பாராட்டுக்கள்!
– ஆ.வந்தியத்தேவன்,
கொள்கை விளக்கச் செயலாளர் ம.தி.மு.க.
நூல் பெற: பெரியார் திடல், 84/1, (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை 600 007:
தொலைபேசி எண்: 044 – 2661 8163; விலை: ரூ.25/-
