அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு வீர வணக்கம்!

5 Min Read

இன்று அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாள் (28.3.1949)

தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் – ஆரிய ஆதிக்க வருணாசிரம பெரு நோயால் பாதிக்கப்பட்டுக்கிடந்த தமிழ் மண்ணைப் புரட்டிப் போட்ட சமூகப் புரட்சி இயக்கம்.

சுயமரியாதை என்பது தந்தை பெரியாரின் குருதியோடு கலந்த உணர்வு!

அரசியல் கட்சியான காங்கிரசில் சேருவதற்கு முன்பாகவே  அந்த உணர்வுதான் தந்தை பெரியாரை ஈரோடு அடையாளம் காண்பதற்குக் காரணமாக இருந்தது.

காங்கிரசில் அவர் இருந்தபோதும்கூட, அந்த சுயமரியாதை உணர்வுதான் அவ்வப்போது போர்க் கொடியை உயர்த்துவதற்கு உந்து சக்தியாக இருந்தது.

காங்கிரசில் இருந்தபோது சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்ததற்கும், ஒரு கட்டத்தில் அந்தக் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் காரணம் அதுவாகவே இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டே பிறப்பால் பேதம் கற்பிக்கப்பட்ட சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தை நடத்துவதற்கும் அந்தச் சுயமரியாதை உணர்வுதான் உந்து சக்தியாக இருந்தது.

சென்னை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரை, அண்டை மாநிலமான கேரள மண்ணுக்குச் சென்று, வைக்கத்தில் தலை விரித்தாடிய தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வெஞ்சமர் புரிந்துவெற்றிக் கொடி நாட்டியதற்குக் காரணமாக இருந்ததும் அந்த சுயமரியாதை உணர்வே!

பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்த குரல் கொடுத்ததும், அதில், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியதற்கும் அடிப்படை உணர்வின் மறு பெயர்தான் ‘சுயமரியாதை!’ சுயமரியாதை என்று சொல்லும்போது – ‘பகுத்தறிவுச் சிந்தனை’ என்பதும் – அதன் தொப்புள் கொடியாம் ‘இரட்டைக் கிளவி’யாகும் (ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை).

தன்னால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புக்குச் ‘‘சுயமரியாதை இயக்கம்’’ என்று தந்தை பெரியார் பெயர் சூட்டியதில் ஆச்சரியம் எதுவாக இருக்க முடியும்?

சுயமரியாதை இயக்கத்தில் சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்கள்தான் ‘ஆட்சிப் பீடங்களில் ஏறியோர் எதைச் செய்ய வேண்டும்’ என்பதற்கான ஏணிப்படிகளை அமைத்துக் கொடுத்தன.

அத்தகைய சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, பிரச்சாரக் கூட்டங்களை நடத்திய தொடக்கக் கால கட்டத்தில் கிடைத்ததெல்லாம் எதிர்ப்புகள்! எதிர்ப்புகள்!! எதிர்ப்புகள்தாம்!!!

‘‘எந்த ஒரு நியாயமான உரிமைகளைப் பெறுவதாக இருந்தாலும், அதற்கான கஷ்ட – நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆக வேண்டும்’’ என்பார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்! அந்த வகையில் தான் எந்தவிதமான எதிர்ப்புகளாயிருந்தாலும் புன்முறுவலோடு எதிர் கொண்டவர் தந்தை பெரியார்.

அந்த சுயமரியாதை சமூகப் புரட்சிப்போரில் தந்தை பெரியாருக்குக் கிடைத்த தளபதிகள் பற்பலர் – பற்பல திறமையானவர்கள்!

அதில் குறிப்பிடத்தக்க அரிமாதான் பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி! ‘அஞ்சா நெஞ்சன்’ என்ற அடைமொழி அவருக்குத் தானாக வந்து சேர்ந்த பெருமைக்குரிய போர் வாளாகும்.

இராணுவத்தில் பணியாற்றிய அந்தப் பாங்கு சுயமரியாதை இயக்கத்திலும் எதிரொலித்தது.

எந்த ஒரு சூழலிலும் தாம் தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியாரிடம் மாறுபாடு, வேறுபட்ட சிந்தனை என்ற பேச்சுக்கே இடமில்லை – அதில் அவர் யாரும் நெருங்க முடியாத எரிமலையாக இருந்தார்!

தந்தை பெரியார் 1938களில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியபோது – அதற்குச் சேனாதிபதியாக இருந்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி.

திருச்சியிலிருந்து சென்னைக்கு – ஹிந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பீரங்கியை ஒலித்துக் கொண்டு ‘‘தமிழர் பெரும் படை’’ ஒன்று 1938 ஆகஸ்டு 1 அன்று புறப்பட்டது.

42 நாட்கள், 577 மைல்கள், 87 பொதுக் கூட்டங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்தப் பெரும்படையின் தலைவர் தஞ்சை  அய்.குமாரசாமிப் பிள்ளை என்றால், அதன் சேனாதிபதி அஞ்சா நெஞ்சன் அழகிரியைத் தவிர வேறு யார்தான் இருக்க முடியும்?

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெருஞ்சோற்றுத் தலைவி! (நூறு பேர் கொண்ட அந்தப் படையில் ஒரே பெண்மணி இவர் மட்டும்தான்! என்னே சிறப்பு!)

அழகிரி பேசுகிறார் என்றால் ஆர்ப்பரிக்கும் அலை கடலும் அடக்கி வாசிக்கும்! அப்படி ஓர் ஏற்ற இறக்கத்துடன் சிங்கக் கர்ச்சனையாக இருக்கும்! எம்.ஆர். ராதாவுக்கு ‘‘நடிகவேள்’’ என்று பட்டம் கொடுத்தவரும் அஞ்சா நெஞ்சன் அழகிரியே!

அஞ்சா நெஞ்சன் 49 வயதிலேயே மறைந்தார் என்றபோது, தமிழ்நாடே சோகக் கடலில் மூழ்கியது. அந்த நிலையில் அறிஞர் அண்ணா எழுதினார்.

‘‘கல்லடியா? கவலைப்படாதே! சொல்லடியா? சோர்வடையாதே! பகைவரின் படையா? பயப்படாதே! எதிர்க்கட்சியினரா? ஏமாந்து விடாதே! சனாதனமா? சாய்ந்து விடாதே! சதியா? சாகடி! மதமா? அதனை மங்கவை! மாசுகளைத் துடை! மன்பதையின் மாணிக்கமாக விளங்கு! மரியாதையைப் பெறு! சுயமரியாதை பெற்று சுகவாழ்வு வாழ முற்படு! – இது உனது குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று எங்குச் சென்றாலும் எக்காளமிட்டு, மூலை முடுக்கெல்லாம் முரசொலி கிளப்பித் தன்மான இயக்கத்தின் முன்னணித் தலைவனாக விளங்கி அஞ்சாநெஞ்சுடன் அறிவுப் பணி புரிந்து வந்த அழகிரிசாமியே நீயா மறைந்தாய்?’’ என்று அறிஞர் அண்ணா எழுதிய எழுத்துகள் ஒவ்வொன்றும் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஒவ்வொரு அணுவையும் படம் பிடித்துக்காட்டும் பாங்கான நடைவீச்சு!

1955ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று (அஞ்சாநெஞ்சன் அழகிரியின் 6ஆம் ஆண்டு நினைவுநாள்) தஞ்சாவூர் சென்ற தந்தை பெரியார், அழகிரியின் நினைவிடத்தில் தோழர்களுடன் மரியாதை செய்யச் சென்றபோது, அந்த புதைக்காடு – சுடுகாட்டில் ஒரு கல் வெட்டு அவர் கண்களில் பட்டது.

‘சூத்திரர்கள் இடம்!’ என்று பொறிக்கப்பட்ட கல் வெட்டுதான் அது! சுடுகாட்டிலும் பிராமண – சூத்திரப் பிரிவா? சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியாரின் குருதி கொதிப்பேறியது. பக்கத்தில் நீதிக்கட்சித் தலைவராக இருந்து மறைந்த நெடும்பலம் சாமியப்ப முதலியாரை  அடக்கம் செய்தஇடத்தில்  இருந்த நினைவுத் தூணையும் பார்த்தார் தந்தை பெரியார்!

அடுத்த ஒரு சில நாட்களில், ‘விடுதலை’யில் தந்தை பெரியாரின் கண்டன அறிக்கை (5.4.1955)  வெளி வந்தது; அதுமட்டுமல்ல, துணைத் தலையங்கமும் வெளி வந்தது. அவ்வளவுதான் நகராட்சியே முன் வந்து அந்தப் பிறவிப் பேத இழிவுக் கல்வெட்டைத் தூக்கி எறிந்தது.

அந்த நினைவிடங்களையும் கழகத்தினர் சீர் செய்து, செப்பனிட்டு பொலிவாக்கியுள்ளனர்.

இன்று (28.3.2026) கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்துகிறார். மாலையில் ‘பட்டுக்கோட்டை அழகிரி’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பட்டுக்கோட்டையில் ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி–  நினைவுச் சொற்பொழிவை’ ஆற்றுகிறார்.

தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று அழகிரி நினைவைப் போற்றும் வகையில் சுயமரியாதைக் கொள்கை முழக்கக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆம்! அஞ்சா நெஞ்சன் மறையவில்லை – சுயமரியாதை உணர்வாய் மக்கள் மனதில் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார்.

மதவாதம் தமிழ் மண்ணில் பாதம் பதிக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், அவர்தம் தளகர்த்தர்களும், தொண்டர்களும்தான்.

வாழ்க அஞ்சா நெஞ்சன்!

வாழ்க சுயமரியாதை!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *