இளைஞர்கள் முதியோரானால், ‘வயதாகிவிட்டது’ என்று நாம் அவர்களைச் சொல்வோம்;
ஆனால், அய்யா அவர்கள், ‘முன்னாள் வாலிபர்கள்’ என்பார்!
வாலிபம் என்பது, வயதைப் பொறுத்ததல்ல, உணர்வை பொறுத்தது! –தந்தை பெரியார்
சென்னை, மார்ச் 28 இளைஞர்கள் எல்லாம், முதியோர் ஆகிவிட்டார்கள். வயதாகிவிட்டது என்று நாம் அவர்களைச் சொல்வோம். ஆனால், அய்யா அவர்கள், ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று அவர்களைச் சொன்னார். முன்னாள் அமைச்சர்கள் என்று சொல்வோம். அதுபோல, ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று சொன்னார். ‘‘வாலிபம் என்பது என்னைப் பொறுத்தவரையில், வயதைப் பொறுத்ததல்ல. உணர்வை பொறுத்தது’’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை எடு்த்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘திருக்குறள் பேரவை’’
22.3.2026 அன்று மாலை சென்னை குரோம் பேட்டையில், திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற மார்ச் மாதக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு ரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘திருக்குறள் தொண்டு’ என்று சொன்னால், அது உண்மையான சமுதாய தொண்டு!
குரோம்பேட்டை பகுதியில். மிக சிறப்பாக. கடந்த 29 ஆண்டுகளாக, ஓராண்டல்ல, ஈராண்டல்ல, இரு பத்தி ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கக்கூடிய திருக்குறள் பேரவை என்ற மிக முக்கியமான ஓர் அறிவுச் சுரங்கத்தை, ஒவ்வொரு நாளும் அறிவு ஊற்றான திருக்குறளைப் பற்றி இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பல தலைமுறைகளுக்கு, இளந்தலைமுறையில் இருந்து, வயதானவர்கள், முதியோர்கள் வரையில் எல்லோருக்கும் எடுத்துச் சொல்லக்கூடிய ஓர் அற்புதமான ‘திருக்குறள் தொண்டு’ என்றால், அது உண்மையான சமுதாய தொண்டு என்று அதற்குப் பொருள். அப்படிப்பட்ட ஒரு பெரிய சமூகத் தொண்டினை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய அற்புதமான பொறுப்பாளர்களான அருமை அய்யா தெ.பொ.இளங்கோவன் அவர்கள், சிறப்பான வகையில் இதனைத் துவக்கி, நிறுவனத் தலைவராக இருக்கக்கூடியவர், என்றைக்கும் எங்கள் பெரியார் திடலோடு இருக்கக்கூடியவர். எங்கள் உறவுக்காரர்; உறவு என்பது குருதி உறவு மட்டுமல்ல, கொள்கை உறவு அதைவிட பலமான உறவு. அப்படிப்பட்ட அவர்கள் ஒவ்வொரு முறையும், புதுமைத் தென்றலாக இருந்தாலும், பெரியார் நூலக வாசகர் வட்டமாக இருந்தாலும், அவர்களுடைய உழைப்பு, கருத்து இவற்றினுடைய பெருக்கம் – இவர்களையெல்லாம் எங்களால் என்றைக்கும் மறக்க முடியாது.
எனவே, அவர்கள் அழைத்தார்கள், அவர்களைப் பார்க்க வேண்டும், வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும். அவரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் எங்களைப் போன்றவர்கள், எவ்வளவு பணிகள் இருந்தாலும் கூட இங்கே வந்திருக்கிறோம்.
இன்றைய இளைய தலைமுறைக்குத்
தெரிய வாய்ப்பில்லை!
இது தேர்தல் காலம். தேர்தல் காலத்திலே கூட மிக முக்கியமான பல நிபந்தனைகள் உண்டு. அவை யெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கும் போது, எந்தத் தொந்தரவும் இல்லாமல், இந்தப் பாடசாலையிலே இந்நிகழ்வு அற்புதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்பப் பாடசாலையாக தொடங்கப் பெற்று ஒரு பெரிய அளவில் வளர்ந்தது. இதனுடைய வரலாறு எங்களுக்குத் தெரியும். இது தொடக்கத்தில் இருந்த காலத்திலிருந்து, பலமுறை இங்கே வந்திருக்கக்கூடிய வாய்ப்பையும் பெற்றோம் என்பது இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை.
திருக்குறள் பேரவையின் நிறுவன தலைவர் அய்யா தெ.பொ.இளங்கோவன்
இங்கே எங்களை அழைத்த உடனே, இங்கே பேசுவது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அவர்களைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும். வணக்கம் தெரிவிக்க வேண்டும்; ஏனென்றால், அவர்கள் பெரியார் திடலுக்கு வராவிட்டாலும், பெரியார் திடல் அவரிடம் வரும் என்பதற்கு அடையாளமாகத்தான், நாங்கள் எல்லோரும் இங்கே வந்திருக்கிறோம். அப்படிப்பட்ட திருக்குறள் பேரவையினுடைய நிறுவன தலைவர் அய்யா தெ.பொ.இளங்கோவன் அவர்களே.
அவர்கள் புதுமை இலக்கியத் தென்றலில், அறுபது அதிகாரத்துக்கு மேல் தொடர்ந்து பேசினார். இன்னமும் அவர்களுக்குப் பேசக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. நடப்பது, அமர்வது என்பதைப் பொறுத்து தான். இன்றைக்கு நான் கூட அவரிடம் கேட்டேன், ‘‘அய்யா நீண்ட நேரம் நீங்கள் அமர்ந்திருப்பது உங்களுக்குத் தொந்தரவாக இருந்தால், நீங்கள் போகலாம்’’ என்றேன்.
‘‘இல்லை, இல்லை, உங்கள் பேச்சை கேட்க வேண்டும்’’ என்று அவர் சொன்னார்.
நான், பெரியாரின் ஒலிபெருக்கி!
என் பேச்சை நீண்ட நாள்களாகக்கேட்டுக்கொண்டிருக்கிறார். என் பேச்சு என்றால், பெரியாருடைய பேச்சு என்பதுதான் அதற்கு அர்த்தம். நான், பெரியாரின் ஒலிபெருக்கி தானே தவிர, வேறொன்றுமில்லை.
இந்நிகழ்விற்குச் சிறப்பாக வந்திருக்கக்கூடியவர் இந்த நிகழ்ச்சியினுடைய தலைவர் பாராட்டுதலுக்குரிய என்னுடைய பல்கலைக்கழகத் தோழர் புலவர் டாக்டர் பாண்டியன் அவர்கள்.
இங்கே அவர் உரையாற்றும்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நினைவூட்டி, அவர் பேசிக்கொண்டே இருந்தார். வன்னியர் வளர்ச்சி கழகத்தில் இருந்து, பச்சையப்பன் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கின்ற தெருவில், ஒரு கண்டிப்பான ஆசிரியர் இருந்தார் அங்கே. திருவேங்கட நயினார் என்று அவருக்குப் பெயர். அய்யாவுக்கு மிகவும் வேண்டியவர். தலைமை ஆசிரியர். அதே மாதிரி நம்முடைய அய்யா ஸ்கவுட் மாஸ்டர் ராமசாமி அவர்கள்.
‘‘அந்த நாள் ஞாபகம் வந்ததே,
நண்பனே, நண்பனே!’’
அதிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தலைமைப் பொறியாளர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். ஓர் எளிய முறையிலே இருந்து பல்கலைக்கழகத்தில் வந்த நண்பர்களையெல்லாம் பார்த்து, அவர்கள் பழைய செய்திகளையெல்லாம் சொல்லும்போது, ‘‘அந்த நாள் ஞாபகம் வந்ததே, நண்பனே, நண்பனே’’ என்று சினிமாவில் பாடுவது மாதிரி, அந்த பாட்டைக் கேட்பது மாதிரி, ஓர் அரிய வாய்ப்பு.
வள்ளுவனையே உலகிற்குத் தந்தவர்
நம்முடைய அய்யா சந்தோஷம்!
ஒரு குடும்ப விழா மாதிரி இது மிகத் தெளிவாக நடைபெறுகின்ற ஒரு நல்ல வாய்ப்பு. இதில் வரவேற்புரையாற்றிய முனைவர் அய்யா. இலக்கியத் தென்றல் எம்.அல்போன்ஸ் அய்யா அவர்களே, அமைப்பின் பொருளாளர் ரவி இளங்கோவன் அவர்களே, உலக தமிழ்ச் சங்கத் தலைவரும், ‘‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்று பாரதி சொன்னதுபோல. வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்தது என்ற குறளைச் சொன்னார். ஆனால் வள்ளுவனையே உலகிற்குத் தந்தவர் நம்முடைய அய்யா சந்தோஷம் அவர்கள்.
பொதுவாக அவர் பெயரை உச்சரித்தாலே துன்பமெல்லாம் போய்விடும். ஏனென்றால், எல்லோரும் விரும்புவது சந்தோஷம் தான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
பொதுத் தொண்டு என்று சொன்னால்
எப்படி இருக்க வேண்டும்?
ஆகவே, அப்படிப்பட்ட அய்யா அவர்கள், அவரு டைய உடல்நலத்தைப்பற்றிக் கவலைப்படாமல், எல்லாம் முதியவர்கள். அவர்கள் வாழ்க்கையில் சரியாக நடக்கக்கூடியவர்கள். ஆனால், நடையில் கொஞ்சம் தள்ளாடக்கூடிய அளவிற்கெல்லாம், வயது முதுமையின் காரணமாக இருக்கக்கூடியவர்கள் என்றாலும், உங்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பை எண்ணி, இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அய்யா, அவர்கள் எந்த நிகழ்ச்சியையும் தவறவிட மாட்டார். எல்லா நிகழ்ச்சிக்கும், யாராவது ஓர் அழைப்பைக் கொடுத்துவிட்டால்கூட, அந்த அழைப்பை அவர் நினைவில் வைத்துக்கொண்டு, உடனடியாக அங்கே போய், அவர்களை வாழ்த்துவதோ அல்லது அவர்க ளுக்கு அறிவுரை கூறுவதோ, அதை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு ‘ரோல் மாடல்’ மாதிரி. பொதுத் தொண்டு என்று சொன்னால் எப்படி இருக்க வேண்டும்? சமூக வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்ட அருமை அய்யா டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களே,
யாழ், பண்பாட்டு அடிப்படையில் வீணையாகிவிட்டது!
காப்பியல் புலவர் வெற்றிவேல் அவர்களே, தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் அவர்களே, அதேபோல சான்றோர் பெருமக்களே. ஒவ்வொரு வரையும் தனித்தனியாக அழைக்கலாம். எல்லாரும் ஒரு முத்திரைப் பதித்த முதியவர்கள். ஒரு பக்கத்தைப் பார்த்தால் ‘சீனியர் சிட்டிசன்ஸ்’ – முதுகுடி மக்களுடைய ஒரு பகுதி மாதிரி இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்த்தால் நடுத்தர வயதினராக இருக்கிறார்கள். ஆனால், இங்கே வந்து குறளை படித்தார்களே, நம்முடைய பிள்ளைகள், அது மிகவும் சிறப்பானதாகும். ‘மழலைச் சொல் கேளாதார்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ‘‘குழல் இனிது, யாழினிது’’ என்று சொல்வார்கள். யாழைக் காணவில்லை. ஆனால், குழல் இருக்கிறது. ஏனென்றால், யாழ், பண்பாட்டு அடிப்படையில் வீணையாகிவிட்டது. ஏன், யாழ் மறைந்து வீணை வந்துவிட்டது? என்பதே பெரிய பண்பாட்டுப் படை யெடுப்பில் ஓர் ஆய்வுக்குரிய ஒரு பெரிய செய்தி.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே. தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன் அவர்களே, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டு அவர்களே, முதுபெரும் பெரியார் தொண்டர் ஆர்.டி.வீரபத்திரன் அவர்களே, முனைவர் க.அன்பழகன் அவர்களே, தங்கமணி தனலட்சுமி அவர்களே மற்றும் ஏராளமாக இருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, சான்றோர்களே, நண்பர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
திருக்குறள் பேரவையின் சார்பில், 29 ஆண்டுகளாக ஓர் அமைப்பை மாதம் தவறாமல் நடத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அமைப்புகளை எல்லோரும் தொடங்குவார்கள். ஆனால், தொடர்கிறது பாருங்கள், அது மிக முக்கியம். தொடங்குவது வேறு, தொடர்வது வேறு. இதுதான் மிக முக்கியம். தொடங்குவது எளிது. தொடர்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அவர்கள் 29 ஆண்டுகள் என்று சொன்னால், முறுக்கு நிறைந்த வாலிபம் மாதிரி. அமைப்புக்கு வாலிபம் இருக்கிறது. ஆனால், அமைத்தவர்களுக்கு வாலிபம் என்பது உணர்வில் இருக்கிறது. வயதில் இல்லை. அவ்வளவு தானே தவிர, வாலிபம் போய்விட்டது என்று, நாம் சொல்லி, நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
வயதானவர்கள் அல்ல; ‘முன்னாள் வாலிபர்கள்’
– தந்தை பெரியார்!
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், சுயமரியாதை இயக்கத்தை பற்றி எழுதும் போது, அய்யா அவர்கள் ஒரு சொற்றொடரை பயன்படுத்தினார். அது என்னவென்றால், இளை ஞர்கள் எல்லாம், முதியோர் ஆகிவிட்டார்கள். வயதாகிவிட்டது என்று நாம் அவர்களைச் சொல்வோம். ஆனால், அய்யா அவர்கள் என்ன சொன்னார் என்றால், ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று சொன்னார். முன்னாள் அமைச்சர்கள் என்று சொல்வோம். அதுபோல, ‘‘முன்னாள் வாலிபர்கள்’’ என்று சொன்னார்.
வாலிபம் என்பது வயதைப் பொறுத்ததல்ல; உணர்வைப் பொறுத்தது!
அது மாதிரி முன்னாள் வாலிபர்களாக இருக்கக்கூடி யவர்கள், அப்படிப்பட்டவர்களெல்லாம் இன்றைக்கு இந்த விழாவில் இருக்கிறார்கள். அடுத்த வரியில் அய்யா சொன்னார், ‘‘வாலிபம் என்பது என்னைப் பொறுத்தவரையில் அது வயதைப் பொறுத்ததல்ல. உணர்வை பொறுத்தது’’ என்று சொன்னார்.
ஆகவே, இருபத்தி அய்ந்து வயது இளைஞன், 75 வயதுக்குரியவர் போன்று அசந்து போயிருந்தார் என்றால், அவர் வாலிபராக இருக்க முடியாது. அதே சமயம், 75 வயது உள்ளவருக்கு 25 வயதுள்ளவரின் உணர்வு இருக்குமேயானால், அவர் தான் வாலிபர். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு சூழ்நிலையில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவில், சில கருத்துகளைச் சொல்லவிருக்கிறேன். நான் ஒரு பெரியார் தொண்டன்; அதே மாதிரி, பலரும் பெரியார் தொண்டர்கள், கருத்தாளர்கள் தான் இங்கே.
‘‘அறிவு விடுதலை இயக்கம்!’’
இப்படிப்பட்ட நிலையில், திருக்குறளைப் பற்றி பேசுவது என்பது அது கரும்பு தின்கிற வேலை மாதிரி, பகுத்தறிவாளர்களான நமக்கு. ஏனென்றால், எத்தனையோ காப்பியங்கள், எவ்வளோ நூல்கள் இருக்கின்றன. இந்த நூலுக்கு என்ன சிறப்பு என்று சொல்லும்போது நண்பர்களே, இது நம்முடைய வாழ்க்கையில் பெற முடியாத ஒரு பேறு, இந்தத் திருக்குறள். திருக்குறள் ஒன்று தான் நமக்கு இருக்கிற இலக்கியத்திலேயே ஆழமான, காலத்தைத் தாண்டி, காலத்தை வென்ற ஓர் இலக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய, வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய வழித்துணை நூல் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்கிற நூல் இதுதான். தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நேரத்தில், ‘சுயமரியாதை இயக்கம் என்பதற்கு வேறொரு பெயர் சொல்லுங்கள்’ என்று கேட்டால், ‘‘அறிவு விடுதலை இயக்கம்’’ என்று சொல்வேன் என்றார்.
(தொடரும்)
