இன்று (28.3.2026) அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாள்! அந்தச் சுயமரியாதைக்காரர் ஊட்டிய உணர்வோடு – நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்!

4 Min Read

தஞ்சை, மார்ச் 28 – பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாளான இன்று (28.3.2026) ‘‘அவர் ஊட்டிய சுயமரியாதை உணர்வோடு, மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை அமைத்திட சூளுரைப்போம்’’ என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (28.3.2026) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சுயமரியாதை இயக்கத்தினுடைய ஆணி வேர்களில் ஒருவராக, தந்தை பெரியார் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து, ஒரு பெரிய சமூகப் புரட்சியை, அமைதிப் புரட்சியை சிறப்பாக உண்டாக்குவதற்குக் காரணம், பழைய தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி என்பது இயக்க வரலாற்றில் மட்டுமல்ல, பொதுத் தொண்டின் வரலாற்றிலும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

சுடுகாட்டிலும் ‘‘சூத்திராளுக்கு’’,
‘‘பிராமணாளுக்கு’’ என்ற பேதம்!

அவருடைய 77 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (28.3.2026)! அவரை அடக்கம் செய்த நினைவிடத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் பலமுறை சென்றிருக்கின்றார். அந்த இடத்தில், 1955 ஆம் ஆண்டில், ‘‘சூத்திராளுக்கு’’, ‘‘பிராமணாளுக்கு’’ என்று பிரித்த நேரத்தில், அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் அவர்கள், தஞ்சை நகராட்சிக்கு ஓர் அறிக்கை எழுதினார். ‘‘இப்படிப்பட்ட பேதம், சுடுகாட்டிலும், இடுகாட்டிலும்கூட இருக்கக்கூடாது, அவற்றை மாற்ற வேண்டும்’’ என்று.

மறைந்த பிறகும் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தையும், சமத்துவத்தையும் செய்கிறார் அழகிரி!

எனவே, வாழ்ந்த காலத்தில் மட்டும்  ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தையும், சமத்துவத்தையும் செய்தவர் அல்ல அழகிரிசாமி அவர்கள். அவர் மறைந்த பிற்பாடுகூட, அவருடைய  நினைவிடத்திலிருந்து ஒரு பெரிய உணர்ச்சியை தந்தை பெரியார் அவர்கள் அறிக்கையை விட்டு வெளிப்படுத்தினார்கள். இது பழைய வரலாறு.

அப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்க ளின் நினைவு நாளை, ஒவ்வொரு ஆண்டும் கொண்டா டினாலும், இந்த ஆண்டு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

அழகிரி காண விரும்பிய
சுயமரியாதை ஆட்சி!

காரணம், இந்த  ஆண்டில்தான், அவர் விரும்பிய மிக முக்கியமான சுயமரியாதை ஆட்சி சிறப்பாக நடந்து, மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளவர்களாலும் பாராட்டப் பெற்று, மீண்டும் அது, அடுத்த முறையும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய திட்டத்தோடு களத்தில் இறங்கக்கூடிய காலகட்டம், இந்த காலகட்டம்!

அழகிரி நினைவு நாளில்
சூளுரை எடுப்போம்!

எனவேதான், அழகிரி போன்றவர்களுடைய உழைப்பும், வேர்வையும், சிந்திய ரத்தமும் வீண் போகவில்லை. அது முழுக்க முழுக்க கொள்கை அறுவடைகளாக வந்திருக்கின்றன. அதுவும் உணர்ச்சிப்பூர்வமாக சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி, உரிமைகள் இவற்றிற்காகப் பாடுபடக்கூடிய ஒரு நல்லாட்சியை உருவாக்குவதற்கு, அழகிரி அவர்க ளுடைய நினைவு நாளில் சூளுரை எடுப்போம் என்பதற்கு அது பயன்படும்.

விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை; நடிகராகவே கருதுகிறோம்!

செய்தியாளர்:   த.வெ.க. தலைவர் விஜய் சென்னை யில் அய்ந்து இடங்களில் பிரச்சாரம் செய்வதற்குத் தடை போடுகிறர்கள். த.வெ.க.வைப் பார்த்து, தி.மு.க. பயந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே, இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அரசியல் புரிந்தவர்களுக்கும், அரசியலில் அரிச்சுவடியைத் தாண்டி, எம்.ஏ., படித்தவர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நான், அரசியல் அரிச்சுவடியை அறியாதவர் சொல்வதற்குப் பதில் சொல்வதில் பயனில்லை.

ஆகவே, அவரை அரசியல்வாதியாக நாங்கள் கருதவில்லை. நடிகராகவே கருதுகிறோம். அரசியல்வாதி களுக்குப் பதில் சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம்.

மீண்டும் கோட்டைக்குப்
போகப் போவது மு.க.ஸ்டாலின் – பாறையில் எழுதப்பட்ட ஒன்று!

செய்தியாளர்: தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது?

தமிழர் தலைவர்: நிச்சயமாக, ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப் பெற்று, மே 5 ஆம் தேதிக்குப் பிறகு, கோட்டைக்குப் போகப் போவது, ‘மீண்டும் ஸ்டாலின்’ என்பதுதான் பாறையில் எழுதப்பட்ட ஒரு சிறப்பான முடிவு.

இது ஆரூடமோ, ஜோசியமோ அல்ல!

மக்கள் மன்றத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய, அனுபவத்தில் முகிழ்த்த ஒன்றாகும்.

முதல் தேர்தலில் இருந்து, இன்றைய தேர்தல் வரையில் பார்த்துக் கொண்டிருக்கின்ற வாய்ப்பைப் பெற்றவன் நான். ஆகவே, ஒவ்வொரு தேர்தலும் எப்படி நடந்திருக்கின்றது, எப்படியெல்லாம் மக்கள் அனுமானிப்பார்கள் என்பதை கண்காணிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

எதிர்க்கட்சிக் கூட்டணி, பல நேரங்களில், பலரிடம் சென்று கதவைத் தட்டி, தட்டி, எந்தக் கதவும் திறக்கப்படவில்லை என்பதே தி.மு.க.வின் வெற்றிக்கு அடிப்படையான காரணமாகும்.

‘எல்லோருக்கும் பங்கு தருகிறோம் வாருங்கள்’ எங்கள் கூட்டணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்; இப்படி ஏலம் போட்டுக்கூட யாரும் வருவதற்கில்லை.

திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று நினைத்து, வடக்கே இருந்து வந்த சிலர், இங்கே இருக்கின்ற சிலரை அடமானப் பொருளாக ஆக்கிய பிறகும்கூட, அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பதை இன்றைக்கு வெளிப்படையாகவே சொல்லி விட்டார்கள்.

எனவேதான், தி.மு.க. கூட்டணியின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. மு.க.ஸ்டாலின் அவர்க ளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தாகிவிட்டது, அவர் நடந்து செல்வது மட்டும்தான் பாக்கி.

11 ஆவது முறையாகச் சொல்கிறார்

செய்தியாளர்: ‘எங்கள் கூட்டணி மெகா கூட்டணி, எங்கள் கூட்டணிதான் வெல்லும்’’ என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறாரே?

தமிழர் தலைவர்: அவர்  இதை 10 முறை சொன்னார்; இப்பொழுது 11 ஆவது முறையாகச் சொல்கிறார்.

கருத்து வேறுபாடுகள்
எதுவும் இல்லை!

செய்தியாளர்: தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. அவைத் தலைவர் ‘சிரித்துக் கொண்டே அழுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறாரே?

மிழர் தலைவர்: சில நேரங்களில், அழுவதும், சிரிப்பதும், சிரித்துக்கொண்டே அழுவதும் வாழ்க்கையி னுடைய இயல்பு. ஆகவேதான், வாழ்க்கையையொட்டி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை.

மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே தமிழ்நாட்டில் அமைத்திட அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவு நாளில் சூளுரைப்போம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *