ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாரே…?

– க.பொய்யாமொழி, கேளம்பாக்கம்

பதில்: சில மாதங்களுக்கு முன்பே, இந்த ஆபத்தையும், பா.ஜ.க.வின் – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் திட்டங்களையும் யூகித்தோம், வருமுன்னர் காக்கும் செறிவான அரசியல் தெளிவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிக் கருத்தறிந்து, ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்தார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்கு வாதாடும் கட்டம் தாண்டிப் போராடும் கட்டம் வந்தாலும் எதிர்கொள்ள என்றும் தமிழ்நாடு போன்ற பாதிக்கப்படும் மாநிலங்கள் ஆயத்தமாக வேண்டும்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாக த.வெ.க. பொறுப்பாளர்கள் மீது வழக்குகள் தொடர்வது நீள்கின்றதே – இதுதான் அக்கட்சித் தலைவர் கூறி வருகின்ற நேர்மைக்கான இலக்கணமா?

– கி.மணிவண்ணன், பாரதி நகர்

பதில்: அது, முறைப்படி – தக்க பயிற்சிக் களத்துடன் கொள்கை வயப்பட்டுள்ள தலைமையோ, தொண்டர்களோ இல்லாத, வெறும் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் நடிகரின் ரசிகர் மன்றம் என்ற அளவிலிருந்து மாறவில்லையே! இன்னும்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: நாடு முழுதும் உள்ள ஆயுதப் படைகளில் பெண்களுக்குப் பாகுபாடு கூடாது, நிரந்தப் பணி, ஓய்வூதியத்தை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பெண்ணினத்தின் வளர்ச்சியைப் பொறுக்காதவர்களுக்குச் சம்மட்டி அடி எனலாமா?

– கே.பார்கவி, பெரும்பாக்கம்

பதில்: இந்த வெற்றி – ஆர்.எஸ்.எஸ். மனப் போக்குள்ள பா.ஜ.க. ஆட்சிக்கு உச்சநீதிமன்றத்தின் சரியான குட்டு மட்டுமல்ல. தந்தை பெரியாருக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பாராட்டும் ஆகும்!

 

கேள்வி: அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய 15 அம்சத் திட்டமும், பதிலுக்கு ஈரான் விதித்துள்ள 5 நிபந்தனைகளும் போரை முடிவுக்குக் கொண்டு வருமா?

– சி.முகிலன், கோடம்பாக்கம்

பதில்: அமெரிக்க அதிபரிடம் எதிர்பார்க்க வேண்டியது முழு மவுனம் – பிறகு நிலைமை தானே சரியாகும் வழி தோன்றலாம். குழப்பங்களை உருவாக்குவதே டிரம்பின் “திருவாசகங்கள்தான்’.

 

கேள்வி: அதிக காலங்களாக உடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் தோழமைக் கட்சிகளை விட புதிதாக இணைந்த ஒரு கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கி இருப்பது சரிதானா?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில்: “குதிரைக்கு குர்ரம் என்பதால் ஆனைக்கு அர்ரம்” என்பது எப்படித் தவறோ அதுபோல சூழ்நிலை – யதார்த்தம்தான் முக்கியம். அரசியலில் நிரந்தர விதிகள் என்று ஏதும் இல்லையே!

 

கேள்வி: உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்பும் கட்சிகளின் விளம்பரப் பதாகைகள் பெரிய அளவில் வைப்பது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வருவது பற்றி…?

– சரவணன், கூடுவாஞ்சேரி

பதில்: தங்கள் கேள்வியை தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குத்தான் கொண்டு செல்ல வேண்டும்!

 

கேள்வி: இந்த முறை 2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நீதிக்குப் புறம்பாக இல்லாமல் நேர்மையாக இருக்குமா?

– கவிமணி, பெங்களூரு

பதில்: பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: தமிழ்நாட்டில் அ.தி.முக. தலைமையில் போட்டியிடும் மாநிலக் கட்சிகள் சில தாமரைச் சின்னத்தில் நிற்பது சரிதானா?

– ச.பாஸ்கர், ஓட்டேரி

பதில்: தங்களை விற்றுக்கொண்ட, தமிழ் மண்ணின் துரோகத்தின் முன்னோடிகள், பதவிக்காக எதையும் இழக்க முன்வரும் பரிதாபத்திற்குரியவர்கள்!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு “தொகுதி வேண்டாம், நிபந்தனையற்ற ஆதரவு” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது?

– ஆ.பிரபாகரன், கள்ளிக்குப்பம்

பதில்: அவரது சுயமரியாதையையும், அதோடு கூட்டணியில் ஏற்படும் இக்கட்டுகளை நன்கு புரிந்து உதவிடும் நல்ல உள்ளத்தையும் காட்டுகிறது!

கேள்வி: மருத்துவர்கள் உணவு செலுத்துவதைப் படிப்படியாகக் குறைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (வயது 31) என்பவரைக் கருணைக்கொலை செய்வதற்குரிய ஒப்புதலை நாட்டில் முதல்முறையாக உச்சநீதிமன்றம் வழங்கியது ஏற்புடையதா?

– எம்.கருணாகரன், அம்பத்தூர்

பதில்: வரவேற்றுப் பாராட்ட வேண்டிய உன்னதப் புரட்சிகரத் தீர்ப்பு – வரும் ‘உண்மை’ இதழைப் படியுங்கள் – முழுமையாகப் பல செய்திகள் – கருணைக் கொலை பற்றி விளங்கும் – நன்கு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *