தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் தொலைநோக்குப் பார்வையுடனும், சமூக நீதி அடிப்படையிலும் உருவாக்கப் படுபவை.
இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் “விடியல் பயணம்” திட்டம். எந்தவித நிபந்தனைகளும் இன்றி, ஏழை எளிய பெண்கள் மற்றும் மாணவிகளின் முன்னேற் றத்திற்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை இன்று பல மாநிலங்கள் காப்பி அடிக்க முயன்று வருகின்றன.
ஆனால், முறையான திட்டமிடல் இன்றி செயல்படுத்தப்படும் இத்தகைய நகல்கள், மக்களுக்குப் பயன் தருவதற்குப் பதிலாக அவதியையே தருகின்றன என்பதற்கு டில்லி அரசின் ‘பிங்க் பஸ்’ திட்டமே சாட்சி!
திறமையின்மை அம்பலமானது!
அண்மையில் டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு புத்திசாலி மாணவி எழுப்பிய கேள்வி, டில்லி அரசின் நிர்வாகத் திறமையின்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு பள்ளி மாணவி “நான் வீட்டிலிருந்து பள்ளிக்கு வர மூன்று பேருந்துகள் மாற வேண்டும். ஆனால், டில்லி அரசின் இலவச அட்டையைப் பயன்படுத்தினால், ஒரு பேருந்தில் இறங்கிய பிறகு அடுத்த பேருந்தில் ஏற ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை உள்ளது.
நான் இப்படி ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் காத்திருந்தால், பள்ளிக்குச் செல்வதற்குள் அரை நாள் முடிந்துவிடுமே? நான் எப்படிப் படிப்பது?” என்று கேட்டார்
எதிர்பாராத இந்த நியாயமான கேள்வியால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் ரேகா குப்தா, பதில் சொல்லத் தெரியாமல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். அதிகாரிகளாலும் அந்த மாணவிக்குச் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை.
திட்டமிடல் இல்லாத ‘காப்பி’ அரசியல்
தமிழ்நாடு அரசின் மகளிர் விடியல் பயணம் திட்டத்தில், பெண்கள் எத்தனை பேருந்துகள் வேண்டு மானாலும் மாறலாம், எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
எந்தவிதமான நேரக் கட்டுப்பாடும் கிடையாது. இதுதான் உண்மையான சமூக நீதி. டில்லி, கருநாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டில்லி அரசின் திட்டத்தில் உள்ள ‘ஒரு மணி நேர இடைவெளி’ என்ற விதிமுறை, உழைக்கும் பெண்களையும் மாணவிகளையும் வஞ்சிப்பதாக உள்ளது.
வேலைக்குச் செல்லும் பெண்களோ அல்லது பள்ளிக்குச் செல்லும் மாணவிகளோ ஒரே பேருந்தில் தங்கள் இலக்கை அடைவது கடினம். அப்படி இருக்கும்போது, அடுத்த பேருந்திற்காக ஒரு மணி நேரம் சாலையோரம் காத்திருக்கச் சொல்வது எவ்வகையில் நியாயம்?
சமூக நீதி Vs தேர்தல் நாடகம்
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவை.
ஆனால், டில்லி அரசு மயிலைக் கண்டு வான்கோழி தோகை விரிப்பது போல, தமிழ்நாடு அரசின் திட்டங்களை மேலோட்டமாகப் பின்பற்றிவிட்டு, நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைப் புகுத்துகின்றன.
சமூகப் பார்வையற்ற இத்தகைய அரைகுறைத் திட்டங்கள் யாருக்கும் பலனளிக்காது. வெறும் விளம்பரத்திற்காகத் திட்டங்களை அறிவிக்காமல், மக்களின் தேவையை உணர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே அது உண்மையான வெற்றியைத் தரும்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தமிழ்நாடு காட்டும் வழி தனித்துவமானது. அதை வெறும் தேர்தல் ஆதாயத்திற்காகப் பின்பற்றுபவர்கள், அந்தத் திட்டத்தின் ஆழமான தோற்றத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், இது போன்ற பள்ளி மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓட வேண்டியதுதான் மிச்சம்!
